தரைப்பாலங்கள் வெள்ள நீரில் மூழ்கியது! போக்குவரத்து பாதிப்பு
செங்கல்பட்டு, அக்.23- கடந்த இரு நாட்களாக பெய்த கனமழை யால் செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு தரைப்பாலங்கள் வெள்ளநீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சிங்கபெருமாள் கோவில் - பாலூர் இடையேயான 13 கிலோமீட்டர் சாலையில் வெண்பாக்கம் - ரெட்டிபாளையம் இடையே தென்னேரி ஏரி மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரிநீர் செல்லும் நீஞ்சல் மடுவு கால்வாய் உள்ளது. இங்குள்ள தரைப்பாலம் நான்கடி உயரம் வரை வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. பாலூர், வெண்பாக்கம், ரெட்டிபாளையம், கரும்பாக்கம், குருவன்மேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு அமைத்த காவலர்கள் வாகன ஓட்டிகளை மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தியதால் கிராம மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் மதுராந்தகம் வட்டம் ஈசூர் - நீலமங்கலம் இடையே கிளியாற்றில் அமைந்துள்ள தரைப்பாலமும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. இதனால் செங்கல்பட்டில் இருந்து தச்சூர் வரை இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
                                    