tamilnadu

நூறு நாள் வேலையில் முறைகேடு

விழுப்புரம், மே 5-விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பாதிரி ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிரி ஊராட்சி, கரிக்கம்பட்டைச் சேர்ந்தவர்கள் வே.மாசிலாமணி தலைமையில் விழுப்புரம் மாவட்ட திட்ட இயக்குநர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:பாதிரி ஊராட்சியில் 300க்கும் மேற்பட்டோர் தேசிய ஊரக வேலை பணியை மேற்கொண்டுள்ளனர். கூலித் தொழிலாளர்களுக்கு சமமான அளவில் வேலை வழங்காமல், ஊராட்சிச் செயலர் நாகப்பன் தொடர்ந்து முறைகேடு செய்து வருகிறார்.வேலைக்கு வராமல் உள்ள 50க்கும் மேற்பட்டோரின் வேலை அட்டைகளை வைத்துக்கொண்டு, அவர்கள் வேலைக்கு வந்ததாகப் பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபடுகிறார். விவசாய நிலத்தில் வரப்பு மடித்தல் வேலை செய்யும் திட்டத்தில் ஊராட்சி செயலரின் உறவினரான சோலை என்பவர் நிலத்தில் பொக்லைன் இயந்திரம் வைத்து வேலை செய்துவிட்டு, 120 பேர் வேலை செய்ததாக கணக்கு காட்டி ரூ.2 லட்சம் அளவில் கூலித் தொழிலாளர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தி, தொகை வழங்கும் அலுவலர் உதவியுடன் பணத்தை எடுத்துள்ளனர்.அதேபோல, விவசாயி முருகேசன் நிலத்தில் தொழிலாளர்களை வைத்து வேலை பார்த்ததாக ரூ.4.26 லட்சமும், கோதண்டராமன் நிலத்தில் வேலை பார்த்ததாக ரூ.1.11 லட்சமும், சின்னப்பையன் நிலத்தில் வேலை பார்த்ததாக ரூ.80 ஆயிரமும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது.மேலும் கரிக்கம்பட்டு குளக்கரையில் இயந்திரம் வைத்து வேலை செய்துவிட்டு ரூ. 2.68 லட்சம் செலவு செய்துள்ளதாக கணக்குகாட்டியுள்ளனர். தனிநபர் கழிப்பறைத் திட்டத்திலும் அவரவர் பள்ளம் தோண்டியதை பொது வேலை செய்ததாக கணக்கு காட்டி, பணத்தை ஊராட்சிச் செயலர் எடுத்துக்கொண்டார். தொடர் முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட திட்ட அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

;