சீர்காழி, மே 14-சீர்காழி அருகே எருக்கூர் வடிகால் வாய்க்காலின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே கடுக்காமரம் கிராமத்திலிருந்து பிரதான புதுமண்ணியாறு பாசன வாய்க்காலில் இருந்து எருக்கூர் வடிகால்வாய்க்கால் பிரிந்து எருக்கூர் வழியாகச் சென்று 4 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பிறகு அங்குள்ள பாசன வாய்க்காலில் கலக்கிறது. இந்த வாய்க்கால், பாசன வாய்க்காலாகவும், மழைக் காலங்களில் வடிகால் வாய்க்காலாகவும் இருந்து வருகிறது.கடுக்காமரம், புத்தூர், எருக்கூர், அரசூர், மணலகரம் ஆகிய கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்புக்கு பாசன வசதியையும், வடிகால் வசதியையும் வருடந்தோறும் செய்து தரும் இந்த வாய்க்கால் மீண்டும் கூத்தியம்பேட்டை கிராமத்தில் புதுமண்ணியாறு பாசன வாய்க்காலிலேயே கலக்கிறது. கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தூர்வாரப் படாததால் இந்த வாய்க்கால் முழுவதும் தூர்ந்து போய் அகலம் மற்றும் ஆழம் குறைந்தும் போயுள்ளது.வாய்க்கால் முழுவதும் புதர் மண்டியும் கிடப்பதால் மழை பெய்தால் தண்ணீர் வடிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் தரப்பில் இந்த வாய்க்கால் தூர்வாரப்பட்டதாகவும், லட்சக்கணக்கில் பணம் செலவிடப்பட்டதாகவும் விவசாயிகள் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது. எனவே உடனடியாக வாய்க் காலை தூர்வாரி ஆழப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.