tamilnadu

img

5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்புக்கு எதிராக புதுக்கோட்டையில் தனி நபர் உண்ணாவிரதம்

புதுக்கோட்டை, செப்.16- தமிழக அரசின் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பை ரத்து செய்யக் கோரி புதுக்கோட்டையில் பள்ளிப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் செல்வ புதுக்கோட்டையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ‘புதுகை’ செல்வா. இவர், ஸ்டுடியோ வைத்து தொழில் செய்து வருகிறார். பள்ளிப் பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளனர். இவரது மகன் கவுதம், மகள் சங்கமித்திரை ஆகியோர் புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள அரசு உயர் தொடக்கப் பள்ளியில் (நடுநிலை) தமிழ் வழியில் முறையே 6, 2-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.  இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டுமென இவர் தலைமையிலான பள்ளிப் பாதுகாப்பு அமைப்பினர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் அண்மையில் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து பழைய மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே உள்ள அவரது கடையில் கோரிக்கை பேனருடன் திங்கள்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து மாலையில் உடல் நலக் குறைவினால் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதுகை செல்வா சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் உள்ள அவரை அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் அ.மணவாளன், சிபிஎம் நகரக்குழு உறுப்பினர் ஆர்.சோலையப்பன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகரத் தலைவர் எஸ்.விக்கி, செயலாளர் பாபு உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.