tamilnadu

தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

தஞ்சாவூரில் இன்று 'எசப்பாட்டு' நூல் அறிமுக விழா 


தஞ்சாவூர் ஏப்.26-உலக புத்தக தினத்தையொட்டி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் ஏப்.27 மாலை 6 மணிக்கு நூல் அறிமுக விழா நடைபெறுகிறது. தஞ்சாவூர் ஜுபிடர் திரையரங்கம் அருகில் பெசன்ட் லாட்ஜ் அரங்கில் தமுஎகச கௌரவத் தலைவர், எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய "எசப்பாட்டு" என்ற நூல் அறிமுக விழாவிற்கு என்.சிவகுரு தலைமை ஏற்கிறார். சாகுல் வரவேற்கிறார். அகிலா கிருஷ்ணமூர்த்தி நூலை அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார். நிறைவாக பாரி சிவன் நன்றி கூறுகிறார். இதில் எழுத்தாளர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள், வாசகர்கள் பங்கேற்க உள்ளனர். ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர். மேலும், உலக புத்தக தினத்தையொட்டி விழா அரங்கில் பாரதி புத்தகாலயம் வெளியீடுகள் 25 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையில் வழங்கப்படுகிறது. 


மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி 


தஞ்சாவூர், ஏப்.26-ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வரும் ஏப்.30 அன்று மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு தினமாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்று காலை 9 மணி முதல் மாலை 5 வரை இளநிலை கால்நடை மருத்துவ பட்டப் படிப்பு மற்றும் உணவு தொழில்நுட்ப படிப்புகளை பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்று, கல்லூரியில் உள்ள வசதிகள், விண்ணப்பிக்கும் முறை, வேலைவாய்ப்புகள் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம் என கல்லூரி முதல்வர் தி.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

;