tamilnadu

img

கம்யூனிச இயக்கமும், தமிழகத்தின் பாரம்பரியமும் - ஹன்னன் முல்லா

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா துவக்கத்தையொட்டி அக்டோபர் 17 அன்று மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும்,  அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஹன்னன் முல்லா,  செங்கொடியை ஏற்றி வைத்து  ஆற்றிய உரையின் பகுதிகள் இவை:

1920ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் நாள் எட்டு தோழர்கள் தாஷ்கண்ட் நகரில் கூடினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்குவது என அவர்கள் முடிவு செய்து அதனை அறிவித்தனர். மார்க்சியம்- லெனினியம் தமது சித்தாந்தம் எனவும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை இந்தியாவில் பரப்புவது எனவும் அவர்கள் தீர்மானித்தனர். அவர்கள் இந்திய விடுதலைக்காக பிரிட்டஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது எனவும் ஒரு சோசலிச சமூகத்தை உருவாக்க உழைப்பது எனவும் முடிவு செய்தனர். அந்த மகத்தான தொடக்கத்தின் நூற்றாண்டு விழாவை இப்போது கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு முழுதும் இந்த நூற்றாண்டு விழாவை கடைபிடிப்பது என நாம் தீர்மானித்துள்ளோம். 

அப்பொழுது தோழர் லெனின் தலைமையில் சோவியத் புரட்சி வெற்றி பெற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். சோவியத் புரட்சியின் மகத்தான தாக்கம் காரணமாக உலகம் எங்கும் புரட்சிக்கான இயக்கங்கள் பரவின. இந்தியாவிலும் இதன் தாக்கம் உருவானது. இங்கிருந்து பலர் சோவியத் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொன்டனர். அவர்கள் ‘முகாஜிர்கள்’ (வெளி தேசங்களிலிருந்து புரட்சியை காண ரஷ்யா வந்தவர்கள்) என்று அழைக்கப்பட்டனர். எம்.என்.ராய் மற்றும் அவரது மனைவி உட்பட எட்டு பேர் முதல் கிளையை துவக்கினர். முகம்மது ஷஃபிக் முதல் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சியின் முதல் கிளையில் ஒரு தமிழர்

இந்த முதல் கிளைக்கும் தமிழகத்திற்கும் ஒரு விசேட தொடர்பு உள்ளது. இந்த எட்டு பேரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர். அவர் எம்.பி.டி. ஆச்சார்யா ஆவார். இந்தியாவில் பல பகுதிகளில் கம்யூனிஸ்ட் குழுக்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. குறிப்பாக கொல்கத்தா, மும்பை, சென்னை, பனாரஸ், லாகூர் ஆகிய இடங்களில் கம்யூனிஸ்ட் குழுக்கள் இருந்தன. மார்க்சிய- லெனினியத்தை ஏற்றுக் கொண்ட இந்த குழுக்கள் அனைத்தும் 1925ம் ஆண்டு கான்பூரில் ஒன்று கூடி ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பை உருவாக்கின. இந்த கூட்டத்திற்கு தோழர் சிங்காரவேலர் தலைமை தாங்கினார். நமது அமைப்பு தாஷ்கண்டில் தொடங்கப்பட்டது. பின்னர் இந்தியாவுக்கு பரவியது.  கம்யூனிஸ்டுகள் செயல்படத் தொடங்கியவுடன் பிரிட்டஷ் ஆட்சியாளர்கள் தமது முதன்மை எதிரிகள் கம்யூனிஸ்டுகள்தான் என உணர்ந்தனர். ஆகவே கம்யூனிஸ்டுகளை அடக்கவும் முடக்கவும் தொடங்கினர். இதற்காக கம்யூனிஸ்டுகள் மீது சதி வழக்குகள் ஏவப்பட்டன. லாகூர் சதி வழக்கு, பெஷாவர் சதி வழக்கு/ கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு என புனையப்பட்டு முசாபர் அகமது, சிங்காரவேலர் மற்றும் 31 முக்கிய தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான ஊழியர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். எங்கு கம்யூனிஸ்ட் கூட்டம் நடத்தப்பட்டாலும் பிரிட்டீஷ் காவல்துறையினர் அங்கு சென்று நமது தலைவர்களை தாக்கி சிறைபிடித்தனர்.

