சேலம், மே 4 - அரசின் நிவாரண பொருட்கள் ஏதும் கிடைக்காததால் விரக்தியடைந்த பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனாவால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் பெரும்பாலும் வீடுகளில் அடைபட்டுள்ளனர். இந்நிலையில் சேலம் மாநகரம் அம்மாப்பேட்டை பகுதியிலுள்ள தாதம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் எண்ணற்ற கூலித் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலான பொதுமக்களுக்கு ரேசன் அட்டை இல்லாததால் அரசின் நிவாரணப் பொருட்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து தொடர்ச்சியாக அப்பகுதி மக்கள் அரசு நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் அரசு அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வந்துள்ளனர்.
இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் தாதம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் நிவாரணப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இருப்பினும் நிவாரணப் பொருட்கள் கிடைக்கும் வரை போராட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை எனக்கூறி பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.