tamilnadu

img

‘நீட்’ தேர்வில் மாபெரும் ஊழல்: தமிழ்நாடு காவல்துறை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது

‘நீட்’ தேர்வில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதை தமிழகக் குற்றப் புலனாய்வுத் துறையின் குற்றப் பிரிவு, காவல்துறையினர் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றனர். இது தொடர்பாக மூன்று பேரைக் கைது செய்திருக்கிறார்கள். இந்த ஊழல் நாடு தழுவிய அளவில் நடைபெற்றிருக்கக் கூடும் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பாக இன்றைய (செப்டம்பர் 28) தி இந்து நாளிதழில் வந்துள்ள செய்தி வருமாறு:

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களாகச் சேர்வதற்கான,  ‘நீட்’ என்கிற தேசிய தகுதி-நுழைவுத் தேர்வு (National Eligibility Entrance Test) நடைபெறும் சமயத்தில் உண்மையாக தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்குப் பதிலாக, ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவ மாணவர்களை, மருத்துவர்களை தேர்வு எழுத வைத்து, தேர்ச்சிபெற வைத்திருக்கிற விவரங்களைக் காவல்துறையினர் வெளிப்படுத்தி இருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் உதித் சூர்யா (21) என்னும் தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மாணவன் ஒருவனையும், அவனுடைய தந்தை டாக்டர் வெங்கடேசனையும் கைது செய்திருக்கின்றனர்.

எஸ்ஆர்எம் கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்திருக்கின்ற பிரவீண் என்கிற மாணவனும், பாலாஜி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கின்ற ராகுல் என்கிற மாணவனும், சாய் சத்தியா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கின்ற அபிராமி என்கிற மாணவியும் தில்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இவர்களுக்காக வேறு சிலர் தேர்வு எழுதி, அவர்கள் பெற்ற மதிப்பெண்களைத் தாங்கள் பெற்ற மதிப்பெண்களாகக் காட்டி, சேர்ந்திருப்பது காவல்துறையினரின் புலனாய்வுகளிலிருந்து வெளிவந்திருக்கிறது. இதற்காக இவ்வாறு கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்காகத் தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் தலா 20 லட்சம் ரூபாய் அளித்திருப்பதும் புலன் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இவ்வாறு பதிலியாக தேர்வு எழுதும் மாணவர் அவர் புகைப்படத்தை மட்டும் விண்ணப்பத்தில் ஒட்டியிருப்பார். மற்ற விவரங்களான பெயர், வயது, மதிப்பெண் பட்டியல், முகவரி மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் கல்லூரியில் சேர இருக்கும் மாணவரின் விவரங்களாக இருந்திடும்.

“புகைப்படங்கள் முறையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்குமானால், இந்த ஊழலை முன்பே வெளிக்கொண்டு வந்திருக்க முடியும்,” என்று புலனாய்வு செய்த காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

“இவ்வாறு பதிலி மாணவர்களாகத் தேர்வு எழுதிய கயவர்கள், சாதாரண நபர்கள் அல்ல. மருத்துவக் கல்வியில் ஆசிரியர்களாகவோ, மருத்துவர்களாகவோ அல்லது மருத்துவ மாணவர்களாகவோ இருக்கிறார்கள். சூர்யா அளித்துள்ள வாக்குமூலத்திலிருந்து அவனது நண்பர்கள் சுமார் ஆறு பேர் இதே போன்று மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களாகச் சேர்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்,” என்றும் புலனாய்வு அதிகாரி கூறியுள்ளார். இவர் தன்பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

“நீட் கோச்சிங் சென்டர்கள் நடத்துபவர்களில் சிலர், இத்தகு மோசடிகளுக்கு மூளையாக இருந்து செயல்பட்டிருக்கிறார்கள். இதேபோல் நாடு முழுதும் நடைபெற்றிருக்கக்கூடும்,” எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.