tamilnadu

img

வங்கிகள் இணைப்புக்கு எதிராக இணைவோம்!

10  வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்றி,  பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை 12 ஆகக் குறைக்க அரசு முடிவெடுத்து நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு. நூற்றாண்டைக் கடந்து சொந்த வரலாறுகளோடு விளங்கும் வங்கிகளை சிதைத்து, அவற்றை வேறு வங்கிகளோடு கொண்டு இணைத்து, ஊழியர்க்கோ, வாடிக்கையாளர்க்கோ, தேசத்திற்கோ ஒரு தம்படி நன்மையும் விளையாத ஓர் உருப்படியற்ற திட்டத்தை சீர்திருத்தம் என்ற பெயரில் நிறைவேற்றுகின்றனர். நாடாளுமன்றத்தில் கூட விவாதம் நடத்தாமல், நாட்டு மக்களிடம் ஆலோசனை கேளாமல் மூர்க்கமாக மக்கள் தலையில் திணிக்கும் இந்த அராஜகத்திற்கு எதிராகத் தான் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மற்றும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின்  அறைகூவலை ஏற்று, வங்கி ஊழியர்கள் அக்டோபர் 22ஆம் தேதி அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றனர்.

ஏற்கனவே இணைத்து என்ன சாதித்தார்கள்?
1993ஆம் ஆண்டில், வெறும் 75 கோடி நஷ்டத்தைக் காட்டி, நியூ பேங்க் ஆப் இந்தியாவை பஞ்சாப் நேஷனல் வங்கியோடு சேர்த்தபோது, இணைக்கப்பட்ட வங்கியின் பணியாளர்கள் பட்ட பாடுகளின் வேதனைக்குரல்கள் இன்றுவரை ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளை (முதலில் ஸ்டேட் பேங்க் ஆப் சவுராஷ்ட்டிரா (2008), அப்புறம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தூர் (2010), பின்னர் 2017ல் மீதமிருந்த 5 துணை வங்கிகள்) ஸ்டேட் வங்கியோடு இணைத்தனர். ஏப்ரல் 2019 அன்று தேனா வங்கி மற்றும் விஜயா வாங்கி இரண்டையும் பேங்க் ஆப் பரோடாவுடன் இணைத்து விட்டனர்.   இவற்றால் என்ன சாதித்துள்ளனர் நமது கொள்கை வீரர்கள்?

பல்லாயிரம் கிளைகள் மூடல். வாடிக்கையாளர்களுக்கு தொட்டதற்கெல்லாம் கட்டணம், அபராதம். இத்தனையும் எதற்கு? கார்ப்பரேட் கடன்தாரர்களுக்கு பல்லாயிரம் கோடி கடன் ரத்து. அடடா, எத்தனை பெரிய இலட்சியக் கடமை.  காலகாலமாக லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த தேசத்தின் பெரிய வங்கி நஷ்டக்கணக்கின் புதிய வரலாற்றில். வராக்கடன், வராக்கடன் என்று ஊழியர் சங்கங்கள் அபாயக் குரல் எழுப்பி, ‘பெருந்தொழில் நிறுவனங்களின் கொள்ளையை நிறுத்து, வங்கிகளை ஏய்ப்போரைச் சிறையிலடை, சொத்துக்களைப் பறிமுதல் செய், தேர்தல்களில் போட்டியிட தடை கொண்டு வா’ என்று கோரிக்கைகள் வைத்தால், கதையையே மாற்றி, பொதுத்துறை வங்கிகள் திறமையற்றவை, அவற்றை இணைப்போம், மூடுவோம், தனியாருக்கு விற்போம், இந்த அமளி துமளியில் ஓசைப்படாமல் பெருவர்த்தகச் சூதாடிகளைத் தப்பித்து ஓடிவிடச் செய்வோம், அவர்களை பாதுகாப்போம்  என்று முரட்டுத்தனமான எதிர்ப்பாதையில் நடக்கிறது அரசு.

