டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு நடக்குமா?
நியூயார்க்,அக்.24- ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இம்மாத இறுதியில் தென்கொரியா செல்ல உள்ளார். டிரம்ப் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக தெற்காசிய நாட்டுக்குச் செல்கிறார். இந்நிலையில் தென்கொரிய பயணத்தை தொடர்ந்து விரைவில் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் உடன் டிரம்ப் சந்திப்பார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. 2019 இல் டிரம்ப் தென் கொரியாவிற்கு சென்றிருந்தபோது, யாரும் எதிர்பாராத விதமாக வட கொரிய எல்லையில் அமைந்துள்ள எல்லைக் கிராமமான பான்முன்ஜோமில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னை சந்தித்தார். இது உலக அரசியலில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் அமைதிக்கான முயற்சியாக இந்த சந்திப்பை அனைவரும் வரவேற்றனர். டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் என முக்கிய தலைவர்களுடன் சந்திப்பை நடத்துவேன் என அவ்வப்போது பேசி வருகிறார். கிம் ஜாங் உன் உடனான தனது உறவை புகழ்ந்து பேசி வருவதுடன், அவரை “ஒரு புத்திசாலி” என்றும் அந்நாட்டுடன் மீண்டும் ராஜிய உறவுகளை மேற்கொள்ள விரும்புவதாகவும் டிரம்ப் பலமுறை தெரிவித்துள்ளார். கடந்த மாதம் டிரம்ப்புக்கு பதிலளிக்கும் விதமாக கிம் ஜாங் உன், டிரம்ப் உடன் தனக்கு “நல்ல தனிப்பட்ட நினைவுகள்” இருக்கிறது; அவர் வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவது என்ற பிடிவாதத்தை கைவிட்டால், பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று குறிப்பிட்டார். எனினும் இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவர்த்தையை நடத்துவதற்கான தேதியை உறுதிப்படுத்தும் பணி நடைபெறுவதாக கூறப்பட்டாலும் அதனை அமெரிக்கவோ, வடகொரியாவோ குறிப்பாக கூட தெரிவிக்கவில்லை. தென் கொரியாவின் ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் சுங் டோங்-யோங் அக்டோபர் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றிய போது, மலேசியா மற்றும் ஜப்பானுக்குச் சென்றுவிட்டு தென் கொரியாவுக்கு வரும்போது, வடகொரியா தென்கொரியாவிற்கு இடையில் உள்ள எல்லையோர ராணுவம் நிலை நிறுத்தப்படாத கிராமமான பான்முன்ஜோமில் டிரம்ப்- கிம் ஜோங் உன்னை சந்திக்க சாத்தியம் உள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.