tamilnadu

img

விளையாட்டுக்கதிர்- வளரும் நட்சத்திரம்!

இந்திய விளையாட்டுத் துறையில் தினமும் பல சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. பஞ்சாப், ஹரியானா, டில்லி, மகாராஷ்டிரா என ஒரு சில மாநிலங்களே தடகளத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தமிழகம் அவ்வப்போது முத்திரை பதிக்கிறது. அந்த வகையில் 17 வயதாகும் பள்ளி மாணவன் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறான். அசாம் மாநிலம் கவுகாத்தியில் ‘கேலோ இந்தியா’ தேசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகள் இம்மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது. 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்து சென்னை திரும்பிய தமிழக வீரர் பிரதீப் செந்தில்குமாரை ‘தீக்கதிர் சார்பில் சந்தித்தோம்.
முத்தான முத்தல்லவோ...
சென்னை வேலம்மாள் (முகப்பேர் மேற்கு) பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் பிரதீப், ‘கேலோ இந்தியா’ தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தின் இறுதிப் போட்டியில் பந்தய தூரத்தை 1 நிமிடம் 52.20 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றது தமிழகத்திற்கு பெருமையாகும். விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வந்து, தொடர்ந்து பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தி சாதனையாளர்களாக உருவாக்கி வரும் வேலம்மாள் பள்ளி தாளாளர் எம்.வி.எம் வேல்மோகன்  உள்ளிட்ட பலரும் மாணவன் பிரதீப்புக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.
தொடங்கியது ஆட்டம்...
படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த பிரதீப், பள்ளி மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை அறியும் முகாமில் அடையாளம் காணப்பட்டார். ஓடுவதில் ஆர்வம் அதிகம் இருந்ததால் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சியை துவக்கினார். ஆறாம் வகுப்பு படித்து வந்த பிரதீப் பள்ளிகளுக் கிடையான போட்டிகளில் ஓட்டத்தை துவக்கினார்.
பதக்க மழை...
மாநில அளவில் நடந்த போட்டிகளுக்காக பல மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றாலும் அடுத்த முறை திருச்சியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதித்துக் காட்டினார். அந்த தொடரில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும், தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தினார். மாநில அளவில் கலக்கிய பிரதீப் தேசிய அளவிலும் முத்திரை பதித்தார். பள்ளி மாணவர்களுக்கு தடகள சம்மேளனம் நடத்திய போட்டியில்  ஜூனியர் பிரிவு 800 மீட்டர் ஓட்டத்தில் விஜயவாடா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் தட்டிவந்தார்.
கூலித் தொழிலாளி...
“எனது சொந்த ஊர் காரைக்குடி. தந்தை செந்தில்குமார் நகை வேலை செய்யும் கூலித் தொழிலாளி. அம்மா நளினி தேவி, எங்கள் குடும்பம் 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு குடிபெயர்ந்தது. தனக்குள் ஒளிந்திருந்த விளையாட்டு ஆர்வத்தை வெளிக் கொண்டு வந்தது நான் படித்து வரும் வேலம்மாள் பள்ளி தான். அந்தப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பிரசாத், எனது மாமா பாலாஜி, நண்பர் சரவணன், அப்பா -அம்மா, பள்ளியில் ஆசிரியர்கள் என பலரும் கொடுத்த ஊக்கமே தங்கப்பதக்கம் வெல்ல முடிந்தது” என்கிறார் பிரதீப்.
லட்சியம்...
வரும் ஜூலை மாதம் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். 2024 ஆம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள வேண்டும் என்கின்ற லட்சியத்திற்காக தொடர்ந்து கடின பயிற்சியும் சிறப்பு பயிற்சிகளும் எடுக்க உள்ளதாகவும் பிரதீப் கூறினார். “மாணவர்கள் படிப்பில் மட்டுமன்றி விளையாட்டிலும் சாதிக்க வேண்டும். அப்படி சாதிக்கத் துடிக்கும் பலருக்கும் சிறந்த பயிற்சியாளர் தேவைப்படுகிறது. அப்படி கிடைக்கும் போது ஒழுக்கம், நேர்மை, தன்னம்பிக்கையுடன் நடந்து கொண்டால் வெற்றி நிச்சயம்” என்றும் பிரதீப் கூறுகிறார். தமிழ்நாட்டிற்காக விளையாடும் பலருக்கும் துறை ரீதியாக போதுமான ஆதரவு கிடைப்பதில்லை. தமிழக அரசு, மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடமிருந்தும் சலுகைகளும் கிடைப்பதும் இல்லை. தகுதியான விளையாட்டு வீரர்களுக்கு, மாநில அரசு உதவினால் தொடர்ந்து கடும் பயிற்சி மேற்கொண்டு பி.டி.உஷாவைப் போன்று பலரை உருவாக்க முடியும். கூலித் தொழிலாளி செந்தில்குமார் மகன் பிரதீப் விளையாட்டுத் துறையில் மேலும் பல சாதனைகள் நிகழ்த்த வேண்டும் என்று வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.

;