tamilnadu

img

இருளர் இன மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் மலைவாழ் மக்கள் சங்கத்தின் முன்முயற்சியால் உருவான நகர்

இருளர் இன மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்  மலைவாழ் மக்கள் சங்கத்தின் முன்முயற்சியால் உருவான நகர்

காடு, மலைகள், நீரோடை களை வசிப்பிடங்களாக கொண்டு வாழ்ந்துவரும்,  இருளர் இன மக்களுக்கு, புதிய நகரை  உருவாக்கி சாதனை படைத்து வருகின்றனர் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகில் உள்ள மெய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெம்பேடு கிராமத்தில் பல தலை முறைகளாக 75 குடும்பங்கள் அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வந்தனர். குடிமனை பட்டா, மின்சாரம், குடிநீர் போன்ற எந்த அடிப்படைவசதிகளும் அங்கு இல்லை. குருபுரம் புதிய நகர் வழக்கம் போல எல்லா அரசி யல் கட்சிகளும் இருளர் இன மக்களை  நிராகரித்து வந்த நிலை யில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க கிளை வெம்பேட்டில் துவக்கப்பட்டது.   அத்தியாவசிய தேவைகள் எதுவும் தீர்க்கப்படாத நிலையில், இருளர் இன மக்கள் குடிநீருக்கே அல்லல் படும் நிலை இருந்தது. பின்னர் மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர் குடிமனை பட்டா வழங்க வேண்டும் என வருவாய்த் துறை அதிகாரிகளிடம் முறையிட்ட போது, மேய்க்கால் நிலத்தில்  குடி யிருப்பதால் பட்டா வழங்க முடியாது என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வெம்பேட்டில் உள்ள இருளர் இன மக்களுக்கு மாற்று இடத்தில் குடிமனை பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம், காத்திருக்கும் போராட்டம் என பல வடிவங்களில் போராட்டங்களை மேற்கொண்டனர். இதன் விளைவாக 2022 ஆண்டு குருபுரத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் 53 குடும்பங்களுக்கு  பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கப்பட்ட  இடத்தில் உள்ள புதர்களை அகற்றி, நிலத்தை சமன்படுத்த வேண்டும் என வலி யுறுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டது. பின்னர் மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர்களின் முன்முயற்சி யால் முதல் கட்டமாக, எய்ட் இந்தியா தொண்டு நிறுவனம் அனை வருக்கும் சூர்ய சக்தி மின் விளக்கு களுடன் குடிசைகளை அமைத்துக் கொடுத்தது. மழைக் காலங்களில் குடிசை வீடுகள் பாதுகாப்பாக இருக்காது என்பதால், நிரந்தரமாக குடியிருக்க தொகுப்பு வீடுகள் கட்ட வேண்டும் என வலியுறுத்தி  மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் அதற்கான போராட்டங்கள் நடத்திய பிறகு அரசு தரப்பில் 26  தொகுப்பு வீடுகள் கட்ட உத்தரவுகள் பெறப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இது போதாது என்பதால்,  எய்டு இந்தியா தொண்டு நிறுவனத்திடம் கேட்டு 18 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. தற்போது மொத்தம் 42 வீடுகள் குருபுறத்தில் கட்டப்பட்டு ஒரு நகரமே உருவாகி உள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் முன்முயற்சியால் அம்மக்களுக்கு தொடர்ந்து அரசின் சலுகைகளை பெற்றுத்தர மலைவாழ் மக்கள் சங்கத்தினர் சலிக்காமல் பணியாற்றி வருகின்றனர். அம்மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பிரதான பொறுப்பு அரசு மட்டுமே உண்டு. ஆனால் அரசு தன் கடமையை செய்ய தவறிய தால்,  சங்கம் அந்த பணியை செய்துள்ளது. மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் ஜி.