tamilnadu

img

நெய்வேலி சுரங்க விரிவாக்கத்திற்கு  சாலை துண்டிப்பு  பொதுமக்கள் எதிர்ப்பு

நெய்வேலி சுரங்க விரிவாக்கத்திற்கு  சாலை துண்டிப்பு  பொதுமக்கள் எதிர்ப்பு

கடலூர், ஆக. 20 - நெய்வேலி என்எல்சி சுரங்கம் 1ஏ அருகில் வானதிராயபுரம் ஊராட்சி அமைந்துள்ளது.  வானதிராயபுரம் அடுத்த ஊராட்சி கல்லுகுழி கிராமத்திலிருந்து நெய்வேலி டவுன்ஷிப் செல்லும் சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக வடலூர் இருந்து கல்லுக்குழி வழியாக நெய்வேலி டவுன்ஷிப் பகுதிக்கு பொது மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், என்எல்சி நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பொது மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இச்சாலை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், என்எல்சி நிறுவனம் சுரங்கம் விரிவாக்க பணிக்காக கல்லுக் குழியிலிருந்து டவுன்ஷிப் செல்லும் சாலையை திடீரென்று ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோன்றியதால் சாலை துண்டிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து அப்பகுதி மக்கள் என்எல்சி சுரங்கம் 1ஏ அருகில் ஐம்பதுக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி என்எல்சி ஜேசிபி வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் கல்லு குழியிலிருந்து டவுன்ஷிப் செல்லும் சாலை நீண்ட காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது என்எல்சி அதிகாரிகள் திடீரென்று எவ்வித முன்னறிவிப்பின்றி இச்சாலையை துண்டித்ததால் பொதுமக்கள் மாணவ மாணவிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். மேலும் எங்கள் பகுதியில் யாரேனும் உயிரிழந்தால் அவர்களின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு இந்தப் பாதையை தான் நாங்கள் பயன்படுத்தி வந்தோம். தற்போது மாற்று பாதையில் செல்ல சாலை வசதி இல்லாததால் ஏரி வழியாக நீண்ட தூரம் சென்று தான் நெய்வேலி டவுன்ஷிப் செல்ல முடியும். குறிப்பாக மழைக்காலங்களில் அப்பகுதியில் மழைநீர் தேங்கி நின்றால் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே நாங்கள் வழக்கமாக பயன்படுத்தும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.