tamilnadu

நிவாரணம் கிடைக்காத மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொள்ள எண் அறிவிப்பு

தஞ்சாவூர், ஆக.4-  கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக, ஆக. 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் தலா ரூ.1000 ரொக்க நிவாரணத்தை, அவர்கள் வீட்டிலேயே சென்று வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  அதன் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்தில், இதுவரை 20,628 மாற்றுத்திறனாளிகளுக்கு, அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நிவாரண உதவித்தொகை கிடைக்கப் பெறாத, அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளும் ஆக.31-க்குள் நிவாரண உதவித்தொகை பெற்று பயனடையலாம்.

வேறு மாவட்டங்களை அல்லது நிவாரணத் தொகை வழங்கும் அலுவலர் பகுதிக்கு உட்படாத பிற பகுதிகளை சார்ந்த மாற்றுத்திறனாளிகள், தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டையுடன் வசித்தால் அவர்களின் பெயர் மற்றும் பிற விவரங்களை தனியாக பதிவு செய்து அவர்களுக்கான நிவாரண உதவித்தொகை மாற்றுத்திறனாளி தற்காலிகமாக தங்கியிருக்கும் கிராமத்தை சார்ந்த கிராம நிர்வாக அலுவலர்களால் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. அதன் விவரங்களை உடனடியாக தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு தெரிவித்திட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நிவராணத் தொகை ரூ.1000, சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறும் போது, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் குடும்ப அட்டையின் நகல் ஆகியவற்றினை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். 

அது தவிர, ஆதார் அட்டையின் நகல், இந்திய அரசின் மாற்றுத்திறனாளிக ளுக்கான தனித்துவ அடையாள அட்டையின் நகல், மாற்றுத் திறனாளியின் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் மற்றும் கடைசி பக்கங்களின் நகல் மற்றும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளியாக இருந்தால், வாக்காளர் அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றையும் உதவிகள் வழங்கிடும் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம். நிவாரணத் தொகை பெறுவதில் சிரமம் ஏதேனும் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண். 9442573315, 04362-236791 மற்றும் உதவி மறுக்கப்படும் நேர்வில் அல்லது கிடைக்கப் பெறவில்லை எனில் மாநில மைய எண்: 1800- 4250-111-ல் தொடர்பு கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

;