tamilnadu

தருமபுரி அரசுக் கல்லூரியில் ஜூலை 16ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

 தருமபுரி, ஜூலை 13- தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பில் சேர ஜூலை 16 ஆம் தேதியன்று இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பட்டமேற்படிப்பில் காலியாக உள்ள இடங்களில் மாணவ, மாணவியர் சேர ஜூலை 16 ஆம் தேதி  இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. மேலும்,  எம்.ஏ. வரலாறு, எம்.காம்., எம்.காம். கூட்டுறவு, எம்.காம். (சிஏ) மற்றும் எம்.எஸ்.சி. மின்னணுவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு போதிய விண்ணப்பங்கள் பெறப்படாததால், தற்போது அதற்கான விண்ணப்பங்கள் வழங்கி சேர்க்கை நடைபெறும். இதேபோல், 2018-19 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெறாமல், துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற வர்களுக்கு, ஜூலை 15 ஆம் தேதி முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை இளநிலை, இளமறிவியல், இளம் வணிகவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்படும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 19 ஆம் தேதி  மாலை 5.40 மணிக்குள் கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கல்லூரி முதல்வர் பொறுப்பு பாக்கியமணி தெரிவித்துளார்.