சென்னை:
தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சிமொழி ஆக்குங்கள் என்று பிரதமர் மோடிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மிகவும் மூத்த, தொன்மையான மொழி தமிழ்தான் என்பதை பன்னெடுங்காலமாக மொழியியல் வல்லுநர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்றாசிரியர்கள், மேலை நாட்டறிஞர்கள் பலரும் அசைக்க முடியாத ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி வந்த நிலையில், அந்தத் தமிழ் கூறும் மண்ணின் மீது, மக்களின் பேச்சு வழக்கிலேயே இல்லாமல் வழக் கொழிந்த சமஸ்கிருதத்தையும், ஆதிக்க மனப்பான்மையுடன் இந்தியையும் திணிப்பதில், கடந்த 2014-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்
தது முதல் தீவிரமாகச் செயல் பட்டது நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு.மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திற்கும் இந்தி- சமஸ்கிருதப் பெயர்களே சூட்டப்பட்டதுடன், அவை குறித்து தமிழில் விளம்பரம் வெளியிடும்போதுகூட, இந்தி - சமஸ்கிருத உச்சரிப்பிலேயே, தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. என்ன திட்டம், அதன் பொருள் என்ன என்பதைக் கூட தமிழ் உள்ளிட்ட பிற மொழி பேசும் மக்கள் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு, மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன.ஆசிரியர் தினத்தை ‘குரு உத்சவ்’ என்று மாற்றுவது, சமஸ்கிருத வார்த்தைகளை எல்லா இடங்களிலும் கட்டாயப்படுத்த முனைவது, ரயில்வே - அஞ்சலகம் - வங்கி உள்ளிட்ட துறைகளில் இந்தியை மட்டும் முன்னிலைப்படுத்தி, மற்ற மொழி பேசுவோரின் வேலை வாய்ப்பைப் பறிப்பது, இந்தியாவின் பொது மொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என்ற குரலை அடிக்கடி ஒலிக்கச் செய்வது - இப்படி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.க. அரசு செயல்பட்டு வந்த நிலையில்; அதில் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சி தரத்தக்கப் பெரிய மாற்றமாக, ‘தமிழ்தான் உலகின் பழமையான மொழி’ என்ற வரலாற்று உண்மையை பிரதமர் ஏற்றுப் போற்றியிருப்பது அமைந்திருக்கிறது.
அதுவும், கீழடி அகழாய்வுகளுக்கு மத்திய அரசின் நிதியை உரிய முறையில் ஒதுக்கீடு செய்யாமல், மத்திய தொல்லியல் துறையின் ஆய்வுகளை பா.ஜ.க. அரசு நிறுத்திவிட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் மூலம், சங்ககாலத் தமிழர்கள், அப் போதே உருவாக்கிய நகர நாகரீகத்தின் சிறப்புகள் வெளியாகியுள்ள சூழலில், தமிழின் பெருமை குறித்து இந்தியப் பிரதமர் பேசியிருப்பது, உலகத்தார் கவனத்தை ஈர்த்திருக்கிறது.தொன்மைமிக்கதும், பழம் பெரும் இலக்கிய - இலக்கண வளங்கள் செறிந்ததும், மூத்த நாகரிகமும் பண்பாடும் உடையதும், உலகம் தழுவிய அளவில் 8 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படுவதுமான தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டிய பொறுப்பு, நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு நிச்சயமாக இருக்கிறது. எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சிமொழிகளாக ஆக்கி அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என்பதை தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அந்த முயற்சியின் முதல் கட்டமாக, அந்த மொழிகளிலெல்லாம் மூத்த மொழியான தமிழை, இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கிட வேண்டும் என்றும், திமுக தொடர்ந்து முன்வைத்திடும் கோரிக்கையின்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கிட வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.