tamilnadu

img

ஜனவரி 8 முடிவல்ல, துவக்கமும் அல்ல... ஏ.கே.பத்மநாபன்

வருகிற ஜனவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய பொதுவேலைநிறுத்தம் 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தொடங்கப்பட்ட மத்திய அரசினுடைய  மக்கள்விரோத பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.1991 ஆம் ஆண்டு  ஜூலை மாதத்தில் அன்று நரசிம்மராவ் தலைமையில் இருந்த  காங்கிரஸ் அரசில் டாக்டர் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தார்.  ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த பொருளாதார கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டு, ஒரு சேமநல அரசு என்கிற நிலையில் இருந்து முற்றிலுமாக பின்வாங்கும் வகையில் அவர் உருவாக்கிய பொருளாதார கொள்கைகள் இருந்தன. முதலாளிகளுக்கும் தொழில் அதிபர்களுக்கும் சலுகைகளையும் சகலவிதமான ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கக்கூடியது தான் அரசாங்கத்தின் பணி என்கிற முறையில் தொழிலாளர்களுக்கு எதிராக, உழைப்பாளி மக்களுக்கு எதிராக அந்த கொள்கைகள் தாக்குதல்களை தொடுத்தன.

அந்த அரசின் கொள்கைகளுக்கு எதிராக அந்தாண்டு நவம்பர் மாதத்தில் ஒரு அகில இந்திய வேலைநிறுத்தம் நடைபெற்றது. ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் அந்தப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை.  “அரசாங்கம் மேற்கொள்ளக்கூடிய கொள்கைகளுக்கு மாற்றே இல்லை, வேறு வழியே இல்லை’’ என்று அன்று அரசாங்கமும் நிபுணர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.அதை சில தொழிற்சங்கங்களும் ஏற்றுக்கொண்டிருந்தன. ஆனால் 1991க்கு பிறகு 2010 வரை நமக்கு கிடைத்திருக்கக்கூடிய அனுபவங்கள், “அன்று தொடங்கப்பட்ட போராட்டம் என்பது சரியானது, நியாயமானது, தேவையானது’’ என்பதை  தெளிவுபடுத்தியுள்ளது. 

ஜகா வாங்கிய பிஎம்எஸ்
2009ஆம் ஆண்டு  அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் கிட்டத்தட்ட யாருமே விடுபடாத அளவுக்கு சுயேட்சையான தொழில்வாரியான சம்மேளனங்களும் ஒன்றிணைந்து போராடவேண்டிய நிலைமை உருவானது. 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு மோடி முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு மேற்கொண்ட மோசமான கொள்கைகளை எதிர்த்து ஆண்டுதோறும் நடைபெறும் வேலைநிறுத்தமும்  தொடர்கிறது. இந்த போராட்டத்திற்கான தேதியை  நிர்ணயித்தபோது அதில் கையெழுத்திட்ட பாஜகவின் தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங் (பிஎம்எஸ்) அன்றைக்கு பின்வாங்கியது. ஆகவே அன்றிலிருந்து தொடர்ச்சியாக இன்று வரை பிஎம்எஸ் தவிர உள்ள எல்லா மத்திய தொழிற்சங்கங்களும் அதாவதுஏஐடியுசி,ஐஎன்டியுசி, சிஐடியு எச்.எம்.எஸ். ஏஐசிசிடியு, தொமுச,யுடியுசி,டியுசி, சுயவேலைவாய்ப்பு பெண்கள்சங்கம் சேவா உள்பட இருக்கக்கூடிய  மத்திய தொழிற்சங்கங்கள், வங்கி, காப்பீடு உள்ளிட்ட மத்தியஅரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், பாதுகாப்புத்துறை ஊழியர்கள், தொலைத்தொடர்புத்துறை, அஞ்சல் ஊழியர்கள் ஊழியர்கள் என்று துறைவாரியான சுயேட்சையான சம்மேளனங்கள் உள்பட வருகிற ஜனவரி 8ஆம் தேதி நடைபெறக்கூடிய அகில இந்திய வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள்.

