tamilnadu

img

மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பு - தமிழ்நாடு சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு!

தமிழ்நாட்டில் மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பு பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுவாக மாசுபட்ட நீரில் இருக்கும் “Naegleria fowleri” எனப்படும் மூளைத் தின்னும் அமீபா, மூக்கின் வழியாக மூளைக்குள் நுழைந்து தொற்றை உண்டாக்கும்.

தமிழ்நாட்டில் இதுவரை மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்றாலும், இந்த பாதிப்பு பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மாநகராட்சி, நகராட்சியில் உள்ள குளங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள நீச்சல் குளங்கள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ள மாவட்ட சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரை 2 நாள்களுக்கு ஒருமுறை வெளியேற்ற வேண்டும்; குளோரின் சேர்த்து சுத்தப்படுத்த வேண்டும் என நீச்சல் குளம் மற்றும் நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மாசடைந்த நீர்நிலைகளில் குழந்தைகளோ, பொதுமக்களோ யாரும் குளிக்க வேண்டாம்; காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.