tamilnadu

img

தஞ்சையில் அவசர கதியில் தூர்வாரும் பணி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., குற்றச்சாட்டு

தஞ்சாவூர் ஆக.25– தஞ்சை மாவட்டம் கல்வரா யன்பேட்டையில் உள்ள கல்லணைக் கால்வாயில், கடந்த ஆண்டு உடைப்பு  ஏற்பட்டு தண்ணீர்  வீணாக சென்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்ட பகுதி சரி செய்யப்பட்டது. இந்நிலையில் கல்லணை கால்வாயில் நடந்த பணிகளை சனிக்கிழமை  எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; கடந்த ஆண்டு உடைப்பு ஏற்பட்ட பகுதியில் கரை எழுப்பினர். இந்த உயரம் போதாது. இன்னும் மூன்று அடிக்கு உயரத்தை அதிகரிக்க வேண்டும். தற்போது பெயரளவுக்கு மட்டுமே சரி செய்யப்பட்டு உள்ளது. கல்லணைக் கால்வாயில் தற்பொழுது திறக்கும் தண்ணீரை விட கூடுதலாக 1000 கன அடி தண்ணீர் திறந்தால் தான், கடைமடைக்கு தண்ணீர் செல்லும். எனவே அதற்கேற்ப தண்ணீர் திறந்து விட வேண்டும்.  தற்போது தண்ணீர் திறந்த நிலையில், அவசர கதியில் தூர்வாரும் பணிகளை செய்வது எந்த பலனையும் தராது. எனவே பணிகளை நிறுத்தி விட்டு, அந்த தொகையை அடுத்த ஆண்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆறுகளில் தற்பொழுது தூர்வாரும் பணி செய்வது செயற்கையாக வறட்சியை ஏற்படுத்துவதாக ஆகி விடும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரை தேக்கி வைப்பதற்கு மேட்டூர் அணையில் வசதி ஏற்படுத்தி அங்கேயே சேமிக்கலாம் என்பது தஞ்சை மாவட்டத்திற்கு உபரி நீர் மட்டுமே வரும். நமக்கு வேண்டிய உரிய நீர் வராது என்றார். மாவட்டச் செயலாளரும், திருவையாறு எம்.எல்.ஏ.வுமான துரை. சந்திரசேகரன், ஒன்றிய செயலாளர் முரளி மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

;