போக்குவரத்து தொழிலாளர்கள் 60 நாட்கள் காத்திருப்பு போராட்டம்
திருவண்ணாமலை, அக்.17- திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 60ஆவது நாளாக வியாழனன்று காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் பேசுகையில், போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு பெறும் நாளில் வெறும் கையுடன் அனுப்பப்படுவதால் ஓய்வூதிய காலத்தில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். போக்குவரத்து தொழிலாளர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், தொழிலாளர்களின் பிடிப்பு பணம் ரூ.15 ஆயிரம் கோடி நிர்வாகத்திடம் உள்ளதை மாதந்தோறும் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரினார். காலிப்பணியிடங்களை நிரப்பாமல், தொகுப்பூதிய தொழிலாளர்களை நிரந்தரம் செய்யாமல் மின்சார பேருந்து, தனியார்மயம் என நடவடிக்கை எடுக்கப்படுவதை எதிர்த்து 60 நாட்களாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து பேச அமைச்சர் விருப்பம் தெரிவித்ததை வரவேற்றதோடு, பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால் அரசு ஊழியர், ஆசிரியர்களுடன் போக்குவரத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரித்தார்.
