tamilnadu

img

ஆர்.எஸ்.எஸ். எனும் மர்மதேசம்-11 : “இந்து எழுச்சிக்காக” விநாயகர் ஊர்வலம்!

ஒரே மதம், ஒரே நாடு என்று ஆர்எஸ்எஸ் சொல்லிக் கொண்டாலும் மாநிலங்களில் நிலவிய தனித்தன்மைகளைக் கவனத்தில் கொண்டே அது தன்னை வளர்த்துக் கொண்டது. தமிழகமும் அதற் கான உதாரணமே. அகில இந்திய துணை அமைப்புகளை உருவாக்கிய அந்த அமைப்பு தமிழகத்திற்கு என்றே “இந்து முன்னணி” என்பதை துவக்கியது.

முன்னணியின் அதிகாரப்பூர்வ இணையதளம் கூறுகிறது: “இந்து முன்னணி 1980ல் துவக்கப்பட்டது. நாத்திகப் பிரச்சாரத்தை முறியடிப்பதற்காகவும், மத மாற்றத்தைத் தடுப்பதற்காகவும், இந்து மதத்தின் பெருமைகளை இந்துக்களிடம் புரிய வைப்பதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டது. இந்து முன்னணியின் கடும் உழைப்பால் நாத்திகப் பிரச்சாரம் முறியடிக்கப் பட்டுள்ளது. மதமாற்றம் தடுக்கப்பட்டு வருகிறது. கோவை, திருச்சி போன்ற இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்டுகள் கொடிகட்டிப் பறந்த நிலைமை மாறி இன்று தேசிய இயக்கங்கள் கால் பதிக்கத் துவங்கி விட்டன. எந்தத் தமிழகத்தில் விநாயகர் சிலை உடைப்பு நடந்ததோ அந்த தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலங்கள் களைகட்டத் துவங்கிவிட்டன”.

இந்து முன்னணி என்பது அடித்தட்டு, ஏழை இந்துக்களின் உயர்வுக்காக உதயமானது அல்ல. மாறாக, பகுத்தறிவுப் பிரச்சாரத்தை தடுக்கவும், அரசியல்சாசனம் வழங்கியுள்ள மதமாற்ற உரிமையைப் பறிக்கவும், கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கை ஒடுக்கவும் கிளப்பிவிடப்பட்டது. இதுவும் சங் பரிவாரத்தின் ஓர் அங்கமே என்பது “இந்து முன்னணி:1980 முதல் 2010 வரை” எனும் அதன் ஆவணத்தின் மூலமே வெளிப்படுகிறது. அது கூறுகிறது: “17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இராமர் கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது என இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் அவர்கள் 2005 டிசம்பரில் திருவல்லிக்கேணியில் தனிஆளாக கையெழுத்து இயக்கத்தை துவக்கினார். 2006 மார்ச்சில் நடந்த ஆர்எஸ்எஸ் பிரதிநிதி சபாவில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டு ஆர்எஸ்எஸ் தலைவர் பூஜனிய சுதர்சன்ஜி நாடு முழுவதும் ஒருநாள் கையெழுத்து இயக்கம் நடத்த அறைகூவல் விடுத்து ஒரே நாளில் 35 லட்சம் கையெழுத்து வாங்கி ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்டது”.

17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இராமர் பாலம் கட்டினாராம்! பரிணாம வளர்ச்சியில் நவீன மனிதனே அப்போதுதான் தோன்றிக் கொண்டிருந்தான். இவர்களோ அப்போதே ராமன், ராவணன், சீதை என்றும், சீதையை மீட்க பாலம் என்றும் கதைக்கிறார்கள்! இந்த அபத்தமான வாதத்தை முன்வைத்து தென்னிந்தியாவிற்கே பெரும் பயன் தரும் ஒரு வளர்ச்சி திட்டத்தை தடுத்துவிட்டார்கள். இதிலே கம்யூனிஸ்டுகளைப் பார்த்து “வளர்ச்சியின் எதிரிகள்” என்கிறார்கள். உண்மையில் அது யார் என்பது இதில் வெளிப் பட்டது. மறுபுறம் இந்த விஷயத்தை இவர்கள் ஆர்எஸ்எஸ்சிடம் எடுத்துப் போனதிலிருந்து அதன் துணைஅமைப்புகளில் ஒன்றே இது என்பதும் உறுதியானது.

