tamilnadu

img

கேள்விக்குறியாய் சிற்பத் தொழில்! வேதனையில் மாமல்லபுரம் சிற்பிகள்

வேதனையில்  மாமல்லபுரம்  சிற்பிகள்

உலகின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று மாமல்லபுரம். பல்லவ மன்னர்களின் கோயில்களின் சிறப்பினை பறைசாற்றுகிறது இந்நகரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களைப் காண்பதற்காக வெளிநாடு, உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு  சீனப் பிரதமர் ஜின் பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் மாமல்லபுரத்தில் நடத்திய சந்திப்பால் இந்நகர் மேலும் பொலிவு பெற்றது. மேலும், சில ஆண்டுகளாக மாமல்லபுரத்திற்கு வெளிநாட்டுப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

ஏப்ரல், மே மாதங்கள் கோடைக் காலம் என்பதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்துடன் வருவது வழக்கம். அப்படி வருபவர்கள் கற்சிற்பங்களைக் கண்டு ரசித்து ஆர்வமுடன் வாங்கி செல்வர். சிற்பக் கலையை வளர்க்கும் வகையில் இப்பகுதியில் கற்சிற்பம், உலோகச் சிற்பம், மரச்சிற்பம் மற்றும் சுதைச் சிற்பம் தயார் செய்யப்பட்டு வருகின்றது. மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்பிகளும், அதனைச் சார்ந்த 1500 தொழிலாளர்கள்  என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  இந்த தொழிலை நம்பியுள்ளனர். மாமல்லபுரத்தில் வடிக்கும் சிற்பங்கள் உலக அளவில் பிரசத்திப் பெற்றவையாகும். இதற்காகவே உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பலர் இங்கு வந்து சிற்பக் கலையை கற்றுச் செல்கின்றனர்.

உலக நாடுகளையே புரட்டிப் போட்டு வரும் கொரோனா நோய்த் தொற்று காரணமாகக் கடந்த 40 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல்லவ சிற்பங்கள் அனைத்தையும் தொல்லியல் துறையினர் பூட்டுப்போட்டு மூடியுள்ளனர். இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்றிலும் தடைப்பட்டு மாமல்லபுரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிற்பத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிற்பிகள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் திரும்புவதற்கு இரண்டு ஆண்டுகள் வரை ஆகும் என அங்குள்ளவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சிற்பி பெருமாளிடம் கேட்டபோது," 40 வருடங்களாகப் பட்டரை வைத்து கற்சிற்பங்களைச் செய்து வருகிறேன். என்னிடம் 30க்கும் மேற்பட்டவர்கள் பணி செய்து வருகின்றனர். கொரானா தொற்று பாதிப்பால் தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது" என்றார். ''எங்களிடம் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு முடிந்த உதவியைச் செய்து விட்டேன். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் மேலும் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதுவரைக்கும் அரசு எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. எதிர் காலத்தில் இந்த தொழில் எப்படி இருக்கும் என்பது சந்தேகமாக உள்ளது'' என்று தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினர். ''வெளிநபர்களிடம் வாங்கிய ஆர்டர்களையும் முடிக்க முடியவில்லை. இந்த பாதிப்பிலிருந்து நாங்கள் மீண்டுவர இரண்டு ஆண்டுகாலம் ஆகும்'' என்றும் கூறினார்.

சிற்பக் கலைக்கூடம் நடத்தும் சுதாகர்,"என்னிடம் 30 தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திருக்கின்றேன். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். கற்சிற்பம் செதுக்கும் சிற்பி தேவாவிடம் குறிப்பிடுகையில், "ஊரடங்கால் வீட்டில் முடங்கி கிடக்கிறோம். வாழ்வாதாரத்தை இழந்து சாப்பாட்டிற்கு கஷ்டப்படுகிறோம்.  இத்தொழிலையே நம்பியிருக்கும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அரசு நிவாரணம் தர வேண்டும்" என்றார்.

உலோக சிற்பம் செய்யும் ரவிச்சந்திரன் ஸ்தபதியை சந்திக்கையில்," மாமல்லபுரத்தில் 30 ஆண்டுகளாக உலோக சிற்பங்களான ஐம்பொன் சிலைகள், கொடிமரம் உள்ளிட்டவற்றைச் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றேன். என்னிடம் 25 போ் பணி செய்து வருகிறார்கள். கொரானா பாதிப்பால் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தினக்கூலி செய்துவரும் சிற்பிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்த பாதிப்பின் தொடர்ச்சி அடுத்த சில ஆண்டுகளுக்கும் தொடரும்போல் தெரிகிறது. இந்த தொழில் முழுவதும் கோவில் திருப்பணிகளைச் சார்ந்தே உள்ளது. தற்போது கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் வாழ்க்கையே கேள்விக் குறியாகியுள்ளது" என்றார். மாமல்லப்புரத்தில் உள்ள ஒட்டுமொத்த சிற்பிகள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கை அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே. அரசு என்ன செய்யப்போகிறது?

-க.பார்த்திபன்

;