tamilnadu

img

ரயில்வே தனியார்மயத்தால் தற்சார்பு பொருளாதாரம் சீர்குலையும் - தபன்சென்

ரயில்வேயில் ரயில்களை இயக்குதல், அடிப்படை கட்டமைப்பு, டிக்கெட் விற்பனை என பகுதி வாரியாக பிரித்து தனியார்மயமாக்கும் மத்தியில்  உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே ஐஆர்சிடிசி என்ற நிறுவனத்தை அரசே உருவாக்கி பிளாட்பாரங்களை கொடுத்துவிட்டது. அலுவலகங்களை தனியார்மய மாக்குதல், சேவை அடிப்படையிலான பணிகளை தனியார் மயமாக்குதல், டிக்கெட் விற்பனை என ரயில்வே சார்ந்த பல பணிகளை படிப்படியாக தனியார்மயமாக்கி வருகிறார்கள்.

ஐ.ஆர்.சி.டி.சி. யில் பணியாற்றிவரும் பெரும்பான்மை யானவர்கள் வெளியில் இருந்து அவுட்சோர்ஸ் முறையில் பணிக்கு வந்தவர்கள். இவர்கள் வெளியில் உள்ள ஏஜென்சி களுக்காக பணியாற்றி வருகிறார்கள். ஐஆர்சிடிசி ஒரு தனியார் பெரு நிறுவனம் போல செயல்பட்டு வருகிறது. இதில் நிரந்தர ஊழியர்கள் வெகு சிலரே. காரணம் இந்த நிறுவனத்தை பல்வேறு அமைப்பினர் கட்டுப்படுத்து கின்றனர். அரசின் சித்து விளையாட்டு தெளிவாக உள்ளது. தற்போது ஐ.ஆர்.சி.டி.சி யை பயன்படுத்தி சில ரயில்களை தனியார் ஏஜென்சிகளை வைத்து இயக்கும் பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒன்று இரண்டு  ரயில்கள் ஏற்கெனவே இயங்கத் தொடங்கி விட்டன.

தேஜாஸ் ரயில் முதல் நாள் ஓடும்போதே காஸியா பாத்தில் ரயில்வே ஊழியர்களால் மறிக்கப்பட்டது. தனி யார்மயத்தை எதிர்த்து தன்னெழுச்சியாக ரயில்வே ஊழி யர்களே அந்த ரயிலை மறித்தனர். ஆனால் அந்த போராட்டம் தொடர்ந்து உயிர்த்துடிப்போடு இருக்காது. காரணம் அமைப்பு ரீதியில் ரயில்வே ஊழியர்கள் திரளவில்லை. ரயில்வேயில் இந்த பிரச்சனை உள்ளது.  மிகப்பெரிய ரயில்வே ஊழியர் சம்மேளனங்கள் அதற்கு தயாராகவில்லை.

வெளிப்படையாகப் பேசி மறைமுகமாகச் செயல்படுத்துதல்

தெற்கு ரயில்வேயில் டி.ஆர்.இ.யூ, ஐ.சி.எஃப் ஒர்க்கர்ஸ் யூனியன் ஆகியவை தான் தொடர்ந்து தனியார்மயத்திற்கு எதிராக கடுமையாகப் போராடி வருகின்றன. ஒட்டுமொத்த ரயில்வே தனியார் மயம் அரசால் இறுதி செய்யப் பட்டுள்ளது. மற்ற துறைகளோடு ஒப்பிடும் போது இந்த ரயில்வே விஷயத்தில் மத்திய அரசு எதையும் மறைக்கவில்லை. வெளிப்படையாகவே தனியார்மயத்தை பற்றி பேசுகிறது. ஆனால் துறைகளில் மறைமுகமாக தனி யார்மயத்தை புகுத்திவருகிறது. ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ “ரயில் பந்து’’ மாத இதழில் ரயில்வே துறை யில் எப்படியெல்லாம் தனியார்மயத்தை புகுத்தப்போகி றோம் என்பதை அறிவித்துவிட்டனர்.

