tamilnadu

img

நடிகர் கார்த்தி படப்பிடிப்பில் புகுந்து இந்துத்துவா குண்டர்கள் ரகளை

திண்டுக்கல்:
திண்டுக்கல் மலைக்கோட்டை யில் நடைபெற்ற திரைப்பட படப்பிடிப்பில் புகுந்து இந்துத்துவா குண்டர்கள்  எதிர்ப்பு தெரிவித்து ரகளையில் ஈடுபட்டனர்.  நடிகர் கார்த்தி நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு  திண்டுக்கல் மலைக்கோட்டையில்  கடந்த 20 தினங்களாக நடை பெற்றது. இந்த படப்பிடிப்பில் நடிகர் கார்த்தி உள்ளிட்ட நடிகர்,நடிகைகள் பங்கேற்றனர்.  இந்நிலையில் செவ்வாயன்று இரவு மலைக்கோட்டைக்குள் வந்த பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, வி.எச்.பி. உள்ளிட்ட  இந்து அமைப்பினர் படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரி வித்து ரகளையில் ஈடுபட்டனர்.  

தகவலறிந்து வந்த டி.எஸ்.பி. தலைமையிலான  காவல்துறை அதிகாரிகள்  உடனடியாக படப்பிடிப்புக்குழுவினரை நிர்ப்பந்தித்து வெளியேற்றினர். ஆனால் இந்துத்துவா அமைப்பினரை கைது செய்யவில்லை. முறையாக அனுமதி பெற்று நடந்த படப்பிடிப்பில் ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் படப்பிடிப்பு குழுவினரை வெளியேற்றியனர்.இது குறித்து திரைப்பட நடிகர் அலெக்ஸை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறுகையில்,  திண்டுக்கல் மலைக்கோட்டையில் படப்பிடிப்பு நடத்த தொல்லியல் துறையில் ரூ.5 லட்சம் வைப்பு தொகை கொடுத்து, ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் வரை வாடகை கொடுத்து படப்பிடிப்பு நடத்தி வந்தோம்.   ஏறக்குறைய எங்களது படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. சில காட்சிகள் மட்டும் எடுத்துக்கொண்டிருந்தோம். செவ்வாய்க்கிழமையோடு எங்களதுபடப்பிடிப்பும் நிறைவுற்றது. 

இந்நிலையில் இந்துத்துவா அமைப்பினர் சிலர் எங்களது படப்பிடிப்பில் தகராறு செய்தனர். கார்த்தி நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு சுல்தான் என்று பெயர் வைத்ததாகவும், அது திப்பு சுல்தான் கதையாக இருக்கலாம் என்றும் தவறாக அவர்கள் கருதிக்கொண்டு வந்து தகராறு செய்தனர். இன்னும் நாங்கள் படத்திற்கு பெயர் வைக்கவில்லை. போராட்டம்நடத்துகிறவர்கள் எங்கள் தயாரிப்பாளர், இயக்குநரை அணுகி என்ன படம் எடுக்கிறீர்கள் என்றாவது கேட்டிருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் உண்மையை தெரிந்து கொள்ளாமல் படப்பிடிப்பில் தகராறு செய்தது வேதனையளிக்கக்கூடியதாகும். இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு படமெடுக்கும் கலைஞர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து வந்து படம் எடுக்கவில்லை. நாங்களும் இந்துக்கள் தான். இந்த படத்தையொட்டி திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அடங்கி உள்ளது. அதெல்லாம் புரிந்து கொள்ளாமல் தகராறு செய்தது முறையல்ல. காவல்துறை அதிகாரிகள் எங்களுக்கு பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். இது போன்ற கசப்பான சம்பவம் இனிமேல் நடைபெறக்கூடாது. வேறுஎந்த படப்பிடிப்பு குழுவினருக்கும் ஏற்படக்கூடாது என்றார்.நடிகர் கார்த்தி, தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யாவின் தம்பி ஆவார். நடிகர் சூர்யா, மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு, தேசிய வரைவு கல்விக்கொள்கை குறித்து சில நிகழ்ச்சிகளில் விமர்சித்துப் பேசினார். இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து, வரவேற்றனர். இது பாஜக தலைவர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியது.இந்நிலையில் நடிகர் கார்த்தியின் படப்பிடிப்பில் இந்துத்துவா கும்பல் புகுந்து ரகளை செய்துள்ளது நிகழ்ந்துள்ளது. (நநி)

;