politics

img

திரிபுராவில் பாஜக குண்டர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டம்.... பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் சீத்தாராம் யெச்சூரி அளித்துள்ள விரிவான விபரம்....

 1  உதய்பூர் நகரத்தில் செப்டம்பர் 8அன்று இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம் ‘எனது வேலை எங்கே’ என்ற முழக்கத்தின் அடிப்படையில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட போராட்ட நிகழ்வை நடத்த இருந்தது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அனுதியும் பெற்றிருந்தது. ஆனால் திடீரென முந்தைய நாள் இப்போராட்டத்தை ரத்து செய்யுமாறு வாலிபர் சங்க நிர்வாகிகளிடம் காவல் துறையினர் நிர்ப்பந்தித்துள்ளனர். ஆனால் போராட்ட நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று வாலிபர் சங்கத்தினர் கூறியுள்ளனர். அதன்படி செப்டம்பர் 8 அன்று வாலிபர் சங்க நிகழ்வுக்கு பலரும் வரத்துவங்கியபோது அவர்களை வழியிலேயே தடுத்தி நிறுத்தி பாஜக குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதே வேளையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதய்பூர் சப்டிவிசனல் கமிட்டி அலுவலகத்திற்குள் புகுந்த பாஜக குண்டர்கள் செங்கற்களாலும் கற்கலாலும் தாக்கியுள்ளனர். அதே நேரத்தில் கோமதி மாவட்டக்குழு அலுவலகத்திற்குள்ளும் நுழைந்து அடித்து நொறுக்கியுள்ளனர். அங்கிருந்த கட்சி கார் மற்றும் இதர வாகனங்களை கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர். 

2 விசால்கர் நகரில் பாஜக குண்டர்கள் பகிரங்கமாக ஆயுதங்களை ஏந்தியவாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஷேப்பாகிஜலா மாவட்டக்குழு அலுவலகத்தையும் விசால்கர் சப்டிவிசனல்கமிட்டி அலுவலகத்தையும் கடுமையாக தாக்கியுள்ளனர். ஒரு புல்சோடரை வரவழைத்து அலுவலகத்தின் ஒரு பகுதியை இடித்துத் தள்ளி , சூறையாடி அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து , அலுவலகத்தின் பலபொருட்களுக்கு தீவைத்துள்ளனர். தரைதளத்திலும் முதல்தளத்திலும் தீ பற்றி எரிந்துள்ளது. விசால்கர் சிபிஎம் அலுவலகத்திற்கு அருகில் உள்ள கட்சியின் ஷேப்பாகிஜலா மாவட்டக்குழு உறுப்பினர் பார்த்தா பிரதீம் மஜூம்தாரின் இல்லத்தையும் சில குண்டர்கள் அடித்து நொறுக்கி, சூறையாடியுள்ளனர். 

3 செப்டம்பர் 8 மாலை 4 மணி அளவில் பாஜக குண்டர்கள் கட்சியின் மேற்கு திரிபுரா மாவட்டக்குழு அலுவலகத்தையும் அகர்தலா நகரின் மேலார்மத் பகுதியில் அமைந்துள்ள சதார் சப்டிவிசனல் கமிட்டி அலுவலகத்தையும் அடித்துநொறுக்கியுள்ளனர். இங்கு பாஜக குண்டர்கள் ஆயுதங்களை ஏந்தியவாறு ஒரு ஊர்வலகமாகவே வந்துள்ளனர். கற்கலாலும் செங்கற்கலாலும் தாக்கி அலுவலகத்தின் முன்பகுதியை கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர் . முன் பகுதி வாயிற்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து முதல் தளத்தில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.  மேற்கண்ட , மேற்கு திரிபுரா மாவட்டக்குழு அலுவலகத்துக்கு மிக அருகில் பிஎன் 24 நியூஸ் மற்றும் ‘பிரதிவாதி காலம்’ ஆகிய மின்னணு மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. இந்த இரண்டு ஊடகங்களும் பாஜகவையும் அதன் அரசாங்கத்தையும் விமர்சித்து எழுதி வருகின்றன. இந்த அலுவலகங்களுக்குள்ளும் பாஜக கூலிப்படை கும்பல்கள் நுழைந்து சூறையாடியுள்ளனர். அலுவலக காரையும் அடித்து நொறுக்கியுள்ளனர். 

