tamilnadu

img

துரிதப்படுத்தப்படுமா தூர்வாரும் பணிகள்?

பல்வேறு விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் என்று தமிழகமுதல்வர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் குறைபாடுகள் இல்லாமல் கடைமடைப் பகுதிகள் வரை முழுமையாகச் சென்றிடும் வகையில் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

ஊரடங்கு காரணமாக விவசாயிகளிடம் பணப்புழக்கம் இல்லாத நிலையில் கடன் கோரும்அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்கஅரசு உதவிட வேண்டும்.அதேபோல் விதை, உரம் உள்ளிட்ட விவசாய இடு பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திடவும்,குறைந்த பட்சம் சிறுகுறு விவசாயிகளுக்கு இலவசமாகவும் வழங்கிடவும் அரசு முன் வர வேண்டும்.பம்புசெட் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் டீசலின் விலையை அரசு குறைத்திட வேண்டும்.

மேலும் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகத்திடம் இருந்துதமிழகத்திற்குரிய தண்ணீரை மாதாந்திர அடிப்படையில் பெறுவதற்கு தமிழக அரசு உரியகவனம் செலுத்த வேண்டும்.காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிப்பதையும் தன்னாட்சிஅதிகாரம் கொண்ட அமைப்பாக அது தொடர்ந்து செயல்படுவதையும் உத்தரவாதப்படுத்த வேண்டும்.இந்தாண்டு காவிரி பாசனப் பகுதியில் முழு வீச்சில் விவசாயப் பணிகள் நடைபெறவேண்டுமென்றால் ஏற்கனவே அரசு அறிவித்துள்ள குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணியை மிக வேகமாக முறைகேடு இல்லாமல் நிறைவேற்றிட வேண்டும்.

குறிப்பாக கொரோனா நோய்த்தொற்று ஒருபுறம் இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டுதமிழகம் முழுவதும் ரூ.498.50 கோடி மதிப்பில்1327 குடிமராமத்துப் பணிகளை தொடங்கிட தமிழக அரசு அறிவித்து அந்தப் பணிகள் மந்த கதியில் உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் ஏரி, குளங்கள், ஆறு, ஊருணி போன்ற நீர்நிலைகளை தூர்வாரிமக்களின் குடிநீர் தேவை,சாகுபடி தேவை மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடும் நோக்கத்தில் 2016-17-ஆம் ஆண்டில் குடிமராமத்து என்ற பழைய திட்டத்திற்கு அரசு புத்துயிர் கொடுத்தது. இதுவும் விவசாயிகளின் பல்வேறு போராட்டங்களையடுத்தே இடையில் அரசு இந்த திட்டத்தை அறிவித்தது. தொடக்க கட்டத்தில் ஆளும் கட்சிக் காரர்களே அனைத்துப் பணிகளையும் டெண்டர் என்ற பெயரில்எடுத்து அதில் ஏராளமான முறைகேடுகளை செய்தனர். அதனை எதிர்த்து விவசாயிகள் தங்கள் அமைப்புகள் மூலம் போராட்டங்கள் நடத்திய பிறகு அதில் மாற்றம் செய்யப்பட்டது. 

ஆரம்பத்தில் 1519 பணிகளுக்கு ரூபாய் 100 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதால் 2017-18ஆம் ஆண்டில் 1523 பணிகளுக்கு ரூபாய் 331.68 கோடி மதிப்பிலும், 2019-20 ஆம் ஆண் டில் 1829 பணிகளுக்கு ரூபாய் 499.28 கோடி மதிப்பிலும் செயல்படுத்தப்பட்டன.