தனது சாதனைகளில் ஒன்றாக விநாயகர் ஊர்வலத்தைச் சொல்கிறது இந்து முன்னணி. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி என்பது வெகுகாலமாகக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையே. ஆனால் அதை வீட்டுப் பண்டிகையாக நடத்தினார்களே தவிர வீதிக்கு கொண்டுவந்தது இல்லை. மண்ணாலான சிறு பிள்ளையாரை வீட்டில் வைத்து வணங்கி, மூன்றாம் நாள் அருகிலுள்ள நீர்நிலையில் கரைத்து விடுவார்கள். இந்து முன்னணிதான் தெருக்களில் பெரும்பெரும் விநாயகர் சிலைகளை நிறுவி, அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று நதியில், கடலில் போடும் வேலையை ஆரம்பித்தார்கள். எதற்கு?

அதே ஆவணம் சொல்கிறது: “தமிழகத்தில் இந்துஎழுச்சியை உருவாக்குவதற்காக 1983ல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை திருவல்லிக்கேணியில் இந்து முன்னணி துவக்கியது. தற்போது 50,000 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது”. ஆக விநாயகர் சக்தி வாய்ந்த கடவுள், அவரை வணங்கினால் நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும் எனும் பக்தி நோக்கில் இந்த ஊர்வலங்கள் நடத்தப்படவில்லை, மாறாக “இந்து எழுச்சியை உருவாக்குவதற்காக” இந்த ஏற்பாடு! அது மட்டுமா? அடுத்து அது சொல்வதைக் கேளுங்கள்:

“மசூதி உள்ள நெடுஞ்சாலைகளில் சுவாமி ஊர்வலங்கள் மேளதாளத்துடன் செல்ல முடியாத நிலை இருந்தது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் மூலமாக இன்று தமிழக வீதிகளில் திருவல்லிக்கேணி போன்ற4 இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மேளதாளத்துடன் மசூதி வழியாகச் செல்லும் சூழ்நிலை உருவாகிஉள்ளது”. ஆக இந்து எழுச்சி என்பது  இந்த சங் பரிவாரத்திற்கு மசூதி முன்பு மேளதாளத்துடன் சென்று தகராறு செய்வது! அதற்காகத்தான் இவர்கள் விநாயகரை எடுத்துச் சென்றார்களே தவிர அவர் மீது கொண்ட பக்தியால் அல்ல. இதிலிருந்து சாதாரண இந்து பக்தர்கள் வணங்கும் அரசமரத்து பிள்ளையார் வேறு, ஆர்எஸ்எஸ் பிள்ளையார் வேறு என்பது துல்லியமாகத் தெரிகிறது.

இன்னும் சந்தேகம் இருந்தால் அந்த ஆவணம் முத்தாய்ப்பாய்ச் சொல்லுவதைக் கவனியுங்கள்: “பெரியார் பிறந்த தமிழகத்தில் இந்து எழுச்சி ஏற்படாது என்று பேசிவந்த சூழ்நிலை மாறி தமிழகம் என்றுமே ஆழ்வார்கள், நாயன்மார்கள் பூமிதான் என்றும், தேசிய தெய்வீக தமிழகம்தான் என்றும் நிலைநாட்டப்பட்டுள்ளது விநாயகர் சதுர்த்தி எழுச்சி ஊர்வலத்தால்”. எப்படிக் குறிவைத்து வேலை பார்க்கிறார்கள் என்பது புரிகிறதா? விநாயகர் பெயரைச் சொல்லி நிலப்பிரபுத்துவ சாம்ராஜிய காலத்து தமிழகத்தை மீண்டும் கொண்டுவரப் பார்க்கிறார்கள். பெரியாருக்கு மாற்றாக ஆழ்வார்கள்-நாயன்மார்களை முன்னிறுத்துவது சமூகசீர்திருத்தத்திற்கு மாற்றாக வர்ணாசிரமத்தை புகுத்த துடிக்கும் இவர்களது ஆசையின் வெளிப்பாடு. நாயன்மார்களில் ஒருவராகிய நந்தனாருக்கு ஏற்பட்ட கதியை, சமண-புத்த மதங்கள் வன்மத்தோடு ஒடுக்கப்பட்டதை நினைத்துக் கொண்டால் இது புரியும்.

