tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு டெண்டர் கோரியது மாநில அரசு

சென்னை,அக்.13 - சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ. 487 கோடி செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசால் டெண்டர் கோரப்பட்டுள்ளது.  இதில் 5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம் ரூ. 102 கோடியிலும், 10 ஆயிரம் நபர்கள் பார்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி அரங்கம் ரூ. 172 கோடியிலும், கூட்ட அரங்குகள், அரங்கம் ஆகிய வசதிகள் ரூ. 108 கோடியிலும் அமையவுள்ளது. 2025 இறுதி அல்லது 2026 தொடக்கத்தில் இந்த கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கலைஞர் பூங்கா ஜிப்லைன் சம்பவம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பதிலடி

சென்னை,அக்.13- சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ஏற்பட்ட ஜிப்லைன் சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கண்டனம் தெரிவித்ததற்கு  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். “ஜிப்லைன் பழுதடையவில்லை. ஜிப்லைன் என்பது பூங்காவில் புவி ஈர்ப்பு சக்தியை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.  பழுதடைவதற்கு அதில் ஒன்றுமில்லை. பயணிகள் சென்ற இருக்கைக்கு தேவையான உடல் எடைக்கும் இருந்த வேறுபாட்டின் காரணமாக ஒரு பத்து வினாடி அவர்கள் தேங்கினர். பின்னர் அவர்கள் சென்ற இருக்கைக்கு விசை கொடுக்கப்பட்டு அவர்கள் இறங்குதளம் சென்றடைந்தனர். பூங்காவிற்கு வரும் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது” என்று அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

குரூப்-4 பணியிடங்கள் அதிகரிப்பு விவகாரம்: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

ளக்கம் சென்னை,அக்.13- 2022-இல் நடைபெற்ற குரூப்-4 தேர்வின் மூலம் மூன்று நிதி ஆண்டுகளுக்கான 10,139 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதாவது சராசரியாக, ஒரு நிதியாண்டிற்கு 3,380 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 2024-இல் நடைபெற்ற குரூப்-4 தேர்வின் மூலம் இரண்டு நிதி ஆண்டுகளுக்கான 8,932 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நிதியாண்டிற்கு 4,466 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. எனவே 2024 ஆம் ஆண்டு குரூப்-4 தேர்வின் மூலம் சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு கூடுதலாக 1,086 (4466-3380) காலிப்பணியிடங்கள், ஆக மொத்தம் 2,172 (1086×2) காலிப்பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.