tamilnadu

img

தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருப்பவை ‘இந்தி’ கல்வெட்டுக்கள் அல்ல!

தஞ்சாவூர், ஏப்.23- தஞ்சாவூர் பெரிய கோயிலில் தமிழ் மொழியை அகற்றி விட்டு இந்தி மொழி கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவியது. இதையடுத்து அதை பார்க்க ஏராளமான வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் தினமும் குவிந்து வரு கின்றனர்.இதுகுறித்து தஞ்சாவூர் பெரியகோயிலின் இந்திய தொல்லியல் துறை முதுநிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் கூறியதாவது: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயில், ராஜராஜ சோழனால் கிபி.1003ம் ஆம் ஆண்டு தொடங்கிய கட்டுமானப் பணி 1010 ஆம் ஆண்டு நிறைவு பெற்று, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கோயிலில், ராஜ ராஜன் காலத்தில் கோயில் பணியாளர்கள் விபரம், கொடுக்கப் பட்ட தானங்கள், நிர்வாகம், ஆட்சிமுறை முதலான பல தகவல்கள் கோவில் முழுவதும் கல்வெட்டு களாக பதிவு செய்யப்பட்டன. இவை அனைத்தும் அக்கால தமிழ் எழுத்துக்களில் உள்ளன.சோழர்களுக்கு பின்னர், நாயக்கர்கள் கோயில் வளா கத்தில் உள்ள திருச்சுற்று மாளிகையில் தங்களது பாணி வண்ண ஓவியங்களை வரைந்தனர். மரா த்தியர் காலத்தில் கோவிலின் முகப்பு பகுதியில் மராத்தா நுழைவுவாயில் மற்றும் கோயிலின் உள்ளே பல்வேறு கட்டுமானங்களையும் செய்தனர். இதற்கு சான்றாக கோயிலின் தென்மேற்கு பகுதியில் திருச் சுற்று மாளிகையின் சுவரில் மராத்திமொழியின் தேவநாகரி எழுத்துக்களை கொண்டு, திருப்பணிகள் தொடர்பான கல்வெட்டுகளை பொறித்து வைத்துள்ளனர்.மராத்தி மொழி தேவநாகரி கல்வெட்டுகள் பல ஆண்டுகளாக இங்குள்ளது. மராத்தி, இந்தி, தேவநாகரி எல்லாம் வரிவடிவ அமைப்பில் பார்ப்பதற்கு ஒரே வடிவமாகத் தோன்றும். ஆனால், வெவ்வேறு. இவை இந்தி எழுத்துக்கள் இல்லை. இந்த கல்வெட்டு களை கடந்த 1990 ஆம் ஆண்டு படி எடுத்து, அதனை புத்தகமாக அச்சிடப்பட்டு சரஸ்வதி மகால் நூலகம், தமிழ்ப் பல்கலைக் கழகம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சுற்று மாளிகையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் அடங்கிய கருங்கல் அனைத்தும் கோயிலின் கிரிவலப் பாதையை சீரமைத்த போது பூமிக்கடியில் கண்டெடுக்கப்பட்டவை.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில் செவ்வாய்க் கிழமை தமிழக நுண்ணறிவுப் பிரிவு, உளவுப்பிரிவு காவல் துறையினர் கோயிலுக்குவந்து, அங்குள்ள கல்வெட்டுகளை படமாக பதிவு செய்துகொண்டனர்.



எத்தனை கல்வெட்டுக்கள்?


பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 64 கல்வெட்டுக்களும், ராஜேந்திர சோழனின் 21 கல்வெட்டுக்களும், 2ம் ராஜேந்திர சோழனின் ஒரு கல்வெட்டு, முதலாம் குலோத்துங்கனின் ஒருகல்வெட்டு, மூன்றாம் குலோத் துங்கனின் ஒரு கல்வெட்டு, மூன்றாம் ராஜேந்திரனின் ஒரு கல்வெட்டு, பாண்டியரின் இரு கல்வெட்டுக்கள், விஜயநகர நாயக்கர் காலத்தை சேர்ந்த 4 கல்வெட்டுக்கள், மராத்திய காலத்தில் 4 கல்வெட்டுக்கள் உள்ளன.   

  (ந.நி.)

;