சென்னை, ஜூன் 5 -துப்புரவு தொழிலாளி முருகனுக்கு நிவாரணம் கோரி பல்லாவரம் நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்லவபுரம் நகராட்சி துப்புரவு பணிகள் எஸ்.டபிள்யூ.எம்.எஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் திங்களன்று நள்ளிரவு குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் அருகே துப்புரவு பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த லாரி மோதியதில் ஆர்.முருகன் (36) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் முருகனின் மனைவி எம்.கலைவாணி (32) அவரது உறவினர் ஜெ. கதிரேசன் (24) ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சென்னை மற்றும் புறநகர் உள்ளாட்சி ஊழிய சங்கம் (சிஐடியு) சார்பில் புதனன்று (ஜூன் 5) பல்லாவரம் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.உயிரிழந்த தொழிலாளி முருகன் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நட்ட ஈடு தரவேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு கல்விக்கு ஏற்ப நிரந்தர பணி தர வேண்டும்,காயமடைந்த கலைவாணி, கதிரேசன் ஆகியோரது மருத்துவ செலவை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போரட்டத்தில் முழக்கமிட்டனர்.சிபிஎம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.நரசிம்மன் மற்றும் பி.ஜீவா, விசிக மாவட்டச் செயலாளர் தேவ.அருள்பிரகாசம், வெற்றிச்செழியன், சென்னை மற்றும் புறநகர் உள்ளாட்சி ஊழிய சங்கம் (சிஐடியு) நிர்வாகிகள் எஸ்.குமாரதாசன், என்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.