400 ரயில்நிலையங்களை தனியாரிடம் தாரைவார்க்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். ராஜ்தானி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் தனியார்மய பட்டியலில் உள்ளன. கெடுவாய்ப்பாக இந்த மோசமான விளைவுகள் குறித்து ரயில்வே ஊழியர்கள் மத்தியில் போதுமான அளவு விழிப்புணர்வு இல்லை. தனியார்மயத்தின் தீமைகளை ஊழியர்கள் தெரிந்துகொள்ளாவிட்டால் அரசின் நட வடிக்கைகளை தடுத்து நிறுத்தமுடியாது. இதை தடுத்து நிறுத்தாவிட்டால் ஏற்படும் பேரழிவால் ரயில்வே மட்டு மல்ல நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கே பெரும் தீங்கு ஏற்படும்.  எனவே தான் நாங்கள் இதை திரும்பத் திரும்பச் சொல்லிவருகிறோம். அங்கீகரிக்கப்பட்ட ரயில்வே  தொழிற்சங்கத்தினரிடமும் எடுத்துச் சொல்லி வருகிறோம். ஆனால் அவர்களிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.

முதல்முறையாக கடந்த அக்டோபர் மாதம் தனியார் மயத்திற்கு எதிராக ரயில்வே தொழிற்சங்கங்கள் குறிப்பாக  ஏ.ஐ.ஆர்.எஃப், என்.ஐ.ஆர்.எஃப் போன்ற அங்கீகரிக்கப் பட்ட சம்மேளனங்கள் வெளிப்படையாக போராட முன்வந்தன. இது நல்லதுவக்கம். இதுபோன்ற தனியார் மயத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று வெளிப்படையாக அவை அறிவித்தன. அரசின் நட வடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்.23ஆம் தேதி கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்தன. ரயில்வே வாரியத்தலைவர் அமைச்சர் ஆகி யோருக்கு அவை எழுதிய கடிதத்தில் இதை தெரி வித்திருந்தன.

ரயில்வே மிகப்பெரிய  அமைப்பு. ஏராளமான ஊழி யர்கள் இதில் பணிபுரிகிறார்கள். அனைத்து பிரிவினரும் ஒன்று சேர்ந்து போராடினால் தான் தனியார்மயத்தை வெற்றிகரமாக தடுத்து நிறுத்த முடியும். ரயில்வே தனியார் மயமானால் பாதிக்கப்படப்போகும் அனைத்து தரப்பின ரும் ஈடுபடாமல் போராட்டம் வெற்றிபெறாது.  ரயில்வே சம்மேளனங்கள் எதை செய்தாலும் அதை வெளிப்படை யாக அறிவித்து செய்யவேண்டும், அப்போதுதான் சாமானிய மக்களும் தனியார்மயத்தின் தீங்குகளை அறிந்துகொள்வார்கள். இது மிக மிக அவசியம். இதற்கான முயற்சிகளை தொடங்க வேண்டும்.

பொதுத்துறை நிறுவனம் என்ற பெயரில் ஏமாற்று

இப்போது புதிய நிலைமை உருவாகி வருகிறது. அரசு  ரயில்வே உற்பத்திப் பிரிவை தனியார்மயமாக்கப் போவ தாக அரசு அறிவித்த பின்னர் பிரதான சங்கங்கள் வந்தா லும் வராவிட்டாலும் தனியார்மயத்திற்கு எதிராக பெரும் போராட்டங்களுக்கு திட்டமிடப்படுகிறது. முதலில் ரயில்வே உற்பத்தி பிரிவுகளை தனியார்மயமாக்கப் போவதாக அரசு அறிவித்தது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, நாங்கள் தனி பொதுத்துறை நிறுவனத்தை தொடங்கி அதனிடம் உற்பத்தி பிரிவுகளை ஒப்படைக்கப் போகிறோம். ஏன் அதை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்று அமைச்சர் கேட்டார். அது  சுயேட்சையாக செயல்படும் என்று கூறி அதை நியாயப்படுத்து கிறார்கள். அரசின் ஒருபகுதியாக உள்ள உற்பத்திப் பிரிவு மற்றும் ரயில்வே நிர்வாகத்தை ஒரு கம்பெனி பதிவு சட்டத்தின் கீழ் நிறுவனமாக பதிவு செய்யப்போகிறார்கள். ஐ.ஆர்.சி.டி.சி போல ரயில்வேயில் இருந்து இது தனித்து செயல்படும். அதில் கார்ப்பரேட் முதலீடு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இந்த நிறுவனத்தை தனியாரிடம் விற்று விடமுடியும். உற்பத்திப் பிரிவுகளை இப்படி தனியார்மய மாக்கி தனி நிறுவனமாக மாற்றினால் தான் எளிதாக தனியாரிடம் விற்க முடியும். எனவேதான் பொதுத்துறை நிறு வனமாக்குகிறோம் என்று அரசு நம்மை ஏமாற்றப்பார்க் கிறது. இதில் உள்ள சூட்சுமத்தை ரயில்வே ஊழியர்கள் தெளி வாக புரிந்துகொள்ள வேண்டும். ரயில்வே நேரடியாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது அவ்வளவு எளிதாக விற்பனை செய்துவிடமுடியாது. தனியார்மயத்திற்கு அவர் களுக்கு தனி நிறுவனம் என்ற தொழில்நுட்ப தந்திரம் தேவைப்படுகிறது.

