tamilnadu

img

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுக... டிச.9 முதல் விவசாயிகள் தொடர் போராட்டம்...

சென்னை:
விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களைதிரும்பப்பெறக்கோரியும் தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் டிசம்பர் 9 ஆம் தேதி தமிழகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை நடத்திட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் டிசம்பர் 3  அன்று மாலை இணையம் வழியாக மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் உட்பட அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்டதீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.வேளாண் விரோத சட்டங்களையும், மின்சார திருத்த மசோதா 2020ஐயும் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தி தில்லிபுறநகர்ப்பகுதியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த பத்துநாட்களாக வாட்டும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் தீரமிக்க போராட்டத்தை நடத்திவருவதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தனது வணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங் ணைப்புக்குழுவின் அங்கமாகதமிழ்நாடு விவசாயிகள் சங்கம்மேற்படி சட்டங்களை எதிர்த்து தொடர்ச்சியாக தமிழகத்தில் போராடி வருகிறது.இந்த நிலையில் தில்லியில் போராடி வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு தமிழக மக்களின் பேராதரவினை வெளிப்படுத்தும் விதமாகவும், இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் அழித்தொழிக்க வகை செய்யும் வேளாண் விரோத சட்டங்களை நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்ததன் மூலம் இந்திய விவசாயிகளுக்கு மாபெரும் துரோகம் இழைத்த அதிமுகஅரசு பகிரங்கமாக இந்திய விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்பதுடன், சட்டத்திற்கு அளித்த ஆதரவை அதிமுக திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தி டிசம்பர்  9 முதல் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில்  ஈடுபடுவது என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தமிழ்நாடு சார்பாக எடுத்துள்ள முடிவை இக்கூட்டம் முழுமனதுடன் வரவேற்கிறது. தொடர் காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று வெற்றிபெறச் செய்திட கூட்டம் முடிவு செய்துள்ளது. 

இந்திய நாட்டின் பெரும்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய்ய மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி அடாவடித்தனமான முறையில் வேளாண் விரோத சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இச்சட்டங்களை ஏற்றுக் கொள்ளாமல் விவசாயிகள் புறக்கணித்துள்ள நிலையில், சட்டங்களை திரும்பப்பெறுவதற்கு பதிலாக மத்திய அரசு சில திருத்தங்களை மேற்கொள்வது என்று பிடிவாதம் பிடித்து வருவதுவன்மையான கண்டனத்திற்குரியது.எனவே, விவசாயம் காக்கும்போரில் ஈடுபட்டுள்ள விவசாயி களுக்கு ஆதரவாக, டிசம்பர் -9 முதல் நடைபெறவிருக்கும் தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் சமூகத்தின் சகலதரப்பினரும் கலந்து கொண்டு தங்களது பேராதரவினை தெரிவிக்க வேண்டும். தொடர் போராட்டம் வெற்றியடைய தேவையான அனைத்து வகையான உதவிகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

;