கோரிக்கைகள் என்ன?
இந்த வேலைநிறுத்தம் அரசினுடைய தாராளமய கொள்கைகளை எதிர்த்து நடைபெறக்கூடிய வேலைநிறுத்தமாகும். சொல்லப்போனால் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற வேலைநிறுத்தம் மற்றும் ஓராண்டுக்கு முன்பு  ஜனவரி 8, 9ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரண்டுநாள் வேலைநிறுத்தம் வரை  17 வேலைநிறுத்தங்களிலும் அடிப்படையான கோரிக்கைகள் ஒன்றுதான். தொழிலாளர்களுடைய உரிமைகளை பாதுகாக்கவேண்டும், சட்டத்திருத்தங்கள் தொழிலாளர்களுக்கு எதிராக இருக்கக்கூடாது, தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்படும் போது  தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கவேண்டுமே தவிர முதலாளிகளுக்கு சலுகை செய்யக்கூடிய, மற்றும் அவர்களை ஆதரிக்கக்கூடியவையாக அது அமையக்கூடாது, குறைந்தபட்ச ஊதியம், சமூகப்பாதுகாப்பு திட்டங்கள், தொழிற்சங்க உரிமைகள், கூட்டுப்பேர உரிமை பாதுகாக்கப்படவேண்டும், அங்கன்வாடி,ஆஷா போன்ற மத்திய அரசின் திட்டங்களில் பணியாற்றக்கூடிய கோடிக்கணக்கான  தொழிலாளர்களுக்கு தொழிலாளர் அந்தஸ்து வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன.

தொடர் போராட்டம் ஏன்?
பொதுத்துறையை தனியார் மயப்படுத்தி தனியாருக்கு தாரைவார்க்கக்கூடிய கொள்கைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடியதன் விளைவாக அரசாங்கத்தினுடைய கொள்கைகளை முற்றிலுமாக ரத்து செய்யமுடியாவிட்டாலும், அதனுடைய வேகத்தை குறைப்பதற்கு எங்களால் முடிந்திருக்கிறது. உதாரணமாக பொதுத்துறை தனியார்மயம் என்கிற முயற்சி 1991ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. தமிழகத்தை பொறுத்தவரை கிண்டியில் இருந்த இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் (எச்டிஎல்) உள்ளிட்ட சில பொதுத்துறை நிறுவனங்களை அப்போதைய மத்திய அரசு  தனியாரிடம் தாரைவார்த்துவிட்டது. ஆனால் தொடர்ச்சியாக அரசு எடுத்த முயற்சிகளை எதிர்தது தொழிலாளர்களை திரட்டி சங்கங்கள்  போராடியதும், இடதுசாரி அரசியல் கட்சிகள், அவர்களுக்கு உள்ள அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி இந்த நடவடிக்கைகளை எதிர்த்ததால் சில பங்குகள் விற்பனை என்கிற அளவுக்கு அரசாங்கம்  தள்ளப்பட்டதே தவிர பொதுத்துறை நிறுவனங்களை முற்றிலுமாக தனியாருக்கு விற்கக்கூடிய முயற்சியை தொழிற்சங்க இயக்கம் தடுத்திருக்கிறது.கிட்டத்தட்ட 30ஆண்டுகளில் சீர்திருத்தம் என்ற பெயரில் தொழிலாளர் விரோத நடவடிக்கைளை முழுமையான வேகத்தில் கொண்டு செல்லமுடியவில்லை. கடந்த 30ஆண்டுகளில் தொழிற்சங்க இயக்கங்கள் நடத்தியிருக்கக்கூடிய போராட்டமே இதற்கு காரணம்.

மோடி அரசின் மோசமான நடவடிக்கைகள்  
தற்போதுள்ள மத்திய அரசு கடந்தகாலங்களில் செய்யமுடியாத வேலையை செய்கிறது.அதற்கு அவர்களுக்கு துணையாக நிற்பது நாடாளுமன்றத்தில்  ஒற்றைக்கட்சி என்கிற முறையில் பாஜகவுக்கு இருக்கக்கூடிய தனித்த பெரும்பான்மையாகும். இந்த தனித்த பெரும்பான்மையை பயன்படுத்தி ease of doing business என்கிற முறையில் நிறுவனங்கள், முதலாளிகள் எளிதாக தொழில்நடத்துவதற்காக நடைமுறைகளை செய்து தருகிறோம்  என்கிற பெயரால்  தொழிலாளர்களின் உரிமை பறிப்பு, சங்கம் சேரும் உரிமை, போராடிப் பெற்ற பல்வேறு சலுகைகள், உரிமைகளை பறிக்கும் வகையில் சட்டத்திருத்தங்களை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. 44 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றி அந்த நான்கு தொகுப்புகளும் அடிப்படையில் தொழிலாளர்களுடைய நலன்களுக்கு எதிரானதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஊதியம் சம்மந்தமானது, அது நிறைவேற்றப்பட்டுவிட்டது. மற்ற 3 தொகுப்புகளில் ஒன்று பணியிடத்தில் உள்ள பாதுகாப்பு தொடர்பானதாகும். அதேபோன்று சமூகப் பாதுகாப்பு இரண்டாவது, 3வது தொழில்உறவு சம்மந்தப்பட்டது. 

