டெட் தேர்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் எனவும், கட்டாயக் கல்வி உரிமை சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக ஆசிரியராக பணியில் சேர்ந்தவர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் கட்டாயம் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர்களை ஓய்வு பெற்றவர்களாக கருதி ஓய்வூதிய பலன் வழங்கிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும், உடனடியாக தமிழ்நாடு அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு உடனடியாக அடுத்த கட்ட சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்தியது.
இந்த நிலையில், டெட் தேர்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.