சாதி வெறுப்பு தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி, செப்.8- கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்திற்குட்பட்ட கருத்தலாக்குறிச்சி மற்றும் தகரை கிராமங்கள். விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியின் போது பட்டியலின பள்ளி சிறுவர்கள் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று பொது ஏரியில் கரைத்தார்கள் என்பதற்காக ஆதிக்க சாதி வெறியர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்கள் மீது கீழ்குப்பம், சின்னசேலம் காவல் நிலையங்களில் கொலை முயற்சி என பொய் வழக்கு போட்டுள்ளனர். மேலும், 4பேரை கைது செய்து வேறு மாவட்ட சிறைகளில் வைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு எந்த வகையிலும் சம்பந்தமே இல்லாத, வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருக்கும் இளைஞர்களையும் இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ள பட்டியலின இளைஞர்களை நிபந்தனை இன்றி விடுவிக்க கோரியும், கலவரத்தை தூண்டும் வகையில் நடந்து கொண்ட சாதி ஆதிக்க சக்திகளை கைது செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சின்னசேலம் வட்டச் செயலாளர் டி.மாரிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எம்.ஜெயசீலன், மாவட்டச் செயலாளர் டி. எம்.ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், பி.சுப்பிரமணியன், வே.ஏழுமலை, மாவட்ட குழு உறுப்பினர்கள் டி.எஸ்.மோகன், வை.பழனி, மு.சிவகுமார் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். வட்டக்குழு உறுப்பினர்கள் பி.பழனி, பாதிக்கப் பட்ட கிராமத்திலிருந்து பொதுமக்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.