முழு விடுதலை முழக்கம் முதலில் முன்வைத்த இயக்கம்

பல தியாகங்களை செய்த பின்னர் கட்சி 1934ம் ஆண்டில்தான் ஓரளவு சட்டப்பூர்வமாக செயல்பட முடிந்தது. விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு மகத்தானது. 1921ம் ஆண்டு அகமதாபாத் காங்கிரஸ் மாநாட்டில் அப்பொழுது காங்கிரசில் பணியாற்றிய கம்யூனிஸ்ட்டான மவுகானா ஹஸ்ரத் மொகானி “இந்தியாவுக்கு முழு விடுதலை கோர வேண்டும்” என தீர்மானம் முன்மொழிந்தார். ஆனால் காந்திஜி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கம்யூனிஸ்டுகள்தான் முழுவிடுதலை எனும் முழக்கத்தை முதலில் முன்வைத்தனர். காங்கிரஸ் அப்பொழுது முழுவிடுதலைக்கு குரல் கொடுக்கவில்லை. 1922ம் ஆண்டு கயா காங்கிரஸ் மாநாட்டில் கம்யூனிஸ்டுகள் இந்திய விடுதலை குறித்த தங்களது கருத்துகளை எழுத்து மூலமாக விநியோகம் செய்தனர்.

மூன்று அரசியல் நீரோட்டங்கள்

அந்த காலகட்டத்தில் இந்திய விடுதலை குறித்து மூன்று அரசியல் நீரோட்டங்கள் உருவாகின. ஒன்று விடுதலைக்குப் பிறகு ஒரு முதலாளித்துவ சமூகத்தை உருவாக்குவது. இதனை காங்கிரஸ் பிரதிபலித்தது. ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக  குடியரசை அமைப்பது இவர்களின் நோக்கமாக இருந்தது. இரண்டாவது அரசியல் நீரோட்டத்தை கம்யூனிஸ்டுகள் பிரதிபலித்தனர். மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசை அமைப்பது மட்டுமல்ல; அந்த குடியரசில் உழைக்கும் மக்கள் உண்மையான முழு அரசியல், பொருளாதார விடுதலை பெற வேண்டும் என்பதும் கம்யூனிஸ்டுகளின் கருத்தாக இருந்தது. இந்த குடியரசில் சுரண்டல் ஒழிக்கப்பட்டு சோசலிச சமூகமாக அமைய வேண்டும் என்பது கம்யூனிஸ்டுகளின் இலக்காக இருந்தது. மூன்றாவது அரசியல் நீரோட்டத்தை மதவாதிகள் பிரதிபலித்தனர். இந்தியா மதத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என இவர்கள் வாதிட்டனர். முஸ்லிம் மதவாதிகள் முஸ்லீம்களுக்கு தனி தேசம் கோரினர். ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவவாதிகள் இந்தியா இந்து நாடாக இந்துக்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என கோரினர்.

இந்தியா - சீனா, வியட்நாம் - என்ன வேறுபாடு

1947ல் இந்தியா விடுதலை அடைந்த பொழுது கம்யூனிஸ்டுகள் புறக்கணிக்க முடியாத சக்தியாக செல்வாக்கு பெற்றிருந்தனர். ஆனால் விடுதலை போராட்டத்தில் தலைமை இடத்தில் கம்யூனிஸ்டுகள் இருக்கவில்லை. சீனா, வியட்நாம் ஆகிய தேசங்களில் விடுதலைப் போராட்டங்கள் கம்யூனிஸ்டுகள் தலைமையில் நடந்தன. எனவே அங்கெல்லாம் விடுதலைப் போராட்ட வெற்றி என்பது கம்யூனிஸ்ட் புரட்சிகளாகவும் அமைந்தது. ஆனால் இந்தியாவில் முதலாளித்துவவாதிகள் தலைமைப் பொறுப்பில் இருந்ததால் இங்கு விடுதலைக்குப் பிறகு உழைக்கும் மக்கள் உண்மையான விடுதலைக் காற்றை சுவாசிக்க முடியவில்லை. தேசம் விடுதலை அடைந்த பொழுது பிரிவினையும் நடந்தது. பாகிஸ்தான் மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டது போல இந்து ராஷ்டிரம் அமைக்க இயலவில்லை. எனவே அவர்கள் மிகவும் ஆத்திரம் அடைந்தனர். இந்த ஆத்திரத்தின் காரணமாகவே அவர்கள் மகாத்மா காந்தியை கொன்றனர். இந்துத்துவாவாதியான கோட்சே தேச விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திய காந்தியை சுட்டுக் கொன்றான்.