நெல்லை மாவட்டம் தென்காசிக்கு அருகே உள்ள மீனாட்சிபுரத்தின் பட்டியல் சாதி மக்கள் இஸ்லாமிற்கு மாறினார்கள் 1981ல். இதையொரு அகில இந்தியப் பிரச்சனையாக்கி அல்லோல கல்லோலப்படுத்தியது ஆர்எஸ்எஸ். அந்த அமைப்பிற்குப் பின்னாளில் பொதுச்செயலாளரான எச். வி. சேஷாத்திரி அப்போதே “மீனாட்சிபுரத்தின் எச்சரிக்கை” என்றொரு பிரசுரம் எழுதினார். அதில் கூறினார்: “தமிழ்நாட்டின் அந்த நான்கு மாவட்டங்களில் பாதிப்புக்கு ஆளான கிராமங்கள் அனைத்திற்கும் ஆர்எஸ்எஸ் ஆய்வுக்குழு சென்றது. அவர்களால் திரட்டப்பட்ட விபரங்களைக் கொண்டு மேலும் மதமாற்றம் நடக்காதபடித் தடுக்கவும், மதம் மாறியவர்களை மீண்டும் மாற்றவும் ஒரு செயல்திட்டம் வகுக்கப்பட்டது. ஒரு பிரம்மாண்டமான இந்து ஒற்றுமை மாநாட்டை மீனாட்சிபுரத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது”.

ஜுலையில் அப்படியொரு மாநாடு நடக்கவும் செய்தது. ஆனால் “இந்து ஒற்றுமை” என்றார்களே அதற்கு என்ன செய்தார்கள்? மாறியவர்கள் அனைவரும் பட்டியல் சாதி மக்கள் என்பதால் மாற்றத்திற்கான காரணம் தீண்டாமைக் கொடுமையே என்பது சொல்லாமலே தெரிந்தது. எனவே இனி இந்து மதத்தில் தீண்டாமை இருக்காது, தீண்டாமையைக் கடைப் பிடிப்போர் இந்து மதத்திலிருந்து நீக்கப்படுவார்கள், இந்துக்கள் அனைவரும் சமமானவர்களே, அவர்களது ஒற்றுமையை நிலைநிறுத்த சாதி வித்தியாசமின்றி திருமணம் நடக்க வேண்டும் என்று சொன்னார்களா? அதெல்லாம் இல்லை.“சுத்தி” எனும் சடங்கின் மூலம் அவர்களில் சிலரை மீண்டும் இந்து மதத்தில் சேர்த்து, பட்டியல் சாதிக்கான சான்றிதழ் வாங்கிக் கொடுத்தார்கள்!  பத்தாண்டுகளுக்குப் பிறகு அந்த ஊருக்குச் சென்ற இந்தியா டுடே (30-4-1991) செய்தியாளர் தந்துள்ள விபரம் இது! ஆக இந்து மதத்தில் படிநிலைச் சாதிமுறைமை இருக்கத்தான் செய்யும், ஆனாலும் மதம் மாறக்கூடாது! அது அரசியல் சாசனத்தின் பிரிவு 25(1) அனைவருக்கும் தந்துள்ள உரிமை என்றாலும் மதம் மாறக் கூடாது! இதுதான் ஆர்எஸ்எஸ்சின் அடாவடித்தனம். இதைத் தமிழகத்திலும் நடத்தினார்கள்.

