tamilnadu

img

திரிபுராவில் தேர்தல் கேலிக்கூத்தாகிவிட்டது; மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தல்

அகர்தலா, ஏப்ரல் 12-திரிபுராவில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு கேலிக்கூத்தாக நடந்துள்ளது என்றும் நானூறுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மறு தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார். திரிபுரா வந்துள்ள சீத்தாராம் யெச்சூரி இதுதொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:“திரிபுராவில் மேற்கு திரிபுரா நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மிகப்பெரிய அளவிற்கு வாக்குச்சாவடிகளைக்கைப்பற்றும் அக்கிரமம் நடந்துள்ளது. வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றிய பாஜக குண்டர்களுக்கு மத்திய துணைப் பாதுகாப்புப் படையினரும் மாநிலப் போலீசாரும் மாநில நிர்வாகத்தினரும் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.வாக்குச்சாவடி மையங்களிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணி தேர்தல் முகவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள். 


இடதுமுன்னணிக்கு வாக்களிப்பார்கள் என்று கணிக்கப்பட்ட வாக்காளர்களை வாக்களிக்கவிடாமல் விரட்டியடித்துள்ளனர். வாக்குச்சாவடிகளைக் குண்டர்கள் கைப்பற்றியது பொது வெளிக்குதெரியக்கூடாது என்பதற்காக சிசிடிவி கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன.மொத்தம் தேர்தல் நடைபெற்ற 1,679 வாக்குச்சாவடிகளில் 460 வாக்குச்சாவடிகளில் மோசடி நடந்துள்ளது. தேர்தல் ஆணையம் திரிபுரா மாநிலத்தில் நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்திட எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை. பாஜக குண்டர்களால் கைப்பற்றப்பட்ட வாக்குச்சாவடிகளில் மீண்டும் தேர்தல் நடத்திட வேண்டும்.இதுதொடர்பாக நான் தில்லி சென்றபின்னர் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்திக்கவிருக்கிறேன்.”இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார். அப்போது சிபிஎம் வேட்பாளர் சங்கர் பிரசாத் தத்தா, சிபிஎம் மாநில செயலாளர் கவுதம் தாஸ் உடனிருந்தார்கள்.இதேபோன்று காங்கிரஸ் கட்சியும் பாஜகவின் மீது குற்றம்சாட்டியுள்ளது.திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் மாலை 5 மணிவரையிலும் 81.23 சதவீதத்தினர் வாக்களித்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

(ந.நி.)

;