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, பொருளாளர் எஸ்.குமரவேல், பூண்டி ஒன்றிய செயலாளர் கே.முருகன் ஆகியோர் இதற்கான முன்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிய அரசும், மாநில அரசும் பழங்குடி இன மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளன. எந்த திட்டங்களும் சாதாரணமாக இருளர் இன மக்களிடம் சென்று சேரு வதில்லை. அடிப்படை உரிமை கள் கூட அம்மக்களுக்கு மறுக்கப் ழுட்டுள்ளது. அதிகாரிகள் என்னத் தான் செய்கிறார்கள், யாருக்காக பணியாற்றுகிறார்கள் என்று கவனிக்க அரசு தவறிவிட்டது என்று அவர்கள் வேதனை தெரிவித்தனர். குருபுரம் நகர் மலைவாழ் மக்கள் சங்கத்தின் போராட்டத்தால் உரு வானது.  குருபுரத்தில் அம்மக்கள் குடி யேற துவக்கிய  நிலையில் புதிய பேருந்து நிறுத்தத்தையும் எய்டு இந்தியா தொண்டு நிறுவனம் நிழற்குடை அமைத்து கொடுத்து மக்கள் பயன்பாட்டிற்கும் வந்துள்ளது. இப்படி தொடுகாடு, ஆர்டிஓ சத்தியா நகர், பகத்சிங் நகர், பீரகுப்பம், வாழவந்தான்கோட்டை, விளாப்பாக்கம், வாசனாம்பட்டு, பாக்குபேட்டை என மாவட்டம் முழுவதும் கரை ஓரங்களில் குடிசை யில் தங்கியிருக்கும் இருளர் இன மக்களை ஒன்றுதிரட்டி, அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மலைவாழ் மக்கள் சங்கம் பாடுபட்டு நகர்களை உருவாக்கி வருகிறது. 2 ஆண்டுகளில்  ஆயிரம் பட்டாக்கள் திருவள்ளூர், திருத்தணி, ஆர்.கே.பேட்டை,  கடம்பத்தூர், பூண்டி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இருளர் இன மக்களுக்கு குடிமனை பட்டா, இனச் சான்றிதழ், குடும்ப அட்டை, தொகுப்பு வீடுகள் என நூற்றுக்கணக்கானவர்களுக்கு போராடி பெற்றுள்ளோம். கடந்த ஒன்றரை ஆண்டில் மட்டும் 955 குடி மனை பட்டாக்களும்,551 தொகுப்பு வீடுகளும் போராட்டங்கள் மூலம் பெற்றுக் கொடுத்துள்ளோம். இதற்கு முன்பாக ஆயிரம் பட்டாக்கள் பெற்று கொடுக்கப்பட்டது என்று அவர்கள் நினைவு கூர்ந்தனர். குறவன் இனத்தவருக்கு  எஸ்.டி சான்றிதழ் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தில் குறவன் இனத்தைச் சேர்ந்தவர்கள் பழங்குடி இனச் சான்றிதழ்  பல தலைமுறைகளாக கிடைக்காததால் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலை இருந்தது. தொடர் போராட்டத்தால், குறவன் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பழங்குடி இன (எஸ்.டி) சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இப்படி  ஒன்றுபட்ட போராட்டத்தின் விளைவாக பல சாதனைகளை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தான், இருளர் இன மக்கள் நாகரிக வாழ்க்கையை நோக்கி நகர்ந்து வருகிறார்கள். ஆதி குடிமக்களாக திகழும் பழங்குடியினரை சகமனிதர்களாக கருத வேண்டும். இன்னும் ஆயிரக்கணக்கான இருளர் இன மக்களின் கோரிக்கைகளை அரசும், மாவட்ட நிர்வாகமும் செவி சாய்க்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மப்பேட்டில் இன்று  மாவட்ட மாநாடு இந்த நிலையில் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுடன் கோரிக்கைக ளை வென்றெடுக்க தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட 9 வது மாநாடு திருவள்ளூர் அருகில் உள்ள மப்பேடு கூட்டுச் சாலையில் புதனன்று (ஜூலை 30) நடைபெறுகிறது. -பெ.ரூபன்