முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியாயவிலைக் கடை பொருட்களை வீடு தேடி வழங்கும் முதலமைச்சரின் “தாயுமானவர்” திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் தண்டையார்பேட்டையில் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட மொத்தம் 21,70,454 பேர் பயன் பெறுகிறார்கள். இதில் 20,42,657 பேர் முதியோரும், 1,27,797 பேர் மாற்றுத்திறனாளிகளும் ஆவர். இது 16,73,333 குடும்ப அட்டைகளுக்கு உட்பட்டோர் என அரசு தெரிவித்துள்ளது.
திட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும். மூடிய வாகனங்களில் மின்னணு எடைத்தராசு மற்றும் e-PoS இயந்திரங்களுடன் நியாயவிலைக் கடை பொருட்கள் பயனாளிகளின் வீடுகளுக்கே கொண்டு செல்லப்படும்.
ரூ.30 கோடி 16 லட்சம் செலவில் அமல்படுத்தப்படும் இந்த முயற்சியை “இந்தியாவுக்கே முன்மாதிரி” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மக்களின் வீடுகளுக்கே சேவைகளை கொண்டு செல்வதே அரசின் கடமை என்றும், இந்தத் திட்டம் தனக்கு மிகவும் மனதிற்கு பிடித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.