விடுதலைப் போராட்டத்துடன் வர்க்க போராட்டங்களை இணைத்தோம்

விடுதலைக்கு முன்பு, சுதந்திரப் போராட்டத்திற்கு வர்க்க கண்ணோட்டத்தை - சித்தாந்த அடித்தளத்தை கம்யூனிஸ்டுகள் அளித்தனர். விடுதலைக்குப் பின்பு, மக்கள் கோரிக்கைகளுக்காக கம்யூனிஸ்டுகள் போராடுகின்றனர். விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் என்ன செய்தனர் எனப் பலர் கேட்கின்றனர். விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் ஜனநாயகத்திற்காக, மதச்சார்பின்மைக்காக, தேச ஒற்றுமைக்காக, உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலை முடிவு கட்டுவதற்காக போராடினர்.  நாம் நிலபிரபுத்துவத்திற்கு எதிராக விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய போராட்டங்களை உருவாக்கினோம். வங்கத்தில் தேபாகா போராட்டம், அசாமில் சுர்மா போரட்டம், கேரளத்தில் புன்னப்புரா வயலார் போராட்டம், ஆந்திராவில் மகத்தான தெலுங்கானா போராட்டம். இந்தியாவில் நடந்த ஒவ்வொரு விவசாயிகள் போராட்டத்தையும் கம்யூனிஸ்டுகள்தான் வழிநடத்தினர். தொழிலாளர்கள் போராட்டங்களையும் கம்யூனிஸ்டுகள்தான் வழிநடத்தினர். ஏஐடியுசி உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் நூற்றாண்டு விழாவும் சிஐடியுவின் 50வது ஆண்டுவிழாவும் கொண்டாடப்படுகின்றன. தொழிலாளர் போராட்டங்களிலும் கம்யூனிஸ்டுகள் முன்னணியில் நின்றனர். மாணவர் இயக்கங்களையும் கலாச்சார அமைப்புகளையும் விடுதலைப் போராட்ட காலத்தில் கம்யூனிஸ்டுகள் உருவாக்கினர். இந்த இயக்கங்கள் காரணமாக கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவில் வளர்ந்தது. விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் ஒற்றுமைக்காகவும் நாம் போராடினோம். மொழிவழி மாநிலங்களுக்காக நாம் களம் கண்டோம். தமிழ்நாடு, விசாலாந்திரா, ஐக்கிய கேரளம், சம்யுக்த மகாராஷ்டிரா என மொழிவழி மாநிலங்களுக்கும் நாம் குரல் கொடுத்தோம். 

17 மன்னிப்புக் கடிதங்களை எழுதிய சவார்க்கர்

இளம் தலைமுறையினருக்கு தெரியாது, ஆர்.எஸ்.எஸ். விடுதலை போராட்டத்தில் எவ்வித பங்கையும் செலுத்தவில்லை என்று! கம்யூனிஸ்டுகளும் ஏனைய தேசப்போராளிகளும் பிரிட்டஷாரின் கொடுமைகளை எதிர்கொண்டு போராடிக்கொண்டிருந்த பொழுது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பிரிட்டீஷாரின் பூட்சுகளை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஆர்.எஸ்.எஸ். பிரிட்டஷாரின் ஏஜெண்டுகளாக இருந்தனர். சாவர்க்கர் பற்றி வாய் கிழியப் பேசுகின்றனர். அந்தமான் சிறையில் இருந்த பொழுது சாவர்க்கர் 17 முறை மன்னிப்பு கடிதங்களை பிரிட்டஷ் அதிகாரிகளுக்கு எழுதினார். என்னை விடுதலை செய்தால் உங்களின் விசுவாசியாக பணியாற்றுவேன் என்று கெஞ்சினார். பிரிட்டஷாருக்கு அடியாட்களாக இருந்தவர்கள்தான், அன்று தேசத்திற்கு துரோகம் செய்தவர்கள்தான் இன்று தேசியம் பற்றி வாய்கிழியப் பேசுகின்றனர்.

விடுதலைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்டுகள் சிறைகளிலும் வெளியிலும் கொல்லப்பட்டனர். ஆனால் நம்மை தேச விரோதிகள் என இந்த தேச துரோகிகள் கூறுகின்றனர். தேச துரோகிகளாக இருந்தவர்கள் தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கின்றனர். திடீரென அவர்கள் பெரிய தேசியவாதிகளாக தம்மை கூறிக்கொள்கின்றனர். நமது தத்துவார்த்த போராட்டத்தை மார்க்சிய - லெனினிய அடிப்படையில் நடத்த வேண்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். - பாஜக - பஜ்ரங்தள் போன்ற அனைத்து இருண்ட சக்திகளுக்கும் எதிராக நமது போராட்டத்தை தொடர வேண்டிய தேவை உள்ளது. பாஜகவின் உதவியுடன் ஆர்.எஸ்.எஸ். ஜனநாயக இயக்கத்தை அழிக்க திட்டமிட்டு செயலாற்றுகின்றனர். நமது அரசியல் சட்டத்தை குழி தோண்டிப் புதைக்க திட்டமிடுகின்றனர். இந்த 70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட பல ஜனநாயக அமைப்புகளை தகர்க்க செயல்படுகின்றனர். மத ஒற்றுமையை, மதச்சார்பின்மை மாண்புகளை சிதைக்க முனைகின்றனர்.     
 

