ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பேரறிவாளன் போன்றவர்கள் இருபதாண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனையை அனுபவித்திருக்கும் நிலையில் அவர்களை மன்னித்து விடுதலை செய்வது குறித்து ஆளுநரே தீர்மானித்திடலாம் என்று செவ்வாய்க்கிழமையன்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.
இதனை அடுத்து ஆளுநர் தில்லி விரைந்திருக்கிறார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய அமர்வாயத்தில் நீதியரசர் எல். நாகேஸ்வரராவ், இவ்வாறு தண்டிக்கப்பட்டிருப்பவர்களுக்கு எதிராக பெரிய அளவில் சதி செய்ததாக எதுவும் மெய்ப்பிக்கப்படவில்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
வழக்கை அரசத்தரப்பில் விசாரித்த கூடுதல் வழக்குரைஞர் (அடிஷனல் சொலிசிடார் ஜெனரல்) கேம்.எம். நடராஜிடம், அவர், “பெரிய அளவிலான சதி தொடர்பான புலனாய்வு கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து கொண்டிருக்கிறது. …இன்னமும் நீங்கள் கிரேட் பிரிட்டனிலிருந்தும், தாய்லாந்தில் இருந்தும் விவரங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர்களா?” என்று கேட்டார்.
ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விசாரணை செய்துவரும் எம்டிஎம்ஏ எனப்படும் மல்ட்டி டிசிப்ளினரி மானிடரிங் ஏஜன்சி, இந்த விசாரணையை நடத்திக்கொண்டிருக்கிறது. பேரறிவாளன் சார்பில் வழக்கில் ஆஜரான வழக்குரைஞர் சங்கரநாராயணன், இந்த ஏஜன்சி விசாரணை என்ற பெயரில் முன்பு தாக்கல் செய்தவற்றையே மீண்டும் “நகல் எடுத்து ஒட்டி” (“copypaste”) அளித்துக்கொண்டிருக்கிறது என்றார்.
சென்ற முறை ஜனவரியில் நடைபெற்ற விசாரணையின்போது, நீதிமன்றம், மேற்படி அமைப்பு ராஜீவ் காந்தியைக் கொன்ற வெடிகுண்டைத் தயாரித்ததற்கான மூலத்தைக் கண்டறிவதை இன்னமும் முடிக்கவில்லை என்று கூறப்பட்டது.
“ஏற்கனவே ஆளுநர் இது தொடர்பாக அரசமைப்புச்சட்டத்தின் 161ஆவது பிரிவின்கீழ் பரிசீலனை செய்துகொண்டிருப்பதால், தற்போது நீதிமன்றம் தலையிடத் தயங்குவதாகக் குறிப்பிட்டு, நீங்கள் எங்கள் தலையீடு இல்லாமலேயே இதில் ஆணை பிறப்பிப்பதற்கு ஆளுநரை ஏன் கேட்கக்கூடாது?” என்று கேட்டார்.
பேரறிவாளன் ஆளுநருக்கு 2015 டிசம்பர் 30 அன்று மன்னிப்பு கோரி மனுச் செய்திருந்தார். மூன்று ஆண்டுகள் கழித்து, 2018 செப்டம்பர் 6 அன்று உச்சநீதிமன்றம், அவருடைய மனு மீது அது பொருத்தம் எனக் கருதினால் முடிவு எடுக்குமாறு ஆளுநரைக் கேட்டுக்கொண்டது.
அதன்பின்னர் தமிழ்நாடு அமைச்சரவை செப்டம்பர் 9 அன்று பேரறிவாளன் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்திடப் பரிந்துரைத்தது. ஆயினும் இந்தப் பரிந்துரையின்மீது ஆளுநர் கையெழுத்திடவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக எதுவும் செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று இவ்வாறு கூறியுள்ளது. மேலும் தீபாவளி விடுமுறை முடிந்தபின் வழக்கை ஆழமாக விசாரணை செய்வதாகவும் கூறியுள்ளது