இந்த இணைப்பு எதற்காக?
கிராமப்புற ஏழை எளிய மக்களது வாங்கும் சக்தியை அதிகரிக்கும் முயற்சியா, இந்த வங்கிகள் இணைப்பு? இல்லை.சிறு, குறு விவசாயிகள் மேம்பாட்டிற்குச் சிறிதேனும் உதவக் கூடிய திட்டமா இந்த வங்கிகள் இணைப்பு? இல்லவே இல்லை.
சிறுவணிகர், சில்லரை வர்த்தகர்,  சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் முன்னேற்றத்திற்குக் கொஞ்சமாவது பயனளிக்குமா இந்த வகை இணைப்பு?  அறவே இல்லை. சாதாரண மக்கள், ஓய்வூதியர், நலிந்த பிரிவினர் போன்றோர்க்கு ஏதேனும் வகையில் வாழ்வளிக்கப் போகிறதா இந்த வங்கிகள் இணைப்பு. முக்காலும் இல்லை. இணைக்கப்படும் வங்கிகளில் பணியாற்றும் ஊழியர், அதிகாரிகள் உரிமைகள், சலுகைகள் ஏதேனும் திடீரென்று உயர்ந்துநிற்க வழி செய்யப்போகிறதா இந்த வங்கிகள் இணைப்பு? என்ன கேடுகெட்ட கேள்வி இது... இணைக்கப்படும் வங்கிகளது வாடிக்கையாளர்களுக்கு இதுகாறும் கிடைக்காத உன்னதமான உயர் சேவைகள் ஏதேனும் உறுதிப்படுத்துமா இந்த வங்கிகள் இணைப்பு? ஆஹா, என்ன மடத்தனமான கேள்வி இது. வராக்கடன்கள் எல்லாம் ஒரு சொடுக்கில் வசூலாகி, பேலன்ஸ் ஷீட்கள் எல்லாம் பரிசுத்தமாகி பளீர் பளீர் என்று ஒளிமயமாகக் காட்சி அளிக்கத்தான் வழிவகுக்கிறதா இந்த வங்கிகள் இணைப்பு? யாருப்பா அங்கே,  என்ன கேட்கிறாங்க பாரு கேள்வி!

வராக் கடன்களை வசூலிக்கவா? 
அப்படியானால் எதற்காக வங்கிகள் இணைப்பு? இந்த நிமிடம் வரை ஒற்றைக் காரணம் கூடச் சொல்லப்படாமல் திணிக்கப்படுகிறது வங்கிகள் இணைப்பு. வங்கிகள் இணைப்பினால் மூண்டெழக்கூடிய பாதிப்புகள் பற்றி பதில் சொல்லக்கூடத் தயாராயில்லாமல் வேகமாக நிறைவேற்றப்படுகிறது இந்த இணைப்பு. என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள், இப்படித்தான் எல்லாம் நடக்கும் என்று வேகவேகமாக நகர்த்தப்படுகிறது வங்கிகள் இணைப்பு. இந்த அநியாயத்திற்கு எதிராகத்தான் அக்டோபர் 22ல் வேலைநிறுத்தம் மேற்கொள்ள இருக்கின்றனர் வங்கி ஊழியர்கள்.

புதுதில்லியில் செப்டம்பர் 30 அன்று நடைபெற்ற அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட கூட்டத்தில், மக்கள் விரோத தொழிலாளர் விரோத அரசின் கொள்கைகளுக்கு எதிரான நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை வரும் ஜனவரி 8ஆம் நாள் அன்று நடத்த அறைகூவல் விடப்பட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாகவே வருகிறது  இந்த அக்டோபர் 22 வேலைநிறுத்தம்.1947ல் தேச விடுதலைக்குப் பிறகு, 1969 ஜூலை 19 அன்று வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட நாள் வரை, நூற்றுக் கணக்கில் காணாமல் போன தனியார் வங்கிகள் இழைத்த கொடுமையும், நஷ்டமும், மக்கள் வேதனையும் சொல்லி மாளாது.  1990களில் தொடங்கிய உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்ற முக்கொடுங் கொள்கை திசைவழிக்கு எதிரான தீர்மானமான போராட்டங்களால் இத்தனை ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் புறந்தள்ளப்பட்டு தள்ளிப்போடப்பட்டு வரும் சீர்திருத்தங்களை இப்போதைய ஆட்சியாளர்கள் வெறித்தனமாக நடைமுறைப்படுத்துவது தேச நலனுக்கு உகந்தது அல்ல.

