tamilnadu

img

கந்துவட்டி கொடுமையால் இளம் பெண் தற்கொலை: அநியாய வட்டி கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள சிபிஎம் வலியுறுத்தல்

கந்து வட்டி கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துள்ள நிலையில் அநியாய வட்டி வசூலிக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது. 
கடந்த சில மாதங்களாகவே, சென்னை, சிதம்பரம், கோவில்பட்டி என பல பகுதிகளிலும் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலைக்கு முயலும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இன்று (24/05/2022) திருப்பூர் மாவட்டம், அவினாசியில் நடந்திருக்கும் கந்துவட்டி கொடுமையும், பரிமளா (30) என்ற இளம் பெண் தற்கொலையும் அதிர்ச்சி தருகிறது.
கணவர் வீட்டில் இல்லாதபோது, மனைவி பரிமளாவையும், இரண்டு குழந்தைகளையும் கந்துவட்டி கும்பலானு சாதிய, பாலியல் அடிப்படையில் திட்டி அவமதித்துள்ளனர். இதன் மன உளைச்சலுக்கு ஆளான பரிமளா வீட்டுக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கந்துவட்டி தடுப்பு, வன்கொடுமை தடுப்பு மற்றும் போக்ஸோ சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கடுமையாக தண்டிப்பதுடன், உயிரிழந்த பரிமளாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
- தமிழ்நாடு முழுவதுமே அதிகரித்துவரும் கடன் தொல்லை, கந்துவட்டி, நுண் நிதிக் கடன் கொடுமைகளின் தீவிரத்தை காட்டுவதாக தொடர் நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன. எனவே, கந்துவட்டி தடைச் சட்டத்தை கறாராக அமலாக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக் குழு வலியுறுத்துகிறது.
- கடன், கந்துவட்டி துன்புறுத்தல்களில் இருந்து மக்களை காத்திட...
- நியாயமான வட்டியில் கடன் வாய்ப்புகளை கூடுதலாக்க வேண்டும். அதற்காக அரசு வங்கிகள்/கூட்டுறவு வங்கிகளுடன் இணைந்து சிறப்பு முகாம்களை நடத்தலாம்.
- தனித்து வாழும் பெண்கள் புதிதாக தொழில் தொடங்க, குறைந்த வட்டியில் முன்னுரிமைக் கடன் வழங்க வேண்டும்.
- நுண்நிதி நிறுவனங்களின் சட்டவிரோத போக்குகளை தடுத்து, முறைப்படுத்த வேண்டும்.
- சுய உதவிக்குழு வழியாக கடன் மற்றும்  உதவிகளை அதிகரிக்க வேண்டும்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பெறப்பட்ட கடன்களுக்கு வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.