தஞ்சாவூர், ஜூன் 15- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ரெண்டாம்புளிக்காடு கிராமத்தில் உள்ள ஒரு வங்கி உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் வங்கியில் கணக்கு தொடங்கி வரவு- செலவு செய்து வருகின்றனர். இந்நிலையில் வங்கியில் கடன் பெற்ற சிலர் கொரோனா ஊரடங்கு காரணமாக, வேலை இழந்துள்ள நிலையில், கடன் தவணையை செலுத்த முடியவில்லையாம். இதனால் அந்த வங்கிக் கணக்கு மற்றும் அதனோடு தொடர்புடைய உறவினர்கள் வங்கிக் கணக்கு என 200 க்கும் மேற்பட்ட கணக்குகளை, வெளி மாநிலத்தைச் சேர்ந்த வங்கி மேலாளர் முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேரில் சென்று கேட்ட வாடிக்கையாளர்களை கிளை மேலாளர் தெலுங்கு மொழியில் திட்டுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முடக்கப்பட்ட கணக்கை மீண்டும் செயல்படுத்த வேண்டும் எனக் கூறி திங்கள்கிழமை வங்கி முன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெறும் என இப்பகுதி மக்கள் அறிவித்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து திங்கள்கிழமை வங்கி முன்பாக, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் வி.சுப்பிரமணியன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் 30 பெண்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் அடுத்த கட்டப் போராட்டம் மீண்டும் தொடரும் எனவும், வங்கிக் கணக்குகளை முடித்துக் கொள்ளப் போவதாகவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.