tamilnadu

img

விவசாயிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து பெட்ரோல் மண்டலம் அமைக்கும் அரசாணை ரத்து

விவசாயிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து  கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய  மண்டலம் அமைக்க பிறப்பித்த அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
தமிழக அரசின் மாநில நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி கழகம் சார்பில் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 ஊராட்சிகளை உள்ளடக்கிய 23 ஆயிரம் ஹெக்டேரில் (57,500 ஏக்கர்) ரூ.92 ஆயிரம் கோடி முதலீட்டில் பெட்ரோலிய பொருள்கள் உற்பத்திக்கான முதலீட்டு மையம் அமைக்க என மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டது. இதைத்தொடர்ந்து  சாலை மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.1,146 கோடியை ஒதுக்கி, பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது. பெட்ரோலிய பொருள்களைச் சுத்திகரிக்க தொழிற்சாலைகள் அமைத்து, ஏற்றுமதி செய்ய அருகிலேயே சிறு துறைமுகங்களும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.
இந்தத் திட்டத்துக்கு மாநில அரசின் அனுமதியைப் பெற, மத்திய அரசு கடந்த 2012-ம் ஆண்டே ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இதற்கு தமிழக அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஒப்புதல் அளித்து மேற்கண்ட இடத்தை தேர்வு செய்து, 2017ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.  
இந்நிலையில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து  காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக்க சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து 2017ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை இன்று  தமிழக அரசு ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.          

;