tamilnadu

குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

வேலூர், ஏப். 21-காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாராஞ்சி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்ளப்படவில்லை.மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு நீர் ஏற்றப்படுவதும் இல்லை. மேலும் குடிநீர்க் குழாய்கள் பல இடங்களில் சேதமடைந்து இருந்ததால் கிராமத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டு இருந்த சிறிய அளவிலான குடிநீர்த் தொட்டிகளும் பயனற்றுப் போய் விட்டன.குடிநீர் விநியோகம் செய்யக் கோரி கடந்த ஜனவரிமாதம் 5ஆம் தேதி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சில நாட்களுக்கு குடிநீர் வழங்கப்பட்ட போதிலும், மீண்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் பாராஞ்சி கிராம மக்கள் அங்குள்ள சோளிங்கர் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்துசமபவ இடத்திற்கு வந்தஅரக்கோணம் வட்டாட்சியர் ஜெயக்குமார், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம், சோளிங்கர் காவல் ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.இதனிடையே, அதிகாரிகளின் உத்தரவுப்படி பாராஞ்சி கிராமத்தில் குடிநீர் விநியோகக் குழாய்கள் சீரமைக்கப்படும் பணிகள் தொடங்கின. மேலும்ஆழ்துளைக் கிணறு பழுதுபார்க்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு நீரேற்றும் பணியும் தொடங்கியது.

;