4 இதைத்தொடர்ந்து அகர்தலா நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அன்றைய தினம் மாலை 4.20 மணி அளவில் நடந்துள்ளது. பாஜகவைச் சேர்ந்த கூலிப்படையினர் 60 முதல் 70 பேர் ஆயுதங்களுடன் ஊர்வலமாக வந்து மாநிலக்குழு அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்கியுள்ளனர். அலுவலகத்தில் நின்றுகொண்டிருந்த இரண்டு கார்களை தீ வைத்து எரித்துள்ளனர்.  மகத்தான மக்கள் தலைவர் தசரத் தேவ் அவர்களது சிலையை அடித்து நொறுக்கியுள்ளனர். அலுவலகத்தின் தரைத்தளம் மற்றும் முதல் தளம் முழுவதையும் முற்றாக சூறையாடி நாசப்படுத்தியுள்ளனர்.இந்த அலுவலகத்தின் முன்பு மாலை 3 மணி வரையில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளனர். திடீரென 3 மணிக்கு அவர்கள் அங்கிருந்து விளக்கிக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் சென்ற சற்று நேரத்தில் பாஜகவினரின் தாக்குதல் துவங்கியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த குண்டர்கள் அலுவலகத்திற்குள் மிகப்பெரும் தாக்குதலை நடத்தியுள்ளனர். 

5 கட்சியின் மாநிலக்குழு அலுவகத்திற்கு அருகில் தான் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘ தேசர்கதா ’ அலுவலகம் இயங்கி வருகிறது. பத்திரிகை அலுவலகத்தையும் அந்த குண்டர்கள் விட்டுவைக்கவில்லை. செங்கற்கலை வீசி கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் தேசர்கதா நாளிதழின் நிர்வாகப்பிரிவு அலுவலகப்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது. 

6 சோனாமுரா சப்டிவிசனுக்கு உட்பட்ட கதாலியா எனும் இடத்தில் பாஜகவினர் ஓர் ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்தில் அதிக எண்ணிக்கையில் ஆட்கள் இல்லை. எனினும் அதில் கலந்து கொண்ட சொற்பமான எண்ணிக்கையிலான குண்டர்கள் அங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு தீ வைத்தனர். கட்சியின் பகுதிக்குழு செயலாளரும் சோனாமுரா சப்டிவிசனல் கமிட்டி உறுப்பினருமான நானிபாலின் இல்லத்தையும் தாக்கி சூறையாடினர். 

இதுமட்டுமல்ல, பாஜகவினரின் வெறியாட்டம் தொடர்பாக அடுத்தடுத்த செய்திகள் வந்த வண்ணம் இருந்தன:

1  மேற்கு திரிபுராவில் கபானியாவில் உள்ள சிபிஎம் துக்ளி சப்டிவிசனல் கமிட்டி அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது. 

2 தலாய் மாவட்டம் கண்டசராவில் உள்ள சிபிஎம் சப்டிவிசனல் கமிட்டி அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது. 

3 தலாய் மாவட்டம் மானுவில் உள்ள லோங்தராய் பள்ளத்தாக்கு சப்டிவிசனல் கமிட்டி அலுவலகம் முற்றாக இடித்துநொறுக்கப்பட்டது. 

4 தெற்குதிரிபுரா மாவட்டம் சாந்திர் பஜார் சப்டிவிசனல் கமிட்டி அலுவலகம் புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கப்பட்டது. 

5 கமல் பூர் நகரில் உள்ள சிபிஎம் இடைக்கமிட்டி அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

6 சோனாமுரா சப்டிவிசனில் சிபிஎம் போக்சா நகர் இடைக்கமிட்டி அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது.   