இப்போது தேவைப்படுவது
2008ல் உலக பொருளாதார நெருக்கடி நேர்ந்தபோது, அதிக பாதிப்பின்றி இந்திய தேசம் சமாளித்து எதிர்கொள்ள முடிந்ததே, நிதித்துறை பொதுத்துறையில் இருந்ததால்தான் என்று உலக பொருளாதார நிபுணர்களே சுட்டிக்காட்டி இருந்தனர். அதன் வேரில் வெந்நீர் ஊற்றப்படுவதற்கு எதிராக மக்கள் திரண்டெழ வேண்டும் என்ற தேச பக்த உணர்வுகளோடுதான் வங்கிகள் இணைப்புக்கு எதிராகத் திரள்கின்றனர் வங்கி ஊழியர்கள்.இப்போது தேவைப்படுவது, இன்னும்கூட வங்கிச்சேவை இல்லாது அவதியுறும் பல்லாயிரம் சிற்றூர்களின் மக்களுக்காகக் கூடுதல் கிளைகள் திறப்பு - இருக்கும் கிளைகளை மூடுவது அல்ல!

இப்போது தேவைப்படுவது, ஏற்கெனவே நிலவும் காலியிடங்களுக்கும், புதிய தேவைக்குமான குறைந்த பட்சம் ஒரு லட்சம் புதிய ஊழியர் பணி நியமனம் - இட ஒதுக்கீட்டினால் உறுதி செய்யப்பட வேண்டிய சமூக நீதி  - பணியில் இருப்போரை வீட்டுக்கு அனுப்பும் விருப்ப ஓய்வு வாசலைத் திறக்கும் வேலை அல்ல!இப்போது தேவைப்படுவது, சாதாரண மக்கள் நம்பிக்கையோடு வந்து வங்கிகளில் கணக்குகளை இயக்கும் ஆரோக்கியமான சூழல் - தேவையற்ற கட்டண விதிப்போ, அபராத தண்டனைகளோ அல்ல!இப்போது தேவைப்படுவது, எளிய வட்டி வீதத்தில் ஏழை விவசாயிகள், சிறு வர்த்தகர்கள், சிறு தொழில் முனைவோருக்கான கடன்கள், அதை வழங்க மேலும் வலுப்படுத்தப்பட்ட பொதுத்துறை வங்கிகள் - கந்துவட்டி போல் மீட்டர் வட்டி தீட்டும் தனியார் நிதி நிறுவனங்கள் அல்ல !அதனால்தான் எதிர்க்கிறோம் வங்கிகள் இணைப்பை! அதனால்தான், வற்புறுத்துகிறோம் பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்தவேண்டும் என்பதை! அதனால்தான் முன்னெடுக்கிறோம் போராட்டத்தை! அதனால்தான், மக்கள் மன்றத்தில் எதிரொலிக்க விரும்புகிறோம் இணைப்புக்கு எதிரான முழக்கங்களை! வாடிக்கையாளர் - பொது மக்கள் வங்கிகள் இணைப்பால் நேரக்கூடிய மிகப் பெரிய பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு, இந்த ஒருநாள் வேலை நிறுத்தம் ஏற்படுத்தக்கூடும் பாதிப்புகள் தங்களது நலனுக்கான தவிர்க்கமுடியாத ஒரு சிறிய பாதிப்பு என்று எடுத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு வங்கி ஊழியர்கள் களத்தில் நிற்கின்றனர்.

====எஸ்.வி.வேணுகோபாலன்====

;