பண்ணந்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் கர்ப்பிணிகள் ஏமாற்றம்
கிருஷ்ணகிரி, ஆக. 22 - கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் பண்ணந்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். வியாழக்கிழமை தோறும் பிரசவம், பரிசோதனை, ஸ்கேன் எடுத்தல் மற்றும் பிற மருத்துவ சேவைகள் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அருகிலுள்ள பல கிராமங்களிலிருந்தும் ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் இங்கு வந்து மருத்துவ சேவைகளைப் பெற்று செல்கின்றனர். இந்நிலையில் கடந்த வியாழன் மருத்துவர்கள் இல்லாததால் பல கர்ப்பிணிப் பெண்கள் வந்து ஏமாற்றத்துடனும் அவதியுடனும் திரும்பிச் சென்றுள்ளனர். விசாரித்ததில் மருத்துவமனை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மருத்து வர்கள் சென்றுவிட்டதாக சாதாரணமாகக் கூறப்பட்டுள்ளது. இனி வரும் வியாழக்கிழமைகளில் இதுபோன்ற ஏமாற்றநிலை ஏற்படக்கூடாது, முன்னறி விப்பு செய்யவேண்டும் அல்லது மருத்து வர்கள் இருந்து மருத்துவம் பார்க்க ஏற்பாடு செய்யவேண்டும் என பெண்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, ஆக.22- செம்மஞ்சேரி அரசு மேல்நிலை பள்ளியில் 960க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். வியாழனன்று இந்த பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் பரவியது. இதுபற்றி பள்ளி நிர்வாகம், பள்ளி கல்வித்துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தது. போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுவதும் சோதனை செய்தனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால், இது வெறும் புரளி என தெரியவந்தது.