8 மணிநேர வேலை நேரத்திற்கு வருகிறது வேட்டு
இந்த மூன்றும் வெவ்வெறு கட்டங்களாக நாடாளுமன்றத்தின் முன்னாள் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த நான்கு சட்டங்களிலும் இருக்கக்கூடிய  அடிப்படையான அம்சத்தை தெரிந்துக் கொள்ளவேண்டும் என்றால் “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம்’’ என்பதைப்போல 8மணி நேரம் வேலையை   9மணிநேரமாக  மாற்றவேண்டும் என்று மோடி அரசின் புதிய சட்டம் சொல்கிறது. இதுமட்டுமல்ல இன்னும் பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. ஒருநாள் ஊதியத்தை கணக்கிடும்போது, மாத ஊதியத்தை 30ஆல் வகுத்து வரும் தொகையை ஒருநாள்  ஊதியமாக  கணக்கிடவேண்டும் என்று சொன்னால் அரசாங்கம் என்ன சொல்கிறது என்றால் மாத ஊதியத்தை 26 ஆல் வகுத்து ஒருநாள் ஊதியத்தை நிர்ணயிக்கவேண்டும் என்கிறது. வாரவிடுமுறை வழங்கவேண்டும், அதற்கு சம்பளம் வழங்கவேண்டும் என்று நாம் போராடி பெற்றிருக்கக்கூடிய உரிமை. இப்படி பல அம்சங்களில் அரசு மாறுபடுகிறது.

முதலாளிகளுக்காக செயல்படக்கூடிய அரசு
குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்கும் போதும், அதற்கான விதிகளை உருவாக்கும்போதும் தொழிற்சங்க இயக்கம் முன்வைக்கக்கூடிய எந்த ஒரு கருத்தையும் ஆலோசனையையும் அரசு ஏற்க மறுக்கிறது.அவர்களுக்கான சட்ட நகல்களை தயாரித்தவர்களே அரசாங்கம் அல்ல, முதலாளிகள் என்று  தெரிய வருகிறது. அந்த அளவுக்கு முதலாளிக்காகவே செயல்படுகிற அரசாக முதலாளிகளின் சார்பாக சட்டங்களை திருத்தி செயல்படுத்தக்கூடிய அரசாங்கமாக மோடி அரசு மாறியிருக்கிறது என்பதால் தான் எல்லா சங்கங்கங்களும் இதை எதிர்க்கக்கூடிய நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.அரசாங்கம்  அந்த சட்டத் திருத்தங்களை முன்மொழிகிறபோது தொழிற்சங்கங்கள் அதனுடைய தன்மைகளை விளக்கி  நாட்டுமக்களுக்கு எடுத்துச்சொல்லியிருக்கின்றன. அரசாங்கத்தின் இத்தகைய கொள்கைகளை  ஏற்றுக்கொண்டால் நாம் போராடிப்பெற்ற உரிமைகள் பறிபோய்விடும் என்று பிரச்சாரம் செய்துள்ளோம். மிக நுட்பமாக அவர்கள் செய்யக்கூடிய காரியம் என்னவென்றால்,  பல சட்டங்களில் சட்டத்திருத்தம் என்கிற முறையில்  நாடாளுமன்றத்திற்கு கொண்டு வராமலேயே அவர்கள் விருப்பம் போல் செயல்பட நிர்வாக உத்தரவு மூலமாக செயல்படுத்த உள்ளனர். இதன் மூலம் பல சட்டங்களை திருத்தமுடியும்  என்பது இன்றைக்கு ஆட்சியாளர்கள் உருவாக்கியிருக்கக்கூடிய மிகமோசமான சட்டத்திருத்தமாகும். இதை நான்கு தொகுப்புகளிலும் பார்க்கமுடியும்.

முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் அரசு 
பிஎஃப் நிதிக்கான தொழிலாளர்களுடைய பங்களிப்பு  அல்லது முதலாளிகளுடைய பங்களிப்பு 12 சதவீதமாக இருப்பதை அரசாங்கம் நினைத்தால் அவர்கள்ஒரு உத்தரவின் மூலமாக  மாற்றமுடியும். கவேசட்டங்களுக்கான திருத்தங்கள் கூட நாடாளுமன்றத்திற்கு செல்லாமல் அரசினுடைய எந்திரத்தை பயன்படுத்தி செய்யமுடியும் என்பது ஆபத்தானது. தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்வதற்கான அனுமதிக்கு அரசாங்கத்தின் ஒப்புதலைபெறவேண்டும் என்று இருக்கிறது. ஆனால் அரசாங்கம் விருப்பப்பட்டால் அரசு உத்தரவு மூலம் அதை மாற்றமுடியும் என்று புதிய நகல் சொல்கிறது. இப்படி பல விஷயங்களை இந்த சட்டத்திருத்தங்கள் மூலமாக  மத்திய ஆட்சியாளர்கள் பகிரங்கமாகவே அறிவிக்கக்கூடிய அளவுக்கு  முதலாளிகளுக்கான சட்டத்திருத்தங்களாக அவை உள்ளன. இது தற்செயலாக நடந்தது அல்ல. தொடர்ந்து நடக்கக்கூடிய முயற்சியின் விளைவாகும்.  மே 30அன்று இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற ஒருமணிநேரத்தில்  நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ்குமார் என்ன சொன்னார் என்றால், “நாங்கள் மிகப்பெரிய அளவில் பொருளதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளப்போகிறோம்’ என்றார். 

முதலாளிகளா சொத்தை உருவாக்குபவர்கள்?
தொழிலாளர் சட்டத்திருத்தம், தனியார்மயம், அரசாங்கத்தினுடைய நிலத்தை ஒட்டுமொத்தமாக பட்டியலிட்டு முதலாளிகளுக்கு வழங்கக்கூடிய நிலத்தொகுப்பு என  மூன்று  விஷயங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என்றார். அதோடு சேர்த்து மற்றொரு விஷயத்தையும் சொன்னார். அது என்னவென்றால்  முதலீட்டாளர்கள் எந்தவகையிலும் புகார் சொல்வதற்கு வாய்ப்பில்லாத அளவுக்கு இந்த நடவடிக்கைகள் அமையும் என்றார். சொத்துக்களை உருவாக்கக்கூடியவர்கள் முதலாளிகள். அவர்களுக்கு அரசாங்கம் துணைநிற்கும் என்று பகிரங்கமாக சொன்னார்கள். சாதாரணமாக பார்த்தால் சொத்து தொழிலாளர்களுடைய உழைப்பில் இருந்து உருவாகிறது. ஆகவே தொழிலாளர்களுக்கு அரசு துணைநிற்கும் என்று நீங்கள் கருதுவீர்கள். அது முதலாளிகளுக்குத்தான் என்று  பிரதமர் மோடி சொல்லிவிட்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையில்  மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து உருவாகிய சொத்துக்கள் கொள்ளைபோகக்கூடிய நிலை, தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை பறித்து அவர்களை கொத்தடிமைகளாக மாற்றக்கூடிய நிலை, குறைந்த பட்ச ஊதியம் என்பது கூட இல்லாமல் செய்திருக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

கேள்விக்குறியாகும் சமூகப் பாதுகாப்பு 
அரசாங்க ஊழியர்களுக்கு  சமூகப்பாதுகாப்பு என்றுள்ள பென்சனை  2004 ஆம் ஆண்டிலேயே  பறித்துவிட்டார்கள். இப்போது அது மற்ற எல்லோருக்கும் சமூகப்பாதுகாப்பு  என்ற கோஷமாக வருகிற நேரத்தில்  அதை நிர்மூலமாக்கும் வகையில் மத்தியரசு சட்டங்களை திருத்திக்கொண்டிருக்கிறது. எனவே இந்த கொள்கைளை முறியடிக்க  தொடர்ச்சியாக நடக்கக்கூடிய போராட்டங்களின் ஒருபகுதியாக 2019 செப்டம்பர் 30அன்று  தில்லியில் மத்திய தொழிற்சங்கங்களும் தொழில்வாரி  சம்மேளனங்களும் ஒன்றாக கூடி இன்றைய சூழல் குறித்து விவாதித்து  2019 ஜனவரி 8,9 ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் நடத்திய தேதியின் ஒராண்டு நிறைவை குறிக்கும் வகையில வரும்  2020 ஜனவரி 8ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் என்று அறிவித்துள்ளன. இந்த வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்க நாடு முழுவதும் மிக விரிவான தயாரிப்புகள்  நடைபெற்றுள்ளன. 

