tamilnadu

img

வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன்? - தமிழக அரசுக்கு பா. ஜான்சிராணி கேள்வி  

போராட்ட களத்திற்கே வந்து கொடுத்த வாக்குறுதிகளை, முதலமைச்சர் நிறைவேற்றாதது ஏன்? என்று  மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி கேள்வி எழுப்பியுள்ளார்.  

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தென்சென்னை மாவட்ட 4வது மாநாடு சனிக்கிழமையன்று நங்கநல்லூரில் நடைபெற்றது.

இதனையொட்டி நடைபெற்ற பேரணி, பொதுக் கூட்டத்தில் பா.ஜான்சிராணி பேசியதாவது, மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தேசிய பன்னோக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். 8 ஆண்டுகளாகியும் அதை நிறைவேற்றாமல் உள்ளனர்.  

தமிழக அரசின் சலுகைகள் பெற மாற்றுத்திறனாளிகள் அலைகழிக்கப்படுகின்றனர். பகுதி வாரியாக முகாம்களை நடத்தி, அனைத்து ஆவணங்கள், சேவைகளையும் ஒரே இடத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, போராட்ட களத்திற்கே வந்து, திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் இதுவரை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

அண்மையில் தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் நடத்தினோம். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய சமூக நலத்துறை அமைச்சரும் உதவித்தொகைகளை உயர்த்துவதாக வாக்குறுதிகளை அளித்தார்.  இவற்றை எதையுமே அரசு நிறைவேற்றவில்லை. கண்துடைப்பு அறிவிப்புகளை செய்யாமல், அரசு விரைந்து செயல்பட வேண்டும். வாக்குறுதிகளை மட்டுமே நம்பி வாழ முடியாது. வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தவறும் பட்சத்தில் மீண்டும் போராட்ட களத்திற்கு வருவோம், இவ்வாறு அவர் பேசினார்.  

இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஏ.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் பி.ஜீவா, கே.பி.பாபு, என்.சாந்தி, எஸ்.மனோன்மணி, மாவட்டச் செயலாளர் எம்.குமார், பொருளாளர்  ஆர்.லாரன்ஸ், எம்.சரஸ்வதி எம்.சி., சிபிஎம் ஆலந்தூர் பகுதிச் செயலாளர் வெங்கடேசன், கே.முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

;