இப்போது உற்பத்தி நிறுவனங்கள் ரயில்வே கட்டுப் பாட்டில் இருப்பதால் ரயில்வேக்கு தேவையான ஆர்டர்கள் தானாக வந்து கொண்டிருக்கின்றன. தனி நிறுவனமானால் உலக வர்த்தக ஒப்பந்த விதிகளை பின்பற்றவேண்டும். நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை கொள்முதல் போட்டி அடிப்படையில்  டெண்டர் விடவேண்டும். அந்த டெண்டரில் தனியார் நிறுவனங்களும் பங்கேற்க முடியும், இதில் அல்ஸ்தாம், ஜிஇஏ போன்ற பெரிய பன்னாட்டு நிறு வனங்கள் பங்கேற்கும். தேவை இல்லாவிட்டாலும் இவை களிடமிருந்து ரயில்வே ஏற்கனவே சில பொருட்களை கொள்முதல் செய்து வருகிறது. இப்போதுவெளிப்படையாக இந்த நிறுவனங்களுக்கு கதவு திறந்து விடப்படுகிறது. இது குறித்து இடதுசாரிக்கட்சிகள் ஏற்கெனவே பாஜக ஆட்சியில்  மட்டுமல்ல கடந்தகால காங்கிரஸ் ஆட்சியிலும் நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளன. எனவே தான் எளி தாக தனியார்மயமாக்க ரயில்வேயில் உள்ள ஒவ்வொரு பிரிவுகளையும் தனியார் பெரு நிறுவனங்களாக மாற்ற அரசு முயற்சிக்கிறது.

உற்பத்திப் பிரிவுகளை தனியார்மயமாக்கும் தந்திரம்

உலக பொருளாதார மந்த நிலையால் பன்னாட்டு நிறு வனங்களும் முழுத் திறனுடன் உற்பத்தியில் ஈடுபட வில்லை. உற்பத்தியை குறைத்துள்ளன. அவர்களுக்கும் முழு ஆர்டர் கிடைக்கவில்லை. எனவே ஆலையின் முழுத் திறனை உருவாக்கவேண்டுமானால் இந்திய ரயில்வே உற்பத்திப் பிரிவு ஆர்டர்களை கைப்பற்றியே ஆக வேண்டும். காரணம் உலகில் இரண்டாவது மிகப்பெரிய ரயில்வே இந்திய ரயில்வே ஆகும். ஆண்டுதோறும் இந்திய ரயில்வே மிகப்பெரிய கொள்முதலில் ஈடுபட்டு வரு கிறது. எனவேதான் உற்பத்திப் பிரிவுகளை தனியார்மய மாக்குதல் என்ற தந்திரத்தை ஆட்சியாளர்கள் கையில் எடுத்துள்ளனர். பாதுகாப்புத்துறையிலும் இதே போன்ற தந்திரத்தை கையாண்டார்கள். நாடு முழுவதும் உள்ள 41 ஆயுத தளவாட தொழிற்சாலைகளை தனியார் நிறுவன மாக மாற்ற முடிவு செய்துள்ளனர். நவம்பர் 20 அன்று கூட நாடாளுமன்றத்தில் அமைச்சர் இதை சொல்லி யிருக்கிறார். தற்போதுள்ள ஆயுத தளவாடத் தொழிற்சாலைகள் பாதுகாப்புத்துறைக்கு  தேவைப்படும் 75 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட தளவாடங்களை உற்பத்தி செய்து தருகின்றன. இது  மறைந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நாடாளுமன்றத்தில் சொன்னது.  25 விழுக்காடு பொருட்கள் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஏனென்றால் அவை புதிய  தொழில்நுட்பத்தில் உருவான தளவாடங்கள். அதை நாம் உற்பத்தி செய்யமுடியாது. அப்படியே வெளிநாட்டில் இருந்து தளவாடங்களை கொள்முதல் செய்தாலும் அதன் தொழில்நுட்பத்தையும் இந்தியாவிடம் அந்த நிறு வனங்கள் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதுதான் இது வரை மத்தியில் இருந்த அரசுகளின் கொள்கையாக இருந்தது. 

