tamilnadu

பாபநாசம் ஏ.டி.எம். துப்பாக்கிச் சூடு: பாதுகாவலருக்கு 7 ஆண்டு சிறை

தஞ்சாவூர்:
தஞ்சை அருகே பாபநாசம் ஏ.டி.எம்.,மையத்தில், நடந்த துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கில், பாதுகாவலருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தஞ்சாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மாளிகைமேடை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(63).இவர் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்.,களில், பணப்பரிவர்த்தனை செய்து வரும் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றினார். இவர் கடந்த 2010 மே 11 ஆம் தேதி, பாபநாசத்தில் உள்ள ஏ.டி.எம்.மில்., பணம் வைக்க பாதுகாவலராக துப்பாக்கியுடன் சென்றார்.

ஏடிஎம்மில் பணம் வைக்க உள்ளே சென்ற போது, ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த பொதுமக்கள் சிலர் இவர்களை உள்ளே விடாமல் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அப்பகுதியை சேர்ந்த சோமநாத்ராவ், சீனிவாசன், சாமிநாதன், பாரதிதாசன், ராஜராஜேஸ்வரன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து துப்பாக்கியால் சுட்டதால் தன்னை பொதுமக்கள் தாக்குவார்கள் என பயந்த ராஜேந்திரன் ஏடிஎம் மையத்துக்குள்ளே புகுந்து ஷட்டரை மூடி விட்டார். தகவலறிந்த பாபாநாசம் காவல் ஆய்வாளர் சுரேஷ் பாபு, உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் அங்கு வந்தனர். ஏடிஎம் முன்பு குவிந்திருந்த பொதுமக்களை விலகச் செய்து ஷட்டரை திறந்துபாதுகாவலர் ராஜேந்திரனை வெளியே அழைத்து வந்தனர். அப்போது பொதுமக்கள் சிலர் ராஜேந்திரனை தாக்க முயன்றனர்.அப்போது ராஜேந்திரன் தனது துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டினார். இதை பார்க்காத உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் ராஜேந்திரனிடமிருந்து துப்பாக்கியை பிடுங்க முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் அதே இடத்தில் இறந்தார்.இந்த வழக்கு தஞ்சை 2வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி கருணாநிதி வழக்கை விசாரித்து ராஜேந்திரனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 17 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

;