ஒத்திவைக்கப்பட்ட பழைய பணிகள்... 
இந்த நிதியாண்டில் 2020-21க்கு 498.51 கோடி மதிப்பில் 1387 பணிகளை செயல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி திருச்சி மண்டலத்திற்கு ரூபாய் 140.64 கோடி மதிப்பில் 458 பணிகளுக்கும், மதுரை மண்டலத்திற்கு ரூபாய் 156.37 கோடி மதிப்பில் 306 பணிகளுக்கும்,கோவை மண்டலத்திற்கு 45.50 கோடி மதிப்பில் 246 பணிகளுக்கும், சென்னை மண்டலத்திற்கு ரூபாய் 155.95 கோடி மதிப்பில்377 பணிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகளை துவக்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் பிரச்சனை என்னவென்றால் கடந்தஆண்டு டெல்டா மாவட்டங்களில் நடைபெற்ற குடிமராமத்துப் பணிகளில் 50 சதவீத பணிகள் ஒத்தி வைக்கப்பட்டு தற்போது நடைபெற வேண்டியுள்ள நிலையில் நடப்பாண்டிற்கான ரூபாய் 60 கோடி மதிப்பிலான தூர்வாரும் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதால் தூர்வாரும் பணிகளுக்கான டெண்டர் இப்போதுதான் வைக்கப்படுகிறது. இந்தச் சூழலில் பணிகள்எப்போது தொடங்கும்?எப்போது முடி வடையும்?போன்ற கேள்விகள் டெல்டா விவசாயிகளிடையே எழுந்துள்ளது. தஞ்சாவூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் மட்டும் டெண்டர் வைக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. என்னென்ன பணிகள் என்ற விபரம் ஏதும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்கின்றனர் விவசாயிகள். 

எல்லா பணிகளையும் ஒருவருக்கே கொடுக்கக்கூடாது. அவ்வாறு கொடுத்தால் நாகை, தஞ்சை,திருவாரூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களிலும் ஒருவரால் எப்படி விரைவாக முடிக்க முடியும்?என்று விவசாயி கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக்கு நல்ல வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. எனவே அதற்குள் தூர்வாரும் பணிகளை முடிப்பதற்கு மாவட்ட வருவாய்த் துறையும், பொதுப்பணிதுறையும் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் மேலும் கருதுகின்றனர்.

முறைகேடின்றி செயல்படுத்த...
அதோடு தற்போது மேற்கொள்ளப்படும் குடிமராமத்துப் பணிகளை ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாய அமைப்பு மூலமாக செய்திட வேண்டும்.ஆயக்கட்டு தாரர்கள், பாசனதாரர்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி தேர்வு செய்யப்படும் பணிகளை முறைகேடுகள் இல்லாமல் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொழில்நுட்பங்களின் விபரங்களை விவசாயிகளுக்கு தெரிவிப்பது,வங்கிக் கணக்கு துவக்குதல், ஜிஎஸ்டி பதிவு செய்தல் போன்ற முன்னேற்பாடுகளை தொடங்குவதற்கு உரிய வழிகாட்டுதல்களை மாவட்ட நிர்வாகம் செய்திட வேண்டும். 

ஒப்புதல் வழங்கப்பட்ட குடிமராமத்துப் பணிகளை மாவட்டங்கள் முழுவதும் வேகமாக துவக்கிட வேண்டும்.கொரோனா தொற்றை காரணம் காட்டியோ, மழை மற்றும் மேட்டூர் அணைதிறந்து விட்டதால் பணிகளை வேகமாக முடிக்கவேண்டும் என்று சொல்லியோ அரைகுறை பணிகளாக மாற்றி திட்ட பணிகளுக்கான மொத்ததொகையையும் சுருட்டுவதற்கோ இடமளிக்கக்கூடாது. 

கொரோனா தொற்று ஒரு பக்கம் இருந்தாலும் சமூக இடைவெளியுடன் கூடிய கட்டுப்பாட்டோடு பணிகளை விரைவுபடுத்த வேண்டும். நடைபெறப்போகும் குடிமராமத்து மற்றும்தூர்வாருதல், கிராமப்புற வேலைவாய்ப்புதிட்டங்கள் உட்பட இப்போதே தொடங்கி விரைவாக முடித்து விட வேண்டும் என்பது தான் விவசாயிகளின் கருத்தாக உள்ளது.

===ஐ.வி.நாகராஜன்===

;