பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்திடுக
புதுச்சேரி காவல்துறைக்கு மாதர் சங்கம் வலியுறுத்தல்
புதுச்சேரி, ஆக.10- பெண்கள் மீதான தாக்குதல்களை தடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் புதுச்சேரி காவல்துறையை வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் முனி யம்மாள், செயலாளர் இளவரசி மற்றும் நிர்வாகிகள் சத்தியா, சிவசங்கரி, அன்பரசி ஜூலியட், ஜானகி ஆகியோர் புதுச்சேரி காவல்துறை இயக்குநர் ஷாலினியை இது குறித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரியில் பெண் குழந்தைகள், சிறுமி கள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. பள்ளிகளிலும் பாலியல் துன்புறுத்தல்கள் என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சுற்றுலா துறையை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் விடுமுறை நாட்களில்வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வரும் இளைஞர்கள் கஞ்சா மற்றும் போதை பொருள்களை பயன்படுத்துவதற்காக சாதகமான சூழல் இருப்பதாக கருதி நிறைய பேர் வருகின்றனர். இவர்களை கவர்வதற்காக முக்கிய வீதிகளில் உள்ள வீடுகள் கூட அனுமதி இன்றி விடுதிகளாக மாற்றப்பட்டு கலாச்சார சீர்கேடுகள் நடை பெறுகின்றது. இதனால் அப்பகுதி வாழ் குடியிருப்பு வாசிகள் நிம்மதி இன்றி அச்சறுத்தலுடன் வாழ்கின்றனர். இதனால் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி ரயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டி ருந்த பெண்ணின் மீது பாலியல் சீண்டல் என்பது அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் கஞ்சா, போதை கும்பல் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆகையால், புதுச்சேரி காவல்துறை அதி காரிகள் ஆய்வு செய்து, உரிய நட வடிக்கை எடுத்து பெண்களுக்கும், பொது மக்களுக்கான பாதுகாப்பை உத்திர வாதப்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.