சுயசார்பு பொருளாதாரத்தை அழிக்கும் நடவடிக்கை 
செப்டம்பர் 30அன்று எந்த சூழலில் வேலைநிறுத்தம் மேற்கொள்ள தொழிற்சங்கங்கள் முடிவெடுத்தனவோ அதை விட இந்த காலகட்டத்தில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தனியார்மயம் என்கிற ஒரே உதாரணம்போதும். அரசாங்கத்திற்கு கோடி, கோடியாக வரியாகவும் லாபமாகவும் பங்காதாயமாகவும் கொடுக்கக்கூடிய பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் என்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்தை தனியார் மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. ஒருகாலத்தில் இந்தோ பர்மாஷெல் என்ற பெயரில் பன்னாட்டு  தனியார் நிறுவனமாக இருந்ததை அரசுடமையாக்கி தற்போது அது இந்தியாவினுடைய மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக  உள்ளது. இதை ஒட்டுமொத்தமாக விற்கப்போவதாக பாஜக அரசு அறிவித்துள்ளது. அதனோடு சேர்த்து இந்திய கப்பல் கழகம் (ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா), ஏர் இந்தியா என பல பொதுத்துறை நிறுவனங்களை உடனடியாக விற்றுத்தீர்த்து விடவேண்டும் என்ற வெறியோடு மத்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. விதை நெல்லை எடுத்து சாப்பிடுவது என்பது செய்யக்கூடாத செயல். அதைத்தான் மோடி அரசு இன்று செய்துகொண்டிருக்கிறது. இது இந்தியாவின் செல்வாதாரங்களை, சுயசார்பு பொருளாதாரத்தை  அழிக்கக்கூடிய நடவடிக்கையாகும். இந்தாண்டு மட்டும் 1லட்சத்து 15ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பொதுத்துறை பங்குகளை விற்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.  அரசாங்கம் கடுமையான நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருப்பதால் இதற்கான தைரியம் வந்துள்ளது.

முற்றியுள்ள நெருக்கடி 
அரசாங்கத்தின் பொருளாதார நெருக்கடி முன்னெப்ப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகியிருக்கிறது. உற்பத்தி, ஏற்றுமதி,மின் உற்பத்தி பயன்பாடு, நிலக்கரிபயன்பாடு என எல்லா காரணிகளும் குறைகின்றன. வாங்கும் சக்தி இல்லாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.இப்படி ஒட்டுமொத்தமாக அரசின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. “மோடி அரசாங்கத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமே தீவிர  சிகிச்சைப் பிரிவில் உள்ளது’’ என்று மத்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் கூறினார். அந்த அளவுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. 

நம்முன் உள்ள கடமை
தொழிற்சங்க இயக்கம் அழைப்பு விடுத்துள்ள ஒரு நாள் வேலைநிறுத்தம் என்பது ஒரு போராட்டம் மட்டுமல்ல; அரசினுடைய கொள்கைகளில் மாற்றம் வேண்டும் என்று வலியுறுத்தக் கூடியதுமாகும். இது அரசசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டமாகும்.எனவேதான் இந்தியாவில் யார் பிரதமராக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து, எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதைப் பார்த்து  நடத்தக்கூடிய போராட்டம் அல்ல. 1991 ஆம் ஆண்டில் இருந்து நாட்டில் பல கட்சிகள் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்துள்ளன. கூட்டணி அரசு வந்துள்ளது. காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அரசு இருந்துள்ளது. பாஜக தலைமையில் கூட்டணி அரசு இருந்துள்ளது. யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது விஷயமல்ல. இந்த நாட்டினுடைய உழைப்பாளி மக்களை, கிராமப்புற விவசாயிகளை, சிறுதொழில் உடைமையாளர்களை, சிறு வியாபாரிகளை, வேலை தேடுகிற இளைஞர்களை, எந்த கொள்கை பாதிக்கிறதோ அந்த கொள்கைகளை மாற்றவேண்டும் என்பதற்காகவும் மாற்றுப் பொருளா
தார கொள்கைகளை வலியுறுத்துவதற்காகவும் தொழிற்சங்கங்கள் நடத்தக்கூடிய போராட்டத்தின் ஒருபகுதி தான் ஜனவரி 8 அன்று நடைபெறக்கூடிய அகில இந்திய வேலைநிறுத்தமாகும். ஜனவரி 8 முடிவல்ல, துவக்கமும் அல்ல. எற்கனவே தொடங்கப்பட்ட போராட்டத்தினுடைய ஒருகட்டம்தான். வரும் ஜனவரி 9இல் இருந்து அடுத்தகட்டம் தொடங்குகிறது. இந்த கொள்கைகளை தோற்கடிக்க இந்தநாட்டினுடைய அனைத்துப்பகுதி மக்களையும் ஒன்றுபடுத்தவேண்டிய கடமையும் நம்முன் உள்ளது.

சந்திப்பு: அ.விஜயகுமார்
 

;