இந்து மதம் வேறு! இந்துத்துவா அரசியல் வேறு

ஒரு இந்துத்துவ சமூகத்தை உருவாக்க முயல்கின்றனர். இந்துயிசம் என்பது வேறு! இந்துத்துவா என்பது வேறு! இந்துயிசம் என்பது மதம். ஆனால் இந்துத்துவா என்பது அரசியல். இந்துத்துவா அரசியலின் அடிப்படையில் மற்ற மதங்களை அழிக்க சதி தீட்டுகின்றனர். ஒரு மதவாத பாசிச அமைப்பை உருவாக்க திட்டமிடுகின்றனர். விடுதலைப் போராட்டத்திலும் விடுதலைக்குப் பின்னரும் பல தாக்குதல்களை சந்தித்துள்ளோம். இப்பொழுது புதுவிதமான தாக்குதலை சந்திக்கிறோம். இந்த தாக்குதலை முறியடிக்க நாம் போராட்டத்தை தொடர வேண்டியுள்ளது. அவர்கள் காஷ்மீரை சிதைத்துவிட்டனர். 370வது பிரிவை முடக்கியுள்ளனர். புதிய தாக்குதலாக தேசிய குடி மக்கள் பதிவேட்டை உருவாக்குகின்றனர். அசாமில் பல லட்சம் பேர் குடிமக்கள் அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தை தேசம் முழுதும் விரிவாக்க முயல்கின்றனர். இதன் நீட்சியாக குடிமக்கள் சட்டத்தையும் வரும் நாடாளுமன்ற தொடரில் அமலாக்க திட்டமிடுகின்றனர்.

நமது இயக்கத்தின் நூறாவது மகத்தான ஆண்டை கடைப்பிடிக்கும் இத்தருணத்தில் நாம் மிகப்பெரிய சவாலை சந்திக்கிறோம். ஒரு பாசிச தாக்குதலை எதிர்கொள்கிறோம். ஜனநாயகம், அரசியல் சட்டம், மக்கள் ஒற்றுமை காக்க நாம் போராட வேண்டும். தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள் வேலையில்லாத வாலிபர்கள் இவர்களுக்காகவும் நாம் போராட வேண்டும். இந்த நூற்றாண்டு விழாவில் இந்த போராட்டங்களை நாம் தொடர வேண்டும் எனும் உறுதி மொழியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் மூன்று எதிரிகளை எதிர்த்து போராட வேண்டும். பெரு முதலாளிகள், நிலப்பிரபுக்கள், ஏகாதிபத்தியம் ஆகிய இவர்களுக்கு எதிராக போராட வேண்டும். 

தமிழகம், ஜனநாயகத்தின் அடித்தளம்

தற்பொழுது அவர்கள் தேசம் முழுதும் இந்தியை திணிக்க எத்தனிக்கின்றனர். தமிழ் நாட்டு மக்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர். தமிழ் மக்களின் இந்த எதிர்ப்பு மிக மிக நியாயமானது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என புகுத்த எண்ணுகின்றனர். நாம் வேற்றுமையில் ஒற்றுமையை விரும்புகிறோம். ஆனால் அவர்கள் ஒற்றை தன்மையை புகுத்த எண்ணுகின்றனர். இந்த ஒற்றைத் தன்மையை நாம் நிராகரிக்க வேண்டும். நமது மகத்தான இயக்கத்தின் நூற்றாண்டு விழாவின் போது தமிழக கம்யூனிஸ்டுகளுக்கு பெரும் பங்கும் கடமையும் உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளையில் ஒரு தமிழரும் உறுப்பினராக இருந்தார் என்பது பெருமைக்குரியது. இதே மதுரையில் 1940ம் ஆண்டு முதல் கிளை துவக்கப்பட்டது என்பதும் பெருமைக்கு உரியது. இந்த பாரம்பரியத்துடன் தமிழ்கத்தில் கம்யூனிஸ்டு இயக்கத்தை வலுப்படுத்த நீங்கள் முன்வர வேண்டும் என நான் வேண்டுகிறேன்.

தமிழகம் ஜனநாயக இயக்கத்தின் மிகப்பெரிய களம். இங்கு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சாதனைகளை நாம் மக்களுக்கு விளக்க வேண்டும். கம்யூனிசம் நேற்று எபப்டி இருந்தது; இன்று எப்படி உள்ளது என்பதை ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டத்திலும் ஒவ்வொரு கிளையிலும் நாம் விளக்க வேண்டும். தேசத்தை பாதுகாக்க நமது ஒற்றுமையை பாதுகாக்க அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டும். இதுவே இந்த தருணத்தில் நாம் எடுக்க வேண்டிய உறுதி மொழி!

தொகுப்பு : அ.அன்வர்  உசேன்




 



 

;