எப்போதெல்லாம் வெளிநாட்டில் இருந்து ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்கிறோமோ அப்போதெல்லாம் அந்த தொழில்நுட்பம் நமது பாது காப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு கிடைக்கும். உதாரணமாக மிக் போர் விமானம். இதை முதலில் அரசு வெளிநாட்டில் இருந்து கொள்முதல் செய்தது. பின்னர் நமது நாட்டில் உள்ள இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல்ஸ் என்ற பொதுத்துறை நிறுவனத்தால் அந்த விமானம் உள்நாட்டிலேயே  தயாரிக்கப்பட்டது. நீர்முழ்கிக் கப்பலும் அப்படித்தான் இந்தியாவில் கட்டப்பட்டது.  கடந்த 70 ஆண்டுகளில் நமது பொதுத்துறை கப்பற்கட்டும் தளங்களில் நீர்முழ்கிக் கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. நாட்டில் மிகப்பெரிய நிறுவனங்களாக ஆயுத தளவாட உற்பத்தி நிறுவனங்களும் கப்பல்கட்டும் நிறுவனங்களும் திகழ்கின்றன. ரயில்வேயிலும் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டது. சொந்தமாக ரயில்வே  உற்பத்திபிரிவுகள் தொடங்கப்பட்டன. சுதந்திரத்திற்கு முன்பே இவை தொடங்கப்பட்டன. இதுதான் இந்தியா வின் பாரம்பரியம். இவை எல்லாம் தானாக முளைத்து விடவில்லை. எனவே தான் அரசின் கட்டுப்பாட்டில் இந்த பிரிவுகள் இருக்கும் போது ஏதுவும் செய்ய முடியாது.

நிறுவனமாக மாற்றினால் எளிதாக அதன் பங்கு களை தனியாருக்கு விற்றுவிட முடியும் என்பதால் அரசு சதி செய்கிறது. இந்த சதித் திட்டத்தை  ஊழியர்கள் புரிந்து கொள்ளவேண்டும். எனவே தான் அரசின் இந்த தேச விரோத நடவடிக்கைகளை எதிர்த்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் போராடி வருகின்றன. நமதுநாட்டின் சுதந்திரப் போராட்டத்தோடு பின்னிப் பிணைந்த குரலாக ஒலித்தது தற்சார்பு பொருளாதாரமாகும். நமது சுதந்திர இந்தியாவில் முழுத் திறனை வெளிப்படுத்தி உருவாக்கப் பட்டுள்ள உற்பத்தி நிறுவனங்கள் அரசின் தனியார்மய நடவடிக்கையால் முற்றிலும் சீரழிக்கப்பட்டு விடும். அல்லது சுரண்டப்பட்டுவிடும். இது ரயில்வே ஊழியர்களுக்கு மட்டும் எதிரானதோ, நாட்டுமக்களுக்கு மட்டும் எதிரானதோ அல்ல; ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரான செயல்.

தனியார் சுரண்டலுக்கு அரசு ஏற்படுத்திக் கொடுக்கும் பாதை

ரயில் நிலையங்களை தனியார்மயமாக்கும் போது ரயில் நிலையங்களில் உள்ள ரயில்வே ஊழியர்கள் வேறு பணிக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். தனியார் தனது ஊழியரை நியமித்துக்கொள்வர். மேலும் ரயில்வே  நிலையங்களோடு உள்ள விலைமதிப்புமிக்க நிலங்களும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். அதை தனியார் நிறு வனங்கள் தனது சொந்த ஆதாயத்திற்காக வர்த்தக ரீதியில் கடைகள் வணிக வளாகங்கள் அமைத்து பயன்படுத்திக் கொள்வார்கள். ரயில்நிலைய வருவாயை மட்டும் ரயில்வே யுடன் தனியார் பகிர்ந்துகொள்ளவேண்டும். சொத்துக் களில் வரும் வருவாய் அல்ல என அந்த டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் தனியார் எவ்வளவு வேண்டுமானாலும் சுரண்டிக்கொள்ள தாராளமாக ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

