அவுட்சோர்சிங் பணி நியமனங்களை கைவிட கோரிக்கை
திருவண்ணாமலை, செப்.29- அவுட்சோர்சிங் பணி நியமனங்களைக் கைவிட வேண்டும் என்று அரசு ஊழியர் சங்க திருவண்ணாமலை மாவட்ட பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டப் பேரவைக் கூட்டம் மாவட்டத் தலைவர் மா.பரிதிமால்கலைஞன் தலைமையில் நடைபெற்றது. இதில்,மாவட்ட இணைச் செயலாளர் மீனாட்சி வரவேற்றார். மாநிலப் பொருளாளர் டேனியல் ஜெயசிங்J துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் க.பிரபு வேலை அறிக்கையையும், மாவட்டப் பொருளாளர் ஜெ.ராஜா வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.நாகராஜன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் சாந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன் நிறைவுரையாற்றினார். மாவட்ட இணை செயலாளர் நா.முத்துவேலன் நன்றி கூறினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், அவுட்சோர்சிங் பணி நியமனங்களைக் கைவிட வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
