தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், பெரியநெசலூரைச் சோ்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17). இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மெட்ரிக் தனியாா் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்தாா். இந்த நிலையில், ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி மா்மமான முறையில் உடலில் காயங்களுடன் பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்தாா்.
இதைதொடர்ந்து பெற்றோா், உறவினா்கள், மற்றும் பொதுமக்கள் கடந்த 5 நாள்களாக மாணவி மரணத்துக்கு காரணமானவா்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருவதோடு, மாணவியின் உடலையும் வாங்க மறுத்து வருகின்றனா். தொடர்ந்து, இன்று ஆறாவது நாளாக மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அதிக அளவிலான பொதுமக்கள் கூடியதால், போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டனர்.
தனியார் பள்ளியின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்கியதில் டிஐஜி பாண்டியன் உள்பட சுமார் 20 காவலர்கள் காயம் அடைந்தனர். கலவரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
அப்போது போராட்டக்காரர்கள் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காவல் துறை வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். தனியார் பள்ளி வளாகத்தில் இருந்த டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் நுழைந்து கற்களை வீசித் தாக்கி சூறையாடினர். இதையடுத்து காவல் துறையினர் தடியடி நடத்தி போராட்டத்தை கட்டுப்படுத்தி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி பள்ளி மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் நாளை முதல் அனைத்து நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்காது என தமிழ்நாடு மெட்ரிகுலேசன், சிபிஎஸ்இ நர்சரி பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அறிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது. முன் அனுமதி பெறாமல் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் விடுமுறை அறிவித்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். வழக்கம் போல் நாளை தனியார் பள்ளிகள் செயல்பட வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரக இயக்குநர் கருப்பசாமி அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திர பாபு, கள்ளக்குறிச்சி கனியாமூரில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டிஜஜி மற்றும் எஸ்பி உள்ளிட்ட 55 காவலர்கள் வன்முறையின்போது காயம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்து மாணவி உயிரிழந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.