headlines

img

ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு ஆலவட்டம் சுற்றுவதா?

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பே இந்தியாவில் செழுமையான கல்விமுறை இருந்ததாகவும், அதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வெட்டித் தள்ளிவிட்டதாகவும், நமது பாரம்பரியத்தை மீட்கபுதிய தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், புதிய கல்விக்கொள்கையால் மாணவர்கள் அதிக தன்னம்பிக்கையுடன் வெளி வருவார்கள் என்றும், எதிர்காலத்தில் சவால்களை சந்திக்கும் தகுதியுடையவர்களாக இருப்பார்கள் என்றும் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார். ஆனால் மோடி அரசின் புதிய கல்விக்கொள்கையால் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் கல்வி பெறுவதே மிகப் பெரிய சவாலாக மாறும் ஆபத்து உள்ளது. இதை குடியரசுத் தலைவர் உணர்ந்திருந்த போதும் அரசின் கொள்கைகளுக்கு ஆலவட்டம் சுற்றுவதற்காக இவ்வாறு பேசியுள்ளார்.

திருக்குறளில் கல்வி குறித்து சிறப்பாக பேசப்பட்டுள்ளதை குடியரசுத் தலைவர் மேற்கோள்காட்டியுள்ளார். திருவள்ளுவர் கல்வியை எல்லோருக்கும் ஆண், பெண், சாதி, மத வித்தியாசமின்றி பொதுவில் வைத்தார். ஆனால் சனாதான அடிப்படையிலான கல்விமுறை கல்வியை அனைவருக்கும் பொதுவில் வைக்கவில்லை. மாறாக, குருகுல கல்வி முறை சாதி அடிப்படையிலேயே பயிற்றுவிக்கப்பட்டது. சூத்திரர், பஞ்சமர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது மட்டுமல்ல, கல்வியை பெற முயன்றவர்களுக்கு கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட்டன. புராணங்களில் கூறப்படும் சம்பூகன், ஏகலைவன், கர்ணன் கதைகள் இதற்குச் சான்று பகரும். தேவபாஷை என்று கூறி சமஸ்கிருத மொழியையே வெகுமக்களிடமிருந்து தள்ளி வைத்தவர்கள் கல்வியை எப்படி எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். பெண்கள் கல்விபெறுவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டது.

ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வருவதற்கு முன்பு இந்த மண்ணில் சிறந்த கல்விமுறை இருந்ததாக குடியரசுத் தலைவர் கூறுவது சங்பரிவாருக்கு வேண்டுமானால் உவப்பாக இருக்கலாம். ஆனால் இந்த வார்த்தைகள் உண்மை நிலையிலிருந்து வெகுதூரம் தள்ளி நிற்கிறது. இவரால் பாராட்டப்படும் புதிய கல்விக் கொள்கை என்பது அழுகி நாற்றமெடுத்த பழையகல்வி முறையின் புதிய வடிவமேயாகும். தாய்மொழிவழி கல்வியை மறுப்பது, தேர்வுகள் என்ற பெயரில்மாணவர்களை அச்சுறுத்தி கல்வி நிலையங்களிலிருந்து விரட்டுவது, தரம் என்கிற பெயரில் ஏழை,எளிய மற்றும் சமூகரீதியான ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்வியை மறுப்பது என்று புதியகல்விக் கொள்கையில் இருப்பவை அனைத்துமே விஷம் தான். இதற்கு குடியரசுத் தலைவர் நற்சான்றிதழ் வழங்குவது துரதிருஷ்டவசமானது. 

வரலாற்றுக்கு மாற்றாக புராண புனைவுகளை முன்வைப்பது, அறிவியலுக்கு பதிலாக மூட நம்பிக்கையை புகுத்துவது என ஆர்எஸ்எஸ் விரும்பும் கல்விமுறையே புதிய கல்விக் கொள்கையாகும். இதை முறியடித்தால் மட்டுமே இந்தியாவில் அனைவருக்கும் சமமான, தரமான கல்வி கிடைக்கும்.