tamilnadu

img

ஆன் லைனில் இழந்த ரூ.4 லட்சம்: சைபர் க்ரைம் மூலம் மீட்பு

சென்னை:
ஆன்லைனில் நான்கு லட்சம் ரூபாய் பணம் இழந்த நபருக்கு சைபர் கிரைம் காவல் துறையினர் வங்கியிலிருந்து பணத்தை மீட்டுக் கொடுத்துள்ளனர்.பல்லாவரம் ஆறுமுக செட்டித் தெருவைச் சேந்தவர் ஜெயகணேஷ் (44). இவர் கடந்த 11ஆம் தேதி தனது வாகனக்கடன் தொகையான நான்கு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை, பேடிஎம் பணப்பரிமாற்ற செயலி வழியாக ஸ்ரீராம் தனியார் நிதி நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளார்.

ஆனால், ஜெயகணேஷ் செலுத்திய ரூபாயில் வெறும் 30,000 ரூபாய் மட்டுமே ஸ்ரீராம் நிதி நிறுவனத்திற்குச் சென்றுள்ளது. மீதம் நான்கு லட்ச ரூபாய், 197 கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தின் கணக்கிற்கு சென்றுள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து இரண்டு தனியார் நிறுவனங்களுக்கும் அவர் கணக்கு வைத்துள்ள ஆக்ஸிஸ் வங்கிதாரர்களிடமும் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் முறையாக பதில் அளிக்காததால், புனித தோமையார் மலை, சைபர் கிரைம் பிரிவில் ஜெயகணேஷ் புகார் கொடுத்துள்ளார்.இந்தப் புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு, ஆக்சிஸ் வங்கி மற்றும் பேடிஎம் நிறுவனத்திற்கு பணத்தை திரும்ப அளிக்கும்படி கேட்டு கடிதம் அனுப்பினர். இதையடுத்து, ஆக்ஸிஸ் வங்கி ஜெயகணேஷின் கணக்கிற்கு நான்கு லட்சம் ரூபாய் பணத்தைத் திரும்ப செலுத்தியுள்ளது.இதனைத் தொடர்ந்து தனது பணத்தை மீட்டுக் கொடுத்த சென்னை பெருநகரக் காவல் ஆணையருக்கும் புனித தோமையார் மலை சைபர் கிரைம் காவல்துறையினருக்கும் ஜெயகணேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

;