திரை விமர்சனம்
5 தடங்களில் பயணிக்கிறது கதை . வடசென்னையின் ராயபுரத்தை மையமாகக் கொண்டு கதை பயணிக்கிறது.காதலும் அன்பும் சாதியும் சாதியை எதிர்க்கும் இயக்கஅரசியல்தான் கதை.சோர்வில்லாமல் படம் போகிறது.அரசியல் பின்னணி தளத்தில் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. காதலுக்கு பாதுகாப்பு கொடுக்கும் இயக்கமாக ஒரு சிவப்பு அமைப்பு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இயக்கத்தின் வழக்கறிஞர் அம்பேத்கராக துடிப்பு, ஆவேசம், வழிகாட்டுவது என்று மனம் கவர்கிறார் சமுத்திரக்கனி. முதன்மைத்தடத்தின் கதைநாயகன் இளவரசனை ஞாபகம் செய்கிறது. பிளாட்பாரகாதல் மிகு இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.பிளாட்பாரத்திலிருந்து சிறிய வீட்டிற்கு குடி பெயரும் பொழுது சுவரை வருடிக் கொடுக்கும் அந்தப் பெண்{சாவந்திகா} ஆராயியின் உணர்வு வீடற்றவர்களின் வலியை உணர்த்துகிறது பிளாட்பாரத்தில் தனித்து விடப்பட்டிருக்கும் இளம்பெண் முகம் கொடுக்கும் இரவுச் சில்மிசங்கள் இனி தனக்கு இருக்காது என்று ஆராயி கொள்ளும் மகிழ்வும், உடைந்தழுவதும் படம் பார்ப்போரை கலங்கடிக்கிறது.
இந்தக் காட்சியின் உணர்வு ச.விசயலட்சுமியின் காளி தொகுப்பு கதையான பாராசூட் இரவுகளின் பயணம் கதையை ஞாபகம் செய்கிறது. இரவு கிளப்புகளில் நடனமாடும் பெண்களுக்கு மனதும் அன்பும் இருப்பதை ஒரு காட்சி வழியாக இயக்குநர் கீரா அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். இரவு நேர சென்னையை, வடசென்னையின் இயல்பை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் சிபின் சிவன். பின்னணி இசையை அமர்க்களப்படுத்தி இருக்கும் ஸ்ரீகாந்திற்கு வாழ்த்துகள். முதிய காதலர்களாக வெகு இயல்பாக நடித்திருக்கும் நாச்சியாள்சுகந்தி, தீக்கதிர் அ.குமரேசனிற்கு பாராட்டுகள். பிளாட்பாரக்காதலன் நிதிஷ்வீரா, சமுத்திரக்கனியின் மனைவி செங்கொடியாக வரும் சமிக்சா கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.காதலனின் அப்பாவாக வந்து ஆவேசப்படும் தமுஎகசவின் பேராசிரியர் செல்வகுமாருக்கு வாழ்த்துகள். சமகாலத்திற்கு தேவையான கதையை எழுதி இயக்கியிருக்கும் கீரா, தயாரிப்பாளர்கள் பெவின்ஸ்பால், விஜயா ராமச்சந்திரன், எஸ்.பி.முகிலன் ஆகியோர் மிகுந்த பாராட்டிற்குரியவர்கள்.