மரபு ரீதியான இதய பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு மையம்
சென்னை, 23 ஜூலை- மரபு ரீதியாக ஏற்கெனவே இதய பாதிப்பு உள்ள குடும்ப உறுப்பினர்கள் தங்கள் உடல் நிலையை பரிசோதித்துக் கொள்ளவேண்டும் என்று காவேரி மருத்துவமனை, இதய செயல்பாட்டு முடக்கம் மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் தலைவரும் முதுநிலை இதய ஊடுருவல் அறுவை சிகிச்சை வல்லுநர் பேராசிரியர் டாக்டர் பி.மனோகர் கூறினார். இதயம் தொடர்பான அனைத்து வகை பிரச்சனைகளுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்க புதிய மையம் வடபழனி காவேரி மருத்துவ மனையில் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் செய்தியாளர் களிடம் பேசுகையில் ,மரபணு ரீதியாக பாதிக்கப்படும் ஒவ்வொரு நோயாளியும் மாறுபட்ட பாதிப்புகளையும், அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதால் அவர்களுக்கான சிகிச்சை அதற்கேற்ப வழங்க வேண்டும். ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை அடையாளம் காண்பது மிக அவசியம். கேரளாவில் ஒரே குடும்பத்தில் 11 பேர் இதய பாதிப்பால் உயிரிழந்தனர். அந்த குடும்பத்தில் 2 பேர் மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டபோது பிரச்சனை கண்டறியப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டது என்றார். இதயவியல் பிரிவின் அறுவை சிகிச்சை நிபுணர் அன்பரசு மோகன்ராஜ், பல்வேறு மருத்துவர்கள் அடங்கிய குழு எச்சிஎம் நோயாளிகளுக்கு துல்லியமான சிகிச்சையை வழங்குவதால் உயிர் பிழைக்கும் விகிதம் அதிகமாக உள்ளது என்று கூறினார்.