tamilnadu

img

'தமிழ்தான் இணைப்பு மொழி' - ஏ.ஆர். ரஹ்மான் 

தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி என்றும், தமிழ் படங்களை எங்கு பார்த்தாலும் நாம் பெருமை கொள்ள வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கூறியுள்ளார். 

சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய ஊடகம், பொழுதுபோக்கு கருத்தரங்கில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர் மணி ரத்னம், நடிகர் நாசர் போன்றோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் ரஹ்மானை கவுரவித்தார். 

விழாவில் பேசிய ஏ.ஆர். ரஹ்மான் எல்லோருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறிய பின்னர், தென்னிந்திய ஊடகம், பொழுதுபோக்கு கருத்தரங்கு என்பதால் இப்போது ஆங்கிலத்தில் பேசுகிறேன், எல்லோருக்கும் புரியும் என்று தொடர்ந்து பேசினார்.  நான் ஏழு வருடங்களுக்கு முன்பு மலேசியா சென்றிருந்த போது சீனாவைச் சேர்ந்த ஒருவர், நீங்கள்  இந்தியாவிலிருந்து வந்திருக்கிறீர்களா, எனக்கு வட இந்தியா பிடிக்கும், அவர்கள் அழகாக இருப்பார்கள், அவர்களின் படங்கள் மிகவும் நன்றாக இருக்கும் என்றார். அவர் தென்னிந்திய படங்களை பார்த்திருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் சொன்னது என்னை மிகவும் பாதித்தது.

மக்கள் வண்ணங்களால் தங்களின் அடையாளத்தை, கவுரவத்தை நிலைநாட்ட விரும்புகிறார்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. படங்களில் கருப்பு நிறம் கொண்டவர்களை நடிக்க வைக்க வேண்டும். கண்ணியமான கதாபாத்திரங்களை அளிக்க வேண்டும். தென்னிந்தியார்கள் இதை முக்கியமாக செய்யவேண்டும். நமக்கு நம் நிறம் பிடிக்கும். வட இந்தியா, தெனிந்தியா என இல்லை. எங்கிருந்தாலும் இந்தியா தான். இங்கு ஒரு திறமையாளர் இருந்தால் வட இந்தியாவுக்குப் பலன் கிடைக்கும். அங்கு ஒருவர் திறமையாக இருந்தால் நமக்குப் பலன் கிடைக்கும், மலையாள சினிமா, தமிழ் சினிமா என்கிற எல்லைகள் உடைத்தெறியப்பட்டுள்ளன. நம் திறமை, நம் கலாசாரம் உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நம் படங்களை எங்குப் பார்த்தாலும் பெருமைக் கொள்ளும்படி இருக்க வேண்டும். மக்களைப் பிரிப்பது எளிது. நம் ஒற்றுமையைத் தெரியப்படுத்த வேண்டிய நேரமிது என்றார். 

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த ஏ.ஆர். ரஹ்மானிடம், இந்தி தான் இணைப்பு மொழி என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது, "தமிழ்தான் இணைப்பு மொழி" என கூலாக பதிலளித்தார்.

முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில், ழ என்ற செங்கோலுடன், நடனமாடும் வகையில் வரையப்பட்ட கருப்பு தமிழன்னையின் ஓவியம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், தமிழணங்கு, "இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்" என்ற பாரதிதாசனின் வரியும் இடம் பெற்றிருந்தது. 

;