மும்பை, தில்லி, ஐதராபாத் விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்பட்ட பின்னர் இதுதான் நடந்தது. விமானங்களை இயக்கும்போது கிடைக்கும் வருவாயை மட்டும் அரசிடம் அந்த விமானநிலையத்தை குத்தகைக்கு எடுத்த தனியார் நிறுவனங்கள் பகிர்ந்து கொள்கின்றன.ஆனால் வர்த்தக ரீதியில் விமான நிலையங்களில் உள்ள கடைகளில் இருந்து கிடைக்கும் வருவாயை பகிர்ந்து கொள்வதில்லை. விமான நிலையத்திற்குள் உள்ள டீக்  கடைகளில் ஒரு கோப்பை தேநீர் 150 ரூபாய் என்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று பார்த்துக்கொள்ளுங் கள். இதுதான் தனியார் சுரண்ட அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ள புதிய பாதை. இப்படி அரசின் சொத்துக்கள் பகிரங்கமாக சூறையாடப்படுகின்றன. இதைநாம் மக்களி டம் அம்பலப்படுத்தவில்லை என்றால்,  “ தனியார்துறை தான் சிறந்தது.அவர்கள் தான் சிறந்த நிர்வாகத்தை அளிப்பார்கள். தனியார்தான் நியாயமானவர்கள்’’ என்ற பேச்சுதான் மக்களிடம் இருக்கும். இந்த விஷயத்தில் நமது ஊழியர்களையும் குழப்புவார்கள். எனவே நாம் தெளிவாக இருக்கவேண்டும்.

மானியத்தை ஒழித்தால்  கட்டணம் இரு மடங்காகும்

ரயில்வேயில் அரசின் மானியம் படிப்படியாக ஒழிக்கப்படும் என்று ரயில்வே கூறியுள்ளது. தற்போது ஒரு ரூபாய் டிக்கெட்டில் அரசு 43 பைசா மானியமாக தருகிறது. இந்த மானியம் ஒழித்துக்கட்டப்பட்டால் ரயில்கட்டணம் இரு மடங்காக உயர்ந்துவிடும். நாட்டுமக்களின் மீதுதான் இந்த சுமை வந்துவிழும்.  நமது நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையோடு  ரயில்வே பின்னிப் பிணைந்துள்ளது. ரயில்வே இல்லாமல் இந்தியாவை ஒரு  நிமிடம் கூட  நினைத்துப்பார்க்கமுடியாது. அமைப்புரீதியாக திரட்டப் படாத தொழிலாளர்கள் பலர் வேலைக்கு கிராமத்தில் இருந்து  நகரத்திற்கு வருவதற்கு ரயில்களை நம்பியுள்ளனர். குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து சேவை அளிப்பது இந்திய ரயில்வே தான். எனவே கட்டணம் இருமடங்கு ஆனால் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சீர்குலையும். எனவே ரயில்வேயை பொதுத்துறையாக தொடர்ந்து பாதுகாப்பதில்தான் இந்த நன்மைகள்  அடங்கியுள்ளன என்பதை ஊழியர்கள் மக்களிடம் சொல்லவேண்டும். ரயில்வேயை பாதுகாக்க ரயில்வே ஊழியர்கள் மட்டுமல்ல அதைபயன்படுத்தும் பொதுமக்களையும் இணைத்து போராடவேண்டும்.எனவே உறுதியான போராட்டத்திற்கு நாம் முன்முயற்சி எடுக்கவேண்டும்.

தனிப்பட்ட முறையில் நம்மிடம் பேசும்போது, ரயில்வே யில் உள்ள பிரதான தொழிற்சங்க தலைவர்கள் ரயில்வே தனியார்மய ஆபத்துக்களை பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால் அதற்கு எதிராக வெளிப்படையாகப் போராடவும் கருத்துக்களைத் தெரிவிக்கவும் முதலில் தயங்கினார்கள். ஆனால் தற்போது வெளிப்படையாக பேச முன்வந்திருப்பது நல்ல அம்சம். கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கண்டன இயக்கம் நடத்தியது வரவேற்கத்தக்கது. தனி யார்மயத்தை எதிர்க்க தொழிலாளர்கள் தயார். ஆனால் அமைப்பு ரீதியில் அதற்கு தலைமை தாங்கவேண்டியது தொழிற்சங்கங்களே. எனவே உறுதியான திட்டத்தோடு போராட்டத்திட்டங்களை வகுக்கவேண்டும்.

 தனியார்மயத்திற்கு எதிராக டி.ஆர்.இ.யூ,  ஐசிஎப் ஓர்க்கர்ஸ் யூனியன், ஸ்டேசன் மாஸ்டர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் நடத்திய கருத்தரங்கில் சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் பேசியதில் இருந்து...
தொகுப்பு : அ.விஜயகுமார்



 

;