1982ல் குமரி மாவட்டத்தின் மண்டைக்காட்டில் மதக் கலவரம் வெடித்தது. பேராசிரியர் சி.காட்வின் சாம் எழுதிய ஆய்வுக்கட்டுரை தந்துள்ள விபரங்கள்: 
“கோயில் திருவிழாவையொட்டி கிறிஸ்தவ மீனவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மோதல் நடந்தது. மார்ச் 1ல் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 மீனவர்கள் உயிரிழந்தனர். மார்ச் 15ல் மேலமணக்குடி எனும் கடற்கரை கிராமத்திலும் போலிஸ் துப்பாக்கி சூடு நடந்தது. அதில் 2 மீனவர்கள் உயிரிழந்தனர். மார்ச்சுக்கும் டிசம்பருக்கும் இடையே சுமார் 50 மோதல்கள் நடந்தன”. அண்மைக்காலத் தமிழக வரலாற்றில் இவ்வளவு பெரிய இந்து-கிறிஸ்தவ மோதல் நடந்ததில்லை. “அமைதிப் பூங்கா” எனப்பட்ட தமிழகத்தையும் மதக் கலவர பூமியாக மாற்ற முடியும் என்பதை அந்த மாவட்டத்தில் காண்பித்தார்கள் வகுப்புவாதிகள்.

அப்போது இருந்த எம்ஜிஆர் ஆட்சி இது பற்றி விசாரிக்க நீதிபதி வேணுகோபால் கமிஷனை நியமித்தது. 1986ல் அது தந்த அறிக்கையில் இந்த இரு பரிந்துரைகள் இருந்தன: “1. மோசடி யான மற்றும் தவறான வழிகளில் நடைபெறும் மத மாற்றங்களைத் தடை செய்ய வேண்டும். 2. ஆர்எஸ்எஸ்சின் பயிற்சிகள் மற்றும் அணிவகுப்புகள் சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் உருவாக்குவதால் அவற்றை தடை செய்ய வேண்டும்”.

“மோசடியான மற்றும் தவறான வழிகள்” என்று எவற்றை சொல்வது? ஒரு ரசிகன்கூட தனது ஹீரோவை சட்டென்று மாற்றிக் கொள்வதில்லை. இவ்வளவு காலமாக வணங்கிவரும் கடவுளை ஒருவர் அவ்வளவு எளிதில் மாற்றிக் கொள்வாரா? மாற்றுகிறார் என்றால் அதற்கு அக, புற காரணங்கள் நிச்சயம் இருக்கும். இதில் நியாயமான காரணங்கள், மோசடியான காரணங்கள் எனத் தரம் பிரிப்பது எளிதல்ல. அப்படி பிரித்து சட்டம் போட்டால் அது நடைமுறையில் மத மாற்றத்தையே தடுப்பதாகத்தான் முடியும். 2002ல் ஜெயலலிதா ஆட்சி இப்படித்தான் கட்டாய மத மாற்ற தடைச் சட்டம் என்பதைக் கொண்டுவந்தது; அதை உற்சாகமாக ஆதரித்தது பாஜக. ஆனால் மக்களின் அதிருப்திக்கு ஆளானது ஆட்சி. 2004 மக்களவைத் தேர்தலில் அதிமுக அடைந்த தோல்விக்கு அதுவும் ஒரு காரணம் எனப்பட்டது. பின்னர் அந்த சட்டத்தை கலைஞர் ஆட்சி ரத்து செய்தது.ஆர்எஸ்எஸ்சின் பயிற்சிகளும், அணிவகுப்புகளும் எத்தகையவை என்பதை அரசு நியமித்த ஒரு கமிஷனே சொல்லியது கவனிக்கத் தக்கது. ஆனாலும் அவை நடந்தன. தமிழகத்தின் மத நல்லிணக்க மரபைக் கெடுத்து வட மாநிலங்கள் போல இதையும் ஆக்க அது அன்றே முயற்சி செய்தது என்பதற்கான ஆதாரமே மண்டைக்காடு சம்பவங்கள். நல்லவேளையாக மக்கள் ஒற்றுமை நேசர்கள் விழிப்போடு இருந்ததால் அன்று கலவரத் தீ மேற்கொண்டு பரவவில்லை.

===அருணன்==

(தொடரும்)
 

;