7 மேலாகர் நகரில் உள்ள சிபிஎம் இடைக்கமிட்டி அலுவலகம் தீவைத்து கொளுத்தப்பட்டது. 

8 சோனாமுரா சப்டிவிசன் கதாலியா இடைக்கமிட்டி அலுவலகம் முதல் நாள் இரவில் தீவைக்கப்பட்டது, மறுநாள் புல்சோடர் கொண்டு தகர்க்கப்பட்டது. 

மேற்கூறிப்பிட்ட அலுவலகங்கள் அனைத்தும் ஏற்கெனவே சிலமுறை இதே பாஜக குண்டர்களால் தீவைக்கப்பட்டவை என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். 

9 சோனாமுரா சப்டிவிசன் ரகீம்பூரில் சிபிஎம் அலுவலம் தீக்கிரையாக்கப்பட்டது. 

10 சதார் சப்டிவிசன் நதுன் நகர் இடைக்கமிட்டி அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது. 

11 மோகன்பூர் சப்டிவிசனில் காந்திகிராம் இடைக்கமிட்டி அலுவலகம் புல்சோடர் கொண்டு இடிக்கப்பட்டது. 

12 சதான் சப்டிவிசனில் ஜோகேந்திர நகர் இடைக்கமிட்டி அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது.

13 சோனாமுரா சப்டிவிசனில் ரவீந்திரா நகர் இடைக்கமிட்டி அலுவலகம் சூறையாடப்பட்டது.

14 சோனாமுராவில் தான்பூர் இடைக்கமிட்டி அலுவலகம்அடித்து நொறுக்கப்பட்டது.

15 சோனாமுராவில் மோகன்பார் இடைக்கமிட்டி அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது.

16. கமல்பூர் சப்டிவிசனில் சாந்திர்பஜார் இடைக்கமிட்டி அலுவலகம் கொள்ளையடிக்கப்பட்டு, கொளுத்தப்பட்டது.

17 கமல்பூர் சப்டிவிசனில் ஹலஹலி இடைக்கமிட்டி அலுவலம் தீவைத்து கொளுத்தப்பட்டது. 

18 சதார் சப்டிவிசனில் பகர்கட் இடைக்கமிட்டி அலுவலகம் சிதைக்கப்பட்டது. 

19 சதார் சப்டிவிசனில் போர்துவாலி இடைக்கமிட்டி அலுவலகம் சூறையாடப்பட்டது.

20 கோமதி மாவட்டம் உதய்பூர் சப்டிவிசனில் உள்ள பக்மா , மதர்பாரி, காக்ரபான் மற்றும் கீழ்பாரா ஆகிய சிபிஎம் இடைக்கமிட்டி அலுவலகங்கள் அன்றைய தினம் இரவு வரிசையாக தீவைத்து கொளுத்தப்பட்டன. 

21 கோமதி மாவட்டம் அமர்பூர் சப்டிவிசனில் நதுன்பஜார் இடைக்கமிட்டி அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது.

22 மேற்குதிரிபுராவில் உள்ள துக்ளி நகரில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் நாராயண் தேவின் இல்லம் முற்றாக சூறையாடப்பட்டு , தீவைத்து கொளுத்தப்பட்டது.

23 கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் உதய்பூர் சப்டிவிசன் செயலாளருமான மாணிக்பிஸ்வாசின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டது. 

24 உதய்பூர் சப்டிவிசன் துலாமுராவில் உள்ள சிபிஎம் கோமதி மாவட்டக்குழு உறுப்பினர் ஸ்ரீபஸ் தேவ்நாத்தின் வீடு தீவைத்து கொளுத்தப்பட்டது.

இவை மட்டுமல்ல, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் , ஊழியர்கள், ஆதரவாளர்கள் பலரது வீடுகளும் தாக்கப்பட்டு, சூறையாடப்பட்டு, தீவைத்து கொளுத்தப்பட்டன. திரிபுராவில் பாஜக கோர நர்த்தனம் ஆடிக்கொண்டிருக்கிறது.  

;